செவ்வாய், 22 ஜூலை, 2014

ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவனின் மனக்குமுறல் !

சைலஜா சொன்ன வாசுதேவனைச் சந்திக்க நாமும் புறப்பட்டோம். அவர் மைசூரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தில் தனிமையில் வசித்து வருகிறார். அவரிடம் பேசியபோது, ''4.4.2001 ஜூனியர் விகடன் இதழில் 'சிஸ்டர் பார்வை இந்த அண்ணன் மீது படுமா?’ என்ற தலைப்பில் என்னுடைய பேட்டி வந்திருக்கிறது'' என்று அந்த இதழை எடுத்து ஞாபகப்படுத்தியபடி நம்மிடம் பேசினார்.
''என் அப்பா ஜெயராமனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜெயம்மா. அவரது மகன்தான் நான். என் அப்பாவின் இரண்டாவது மனைவி சந்தியா. அவருக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா என இரண்டு பிள்ளைகள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், கடந்த வாரம் கன்னட டி.வி-களில் எனக்கு இன்னொரு தங்கை சைலஜா இருப்பதாக ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தார்கள். அதை முதலில் நானும் நம்பாமல் சைலஜாவைத் தொடர்புகொண்டு பேசினேன். அவர் குடும்பத்தோடு என் வீட்டுக்கு வந்தார். எல்லா உண்மைகளையும் சொன்னார். அவர் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, நிச்சயம் அவரும் என் தங்கைதான் என்பதை உணர்ந்துகொண்டேன். யாருக்கும் தெரியாத எங்கள் குடும்ப வரலாறுகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
சைலஜாவும் நிச்சயம் என் தங்கைதான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
என் தங்கை ஜெயலலிதா எங்களைச் சந்தித்தால் எல்லா உண்மைகளும் தெரியவரும். என் தங்கைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைக்கக் காரணம், எங்களுக்கு மைசூரில் ஜெயா விலாஸ், லலித விலாஸ் என்ற பெயரில் வீடுகள் இருந்தன. அதன் பெயரைத்தான் என் தங்கைக்கு அப்பா ஜெயலலிதா என்று சூட்டினார். நான் இப்போது மகனை, மனைவியை இழந்து தனிமையில் தவிக்கிறேன். எல்லோருக்கும் என் தங்கை நன்மைகளை செய்கிறார் என்பதை கேள்விப்படும்போது, மிகவும் பெருமையாக இருக்கும். எனக்கும் வயதாகிவிட்டது. நான் சாவதற்குள் என் தங்கையைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
என்னுடைய நிலையில்தான் என் இன்​னொரு தங்கை சைலஜாவும் இருக்கிறார். எங்கள் இருவரையும் தாயுள்ளத்தோடு ஜெயலலிதா சந்திக்க முன்வர வேண்டும். அன்பு என்ற ஒரு விஷயத்துக்காகத்தான் நானும் சைலஜாவும் ஏங்குகிறோம். என் தங்கை ஜெயலலிதாவின் அன்பு கிடைக்கும் என்றும் நம்புகிறோம்!'' என்று கலங்கினார். விகடன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக