வெள்ளி, 4 ஜூலை, 2014

உயிரிழந்தவர்களை மீட்கும் கொடுமையில் ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவையா?'

'சென்னையில், 11 மாடி கட்டடம் விழுந்து, ஒவ்வொரு நாளும், உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக, மீட்கப்பட்டு வருகிற கொடுமையில், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து வைத்துள்ள, ப்ளக்ஸ் போர்டு விழாக்கோலம் தேவைதானா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு, பக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில், சிறு இடம் கூட பாக்கியில்லாமல், வரிசையாக, அ.தி.மு.க., அமைச்சர்கள் மிகப் பெரிய ப்ளக்ஸ் போர்டுகளில், முதல்வரை வானளாவப் புகழ்ந்து வைத்துள்ளனர். சாலையில் செல்வோர், அதில் மோதியவாறு சென்று கொண்டிருக்கின்றனர். அந்த ப்ளக்ஸ் போர்டில் ஒன்றாக, சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு, கொத்தமல்லியின் விலையை உயர்த்திய சாதனைத் தாயே என, ஒன்றை வைக்கலாம். போரூர் பகுதியில் 11 மாடிக் கட்டடம் விழுந்து, ஒவ்வொரு நாளும், உயிரிழந்தவர்களின் பிணங்கள் ஒவ்வொன்றாக, மீட்கப்பட்டு வருகிற கொடுமையில், இந்த விழாக்கோலமும், விளம்பரமும் தேவை தானா?

 முதல்வரை குறை கூறும் செய்திகளை, வெளியிட்டால் உடனடியாக, அவர்கள் மீது வழக்கு தொடர்வது, தொடர்கதையாக நீண்டு வருகிறது. அந்த வகையில், 'தினமலர்' நாளிதழில், 'அவலம்: இடிந்த கட்டடத்திற்காக, விதிகளை தளர்த்தி, 2 அரசாணைகள்; சி.எம்.டி.ஏ., மீது தவறில்லை என்கிறார் முதல்வர் ஜெ.' என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டதற்காக, 'இது தமிழக முதல்வருக்கு எதிரான, அவதூறான செய்தி. விதிகள் தளர்த்தப்பட்டு, நில உரிமையாளருக்கு சாதகமாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, கூறப்படுவதில் உண்மையில்லை; அது பொய்யானது. இரண்டு அரசாணைகளும், கட்டடத்தின் கட்டுமானத்துக்கோ, கட்டடத்தின் உறுதித் தன்மைக்கோ விதிகளைத் தளர்த்தவில்லை. நில விரிவாக்கம் தொடர்பாகத்தான், அந்த அரசாணைகளில் கூறப்பட்டுள்ளது' என, முதல்வர் சார்பில், வழக்கறிஞர் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், மனுதாரர் தெரிவித்தவாறு, கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்தோ, கட்டுமானம் குறித்தோ, 'தினமலர்' செய்தியில், விமர்சிக்கவில்லை. அதற்கான அரசாணை பிறப்பித்ததாகக் கூறவில்லை என, 'தினமலர்' எழுதியதோடு, அதற்கான விளக்கத்தையும் தந்துள்ளது. இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக