செவ்வாய், 15 ஜூலை, 2014

வீடுதோறும் சினிமா' புதிய நிறுவனம் தொடங்கினார் இயக்குநர் சேரன்

டி.வி.டி., டி.டி.எச், இணையதளம், செட்ஆஃப் பாக்ஸ் உள்ளிட்ட வழிகளில் வீடுதோறும் சினிமாவை எடுத்துச் செல்லும் "சினிமா டு ஹோம்' என்ற புதிய நிறுவனத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார்.
 இந்நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநரும், "சினிமா டு ஹோம்' நிறுவனத்தின் நிறுவனருமான சேரன் பேசியது:
 தொழில்நுட்ப வளர்ச்சி, மக்களின் ரசனை மாற்றம் உள்ளிட்ட பலவற்றால் சினிமா தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. நட்சத்திர நடிகர்களின் படங்களைத் தவிர்த்து மற்ற படங்களுக்கு திரையரங்குகள் இல்லாத நிலை அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ளது. சினிமாவை நம்பி பயணம் செய்பவர்களில் இன்னும் நிறைய பேர் கரை சேரவில்லை. இருந்தாலும் அடுத்த பயணத்துக்கான படகுகளை தினம் தினம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த சினிமாவின் நிலைமை தற்போது மாறியுள்ளது. இதற்கு நாளுக்கு நாள் மாறி வரும் மக்களின் ரசனை மாற்றங்கள், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி ஆகியவையே காரணம். இதனால் கோடம்பாக்கத்தில் கனவுகளுடன் திரிந்து கொண்டிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
 நான் இயக்கியுள்ள ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று 8 மாதங்கள் ஆகியும் வெளியிட முடியாத நிலை உள்ளது. அப்படத்தை இன்றைய சூழலில் திரைக்கு கொண்டு வந்தால், அப்படத்தால் நான் பெற்ற கடனை அடைக்க முடியாது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவுதான் இது.
 நண்பர்களின் துணையுடன் பலவிதங்களில் ஆராய்ந்த பின்னர் முடியும் என்கிற நிலையில் இந்நிறுவனம் உதயமாகியுள்ளது. நடப்பாண்டில் தணிக்கைச் சான்றிதழ் பெற்ற படங்களின் எண்ணிக்கை 298, ஆனால் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 143, வெளிவராத படங்கள் 155 ஆகும். இதுதான் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலை. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இது திரையரங்குகளுக்கு எதிரான நிறுவனம் கிடையாது. திரையரங்குகள் மூலம் படம் வெளிவரும் அதே சமயத்தில் இந்நிறுவனம் மூலமும் படம் வெளிவரும். திரையரங்குகளின் நலனை இந்நிறுவனம் ஒரு போதும் பாதிக்காது.
 சிறிய திரைப்படங்களை குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட்டு அதே நாளில் மற்ற தளங்களில் எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதே "சினிமா டு ஹோம்' நிறுவனத்தின் நோக்கம். இந்நிறுவனம் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மாற்று வியாபாரத் தளமாக இயங்கும். தரமான படங்களை இந்நிறுவனத்தின் மூலம் வெளியே கொண்டு வருவோம். தவறான முறையில் படங்களை பதிவிறக்கம் செய்வோர், பதிவு செய்வோர் ஆகியோரைக் கண்காணிக்க குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம். இதில் 7,000 தொழிலாளர்கள் பணிபுரிய இருக்கிறார்கள் என்றார் சேரன்.
 விழாவில் சேரனின் இந்த புது முயற்சிக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், சீமான், அமீர் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துப் பேசினர் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக