வியாழன், 31 ஜூலை, 2014

நட்வர் சிங் :சோனியாவை பிரதமர் ஆகாமல் தடுத்து ராகுல் ! கொலை அச்சுறுத்தல் ?

மன்மோகன்சிங் தலைமையிலான முதலாவது ஐந்தாண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர், காங்கிரஸ் மூத்த தலைவர் நட்வர்சிங். உணவுக்கு எண்ணெய் திட்ட ஊழலில் சிக்கியதால், இவர் பதவி விலகினார். அப்போதிருந்து அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கி இருக்கிறார். தனது அரசியல் அனுபவங்களை அவர் ‘ஒன் லைப் இஸ் நாட் எனாப்’ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதி உள்ளார்.;இந்நிலையில், நட்வர்சிங் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:–கடந்த 2004–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஆட்சியைப் பிடித்தபோது, சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார்.
பிரதமர் பதவியை ஏற்க விடாமல், தனது உள்மன குரல் தடுப்பதாக அப்போது அவர் கூறினார்.ஆனால், உண்மையான காரணம், அவர் பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்று அவருடைய மகன் ராகுல் காந்தி தடுத்ததுதான். அந்த பதவியை ஏற்றால், சோனியாவும் கொல்லப்படுவார் என்று ராகுல் காந்தி பயந்தார்.>எனவே, சோனியா பிரதமர் ஆவதைத் தடுக்க எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதன்படி, பிரதமர் பதவியை நிராகரிக்கும்படி, சோனியாவுக்கு அவர் 24 மணி நேர ‘கெடு’ விதித்தார். அதனால்தான், பிரதமர் பதவியை சோனியா நிராகரித்தார்.

பின்னர், மன்மோகன்சிங்கை பிரதமர் ஆக்க முடிவு செய்யப்பட்டது. அதை கேள்விப்பட்டவுடன், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் கடும் கோபம் அடைந்தார். ராம்விலாஸ் பஸ்வானும் அதிருப்தி அடைந்தார். அவர்களை சமாதானப்படுத்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த விஷயங்களை எல்லாம் நான் எனது சுயசரிதையில் எழுதி இருப்பதை சோனியா காந்தி தெரிந்து கொண்டார். எனவே, கடந்த மே 7–ந் தேதி, சோனியாவும், பிரியங்காவும் எனது வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தனர். இந்த விஷயங்களை சுயசரிதையில் இருந்து எடுத்து விடுமாறு கேட்டுக்கொண்டனர்.

மேலும், என்னை தவறாக நடத்தியதற்காக, என்னிடம் சோனியா மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்போது என்னை அவர் தழுவிக்கொண்டார். என்னை தனது நெருங்கிய நண்பர் என்றும், ராகுல் மற்றும் பிரியங்காவிடம் சொல்லாத விஷயங்களைக் கூட என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, மன்மோகன்சிங், சுமன் துபே ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, அரசு கோப்புகள், சோனியாவின் பார்வைக்கு செல்வது வழக்கம். உயர் அதிகாரியான புலோக் சாட்டர்ஜிதான் அந்த கோப்புகளை எடுத்துச் செல்வார். இது மற்ற மந்திரிகளுக்கும் தெரியும்.

கடந்த 1991–ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு, காங்கிரஸ் தலைவராகவும், பிரதமராகவும் அப்போதைய துணை ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவை நியமிக்கவே சோனியா காந்தி முதலில் விரும்பினார்.

அதற்காக நானும், அருணா ஆசிப் அலியும் சங்கர் தயாள் சர்மாவிடம் தூதர்களாக அனுப்பப்பட்டோம். ஆனால், சர்மா அந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார். பிறகுதான், நரசிம்மராவை பிரதமர் ஆக்க முடிவு செய்யப்பட்டது.

நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அவருக்கும், சோனியாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை. இவ்வாறு நட்வர்சிங் கூறினார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக