செவ்வாய், 1 ஜூலை, 2014

சமசீர் கல்வியை ஒழிக்க மீண்டும் மீண்டும் பார்பனர்களும் சுப்பர் வர்க்கமும் ஓயாத சதி ! டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்?

சமச்சீர் கல்வி“Most Himalayan villages lie in valleys, where there are small streams, some farmland, and protection from the biting winds than come through the mountain passes in winter. The houses are usually made of large stones and have sloping slate roofs so the heavy monsoon rain can run off easily. During the sunny months, the roofs are often covered with pumpkins, left there to ripen in the sun.”
- Those Three Bears by Ruskin Bond – an excerpt
படம் : நன்றி தி ஹிந்து
மேலே நீங்கள் படித்தது தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கான 6-ம் வகுப்பு ஆங்கில பாடநூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதி.
தமிழ்நாட்டில் வாழும் 6-ம் வகுப்பு மாணவி ஒருத்தி இந்த பத்தியை படித்து, உள்வாங்கி அது சொல்ல வருவதை புரிந்து கொள்ளவும், திருப்பி ஒப்பிக்கவும் முடிந்தால் அவளது ஆங்கில அறிவின் தரத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள்? கல்லூரியிலோ, மேல் படிப்பிலோ, எதிர்கால வேலைச் சூழலிலோ ஆங்கிலத்தில் பணி செய்ய அந்த மாணவிக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?
சமச்சீர் கல்வியில் 6-ம் வகுப்பில் இந்த தரத்திலான ஆங்கில பாடங்களை படிக்கும் மாணவர்களின் ஆங்கில அறிவு நவீன வாழ்க்கைக்கு தேவைப்படுமளவுக்கு இல்லை என்று கவலைப்படுகிறார்கள் லண்டன் தேம்ஸ் நதிக்கரையைச் சேர்ந்த கனவான்கள். இங்கே அவர்கள் தனியார் பள்ளி முதலாளிகளாக அறியப்படுகிறார்கள்.
சென்னை கல்வி ஆய்வு மற்றும் பயிற்சிக்கான டான் பாஸ்கோ மையம் நடத்திய ஆய்வு சமச்சீர் கல்வி புத்தகங்களில் ஆங்கில பாடத்தின் தரத்தை பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் கேள்விக்குள்ளாக்கியதாக சொல்கிறது. ஒருவேளை டான் பாஸ்கோ தனது ஆய்வுக்கு தேர்ந்தெடுத்த பெற்றோர் தமது வாரிசுகளை ஷேக்ஸ்பியர் அல்லது ஷெல்லியின் நேரடி வாரிசுகளாக உருவாக்கி ஆங்கில மொழியின் 21-ம் நூற்றாண்டு அமர காவியங்களை படைப்பற்கு தயாரிக்க விரும்புகிறார்கள் போலும்.

டான் பாஸ்கோ
டான் பாஸ்கோ மற்றும் பிற தனியார் கல்வி வியாபாரிகளின் நோக்கம் மாணவர்களை எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு தயாரிப்பதே!
மாணவர்கள், பெற்றோர், பள்ளி தலைவர்கள் என மொத்தம் 344 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதிலும், சுமையை குறைப்பதிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பாராட்டப்பட்டாலும், எதிர்கால போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பதில் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை. இதிலிருந்து டான் பாஸ்கோ மற்றும் பிற தனியார் கல்வி வியாபாரிகளின் நோக்கம் மாணவர்களை எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு தயாரிப்பதே என்பது தெளிவாகிறது.
98% பேர், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் மிகவும் சிறந்தது என்று கருத்து தெரிவித்ததாக டான் பாஸ்கோ மையத்தின் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் தொடர்பாக ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அடுத்த நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆகிய நாளிதழ்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியானது.
“ஒவ்வொரு பிரிவிலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ பாடத்திட்டம் சிறந்தது என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்கிறார் இந்த ஆய்வை நடத்திய டான் பாஸ்கோ பள்ளியின் ரெக்டரும் செயலருமான ஃபாதர் ஜான் அலெக்சாண்டர். டான் பாஸ்கோ பள்ளி சமீபத்தில் தனது வளாகத்தில் ஒரு சி.பி.எஸ்.ஈ பள்ளியை ஆரம்பித்திருக்கிறது என்பதையும் அதனால், பெற்றோரை அந்த திசையில் திருப்பி விடும் தேவை தமக்கு இருப்பதையும் குறிப்பிட ஃபாதர் வசதியாக மறந்து விட்டிருக்கிறார்.
டான் பாஸ்கோ கலந்துரையாடல்
“சமச்சீர் கல்வி : சமமானதா, நீர்த்து போக வைப்பதா?” – கலந்துரையாடல். டான் பாஸ்கோவின் லாப வேட்டைக்கான விளம்பர தந்திரம்
ஆசிரியர் தரம் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல், கட்டுமானத்தை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தை இணைத்தல், பாடத்திட்டத்தோடு இணைந்த நடவடிக்கைகள், வாழ்க்கையின் பல அம்சங்களுக்கு மாணவர்களை பழக்கப்படுத்துதல், வாழ்க்கை-திறன் பயிற்சி அளித்தல் “இவைதான் தனியார் பள்ளிகளை அரசுப் பள்ளிகளிலிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன” என்று தனது சந்தைப்படுத்தலை வெளிப்படையாக செய்கிறார்.
டான் பாஸ்கோ அல்லது பிற மேட்டுக்குடி தனியார் பள்ளிகளைப் போல மாதத்துக்கு ஒரு நாள் “வில்லேஜ் விசிட்”, அல்லது , “ஸ்லம் விசிட்” என்பதுதான் டான் பாஸ்கோ போன்ற கல்வியாளர்களுக்கு தெரிந்த வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் பன்முகத்தன்மையாம்.
உண்மையில், அரசுப் பள்ளியில் பல்வேறு வர்க்கப் பிரிவு மாணவர்களோடு படிப்பதுதான் ஒரு மாணவனுக்கு வாழ்க்கையின் பன்முகத்தன்மையை உணர்த்தி அவனை சிறந்த சமூக மனிதனாக உருவாக்க முடியும். மற்றபடி ஆசிரியர் தரம்/பொறுப்புணர்வு, பள்ளி உள்கட்டுமானம், தொழில்நுட்பம் போன்றவை போராடும் பெற்றோர் சங்கங்கள் மூலம் அரசு பள்ளிகளிள் சாதிக்கப்படக் கூடியவையே. தனியார் கட்டணக் கொள்ளைதான் அவற்றை சாதிக்கும் என்று பிரச்சாரம் செய்வது மோசடித்தனம், அதை நம்புவது முட்டாள்தனம்.
வாசுதேவாச்சாரியார்
வாசுதேவாச்சாரியார்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்ரீ அகோபில மட ஓரியன்டல் உயர்நிலைப்  பள்ளியின் கௌரவ செயலரும் பொருளாளருமான டாக்டர் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. ஆனால், தினசரி வாழ்ககையில் அது சாத்தியமா?” என்று கேட்டிருக்கிறார். லண்டன் தேம்ஸ் நதிக்கரை கனவான்களின் உள்ளூர் ஏஜெண்டுகளான இவர்கள் கங்கைக் கரை சனாதிகளாவார்கள்.
“சமஸ்கிருத மற்றும் ஆங்கிலக் கல்வி ஒன்றுக்கொன்று சமமானவை இல்லை. அப்படியிருக்க அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று அவர் சந்தேகப்படுகிறார். என்னடா தேம்ஸ் நதிக்கு எதிராக கங்கை முழங்குகிறதே என சந்தேகமா? சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பிறகு ஓரியன்டல் பாடத்திட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது. பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதியினர் ஆங்கிலம் மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து, முன்னுக்கு வரவேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்கள். அதேநேரம் இவர்களில் சிலர் அந்த முன்னுக்க்கு வரும் முன்னேற்றத்தின் சித்தாந்தமாக பார்ப்பனியம் இருக்க வேண்டுமென்று போராடுபவர்கள்.
அதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அம்பானியின் இணக்கம். அந்த வகையில் பாரதப்பண்பாட்டின் சம்ஸ்கிருதத்தை புறக்கணிக்கும் சமச்சீர் கல்வி தேவையா என்று சீறுகிறார் இந்த பண்டிதர். சமூக வாழ்க்கையிலேயே சமத்துவத்தை மறுப்பவர்கள் கல்வியில் மட்டும் சமத்துவத்தை ஏற்பார்களா என்ன?
பெருமளவு தனியார் பள்ளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட (ஒரு சில கிராம மற்றும் அரசுப் பள்ளிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன) இந்த ஆய்வில் பெற்றோரின் சுயநலமும் அறியாமை கலந்த மேட்டிமைத்தனமும் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. 75% மாணவர்களும் ஆசிரியர்களும் 75% சமச்சீர் கல்வி சிந்தனையை ஊக்குவிக்கிறது கருத்து கூறியிருக்க, 42% பெற்றோர் அப்படி கருதவில்லையாம்.
இந்த ஆய்வை டான் பாஸ்கோவுடன் இணைந்து நடத்தியது டேலன்ட்-ஈஸ் என்ற திறன் வளர்ச்சி (தனியார்) நிறுவனம். தங்களுடைய வணிக நோக்கத்துக்காக ஒரு ஆய்வை நடத்தி, தங்களது வருமானத்தை பெருக்கும் வகையில் பதில்களைப் பெற்று, அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடத்தி, அதை நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக கவர் செய்ய வைத்த டான் பாஸ்கோ பள்ளியை கல்வியாளர்கள் என்று சொல்வதா கல்வி மோசடியாளர்கள் என்று சொல்வதா? சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும், பார்ப்பனியத்தின் முகவர்களும் ஒன்றாக குரல் கொடுக்கிறார்கள். சமத்துவம் வேண்டுவோர் இரண்டையும் வீழ்த்த வேண்டும். vinavu,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக