செவ்வாய், 15 ஜூலை, 2014

அத்தியூர் விஜயா மரணம் ! புதுவை போலீசாரால் பாலியல் சித்ரவதை அனுபவித்த பெண் போராளி !

செஞ்சியை அடுத்த அத்தியூரை சேர்ந்தவர் விஜயா, பழங்குடியின பெண்.
புதுவையில் நடந்த ஒரு கொள்ளையில் விஜயாவின் பெரியப்பா மகன் வெள்ளையன் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வந்ததையடுத்து 1993–ம் ஆண்டு புதுவை போலீசார் அங்கு விசாரிப்பதற்காக சென்றனர். அப்போது போலீசார் தன்னை கற்பழித்ததாக விஜயா புகார் கூறினார். இந்த சம்பவம் புதுவை மற்றும் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், புதுவை பெரியக்கடை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நல்லாம்பாபு மற்றும் போலீசார் ராஜாராமன், சசிக்குமார், பத்மநாபன், முனுசாமி, சுப்புராயன் ஆகியோர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர். விழுப்புரம் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 11–8–2006–ல் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட புதுவை போலீசார் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


புதுவை போலீசார் தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். 6 போலீசாரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து கடந்த 19–9–2008 அன்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. 17 வயதில் அத்தியூர் விஜயாவுக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்துக்கு பிறகு அவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தற்போது 38 வயதடைந்த அத்தியூர் விஜயா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஜயா நேற்று இரவு இறந்து போனார்.maalaimalar.com

நீதிக்காக நீண்ட பெரும்போராட்டம் - முடிவில் மரணம்< தனது 17வது வயதில் (21 ஆண்டுகளுக்கு முன்) ஆறு புதுச்சேரி போலீஸ்காரர்களால் வன்புணர்வுக்கு ஆளாகி, அதன் பின்னர் பல ஆண்டுகள் மனஉறுதியுடன் நீதிக்காகப் போராடிய, இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த “அத்தியூர் விஜயா”, 2 தினங்கள் முன்பு இறந்து போனார். 38 வயதான அவர், கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்ததாகத் தெரிகிறது.< 1996-ல் ஷெட்யூல்ட் பழங்குடியினர் பாதுகாப்பு இயக்கத்தை (Scheduled Tribe Protection Movement)தொடங்கிய பிரபா கல்விமணி, விஜயா பல ஆண்டுகளாக, மனரீதியாக அனுபவித்த பெரும் வேதனையை வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.


விசாரணை என்ற பெயரில், விஜயாவையும் அவரது பெற்றோரையும் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு கூட்டிச்செல்கையில், வழியில் வெள்ளாமை என்ற கிராமத்தில், ஆறு காவலர்கள் விஜயாவை வன்புணர்ந்துள்ளனர். அடுத்த நாள், ஆனந்தபுரம் காவல் நிலையத்தில், விஜயாவின் தந்தை அக்காவலர்கள் பேரில் கொடுத்த புகாரை சினிமாவில் வரும் காட்சி போல ஏற்க மறுத்துள்ளனர்.....

ஒரு பெரிய போராட்டத்திற்குப் பின்னர், விழுப்புரம் ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட்டு, விஜயா காவலர்களால் வன்புணரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தமிழக அரசு விஜயாவுக்கு ரூ 25000 ஈடாக வழங்கியது. தேசிய மனித உரிமை கமிஷன், விஜயாவுக்கு 2 லட்சம் வழங்குமாறு புதுச்சேரி அரசுக்கு ஆணையிட்டது. ஒரு வழியாக, ஜூலை1997-ல் CB-CID அந்த 6 காவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது!



பணத்தின் மூலம், outside of court settlementக்கு, குற்றம் சாட்டப்பட்ட காவலர் ஆறு பேரும் செய்த முயற்சி, விஜயாவின் மன உறுதிக்கு முன் தோற்றுப்போனது. 13 ஆண்டுகால பெரும் போராட்டத்தின் முடிவில், ஆகஸ்டு 2006-ல் நீதிபதி ரத்தன்ராஜ் ஆறு காவலர்களுக்கும் வன்புணர்வு குற்றத்துக்காக, பணி நீக்கமும், ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து, மூன்றே மாதங்களில் பெயிலில் வெளி வந்து விட்டனர்.

குறிப்பிட்ட கால அவகாசத்தில் விஜயாவின் தரப்பு (காவலரின்) மேல் முறையீட்டுக்கான எதிர்ப்பை பதிவு செய்யாததை காரணம் காட்டி, செப் 2008-ல் சென்னை உயர்நீதி மன்றம் அவர்களுக்கு விடுதலை வழங்கியது! இத்தீர்ப்புக்குப்பின் விஜயா மிகப்பெரிய மனச்சோர்வுக்கும், மனவேதனைக்கும் ஆளானார் என்று கல்விமணி கூறுகிறார். ஒரு சாதாரண குடிமகனின், முக்கியமாக நீதியின் தேவையை பெருமளவு வேண்டியிருக்கும் சாராரின், நம்பிக்கைக்கு இத்தீர்ப்பு பெரும் பாதகத்தை விளைவித்திருப்பதாகவும் கல்விமணி தெரிவித்துள்ளார்.

தீர்ப்புக்குப் பிறகு, விஜயாவின் குடும்பத்தினரும், பிற உறவினரும், அவரை ஒதுக்கி விட்டனர் இளவயதினருக்கான சமூக விழிப்புணர்வு அமைப்பைச் (Social Awareness Society for Youths) சேர்ந்த முருகப்பன், விஜயாவுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டிருப்பின், வறுமையால் ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்கு ஆளாகி, குறைந்த வயதில் இறந்திருக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறுகிறார்.

நன்றி: தி இந்து, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக