புதன், 30 ஜூலை, 2014

இனி உங்களுக்கு ரயில் பயணம் கிடையாது ? ஜாலிலோ பேருந்து காஷ்மிரு டு கன்யாகுமரி !

மோடி வந்தால் வளர்ச்சி வரும் என்று இணையத்தில் இடைவிடாமல் கரடியாய் கத்திய கோயிந்துகள் விரக்தியில் ஓடி ஒளிந்து கொள்ளும் வகையில் நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு.< நடுத்தர வர்க்கத்தை குறி வைத்து அடுத்த தாக்குதலை துவக்கியிருக்கிறது, மோடி அரசு அடுத்த 5 ஆண்டுகளில் எக்ஸ்பிரஸ், மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளை முழுவதுமாக நீக்கி விட்டு அவற்றின் இடத்தில் மூன்றடுக்கு குளிர்பதன பெட்டியை பொருத்தப் போவதாக ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.
அதன்படி, தென்னக ரயில்வேயின் பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே டிவிஷனில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் தயாரிப்பதை முழுமையாக நிறுத்தி விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மெல்ல மெல்ல உங்களை  பேருந்துகளில் பயணிக்க தூண்டுவோம்ல ? அப்பதய்ன் நம்ப வோல்வோ பென்ஸ் லேய்லாண்டு எல்லாம் கல்லா கட்டலாம்னே !
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மாற்றப்பட வேண்டிய நிலை வரும் போது அவை நீக்கப்பட்டு, குளிர்பதன பெட்டிகள் சேர்க்கப்படும்.
ரயில்வே துறையை நவீனப்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும், தேவையான நிதியை திரட்ட இந்த முடிவை மோடி அரசு எடுத்துள்ளது. இந்த நவீனப்படுத்தலில் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வசதிகளை ஒழித்துவிட்டு, பணக்காரர்களுக்கு மட்டும்தான் ரயில் பயணம் என்பதை மோடி கும்பல் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
அரசுக்குத் தேவையான நிதியை திரட்ட ‘முதலாளிகளுக்கு வரியை உயர்த்தினால் அவர்கள் எல்லாம் வரி ஏய்ப்பு செய்வார்கள், அல்லது வேறு நாட்டுக்கு ஓடிப் போய் விடுவார்கள், நாடு வளராது’ என்று கார்ப்பரேட் வரிச்சலுகைகளை நியாயப்படுத்துகிறார்கள் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்கள். உண்மைதான், எவ்வளவு சுமையை இறக்கினாலும், ரயில் பயணத்தை குறைத்துக் கொண்டு, அல்லது பயணிப்பதையே நிறுத்திக் கொண்டு அடங்கிப் போகும் நடுத்தர வர்க்கத்தை மோடி தலைமையில் பிழிந்து எடுக்கப் போகிறது ஆளும் வர்க்கம். வேண்டுமானால், ‘இந்தியா ராக்கெட் விட்டது, லார்ட்ஸ் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது’ என்று தேசப் பெருமிதத்தில் வயிற்றை நிரப்பிக் கொள்வது மட்டும்தான் நடுத்தரவர்க்கத்துக்கு எஞ்சியிருக்கும்.
இரண்டாம் வகுப்பு பெட்டிகளை ஒழித்துக் கட்டும் இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எர்ணாகுளம்-நிஜமுதீன்(டெல்லி) மங்களா எக்ஸ்பிரசில் ஒரு இரண்டாம் வகுப்பை பெட்டியை நீக்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த ரயிலில் ரூ 925 செலவில் 2-ம் வகுப்பில் டெல்லிக்கு பயணம் செய்தவர்கள் அதே பயணத்துக்கு ஏ.சி பெட்டியில் போக ரூ 2,370 செலவழிக்க வேண்டியிருக்கும்.
சென்ற ஞாயிற்றுக் கிழமை முதல் மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12617) எஸ்–2 பெட்டி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி–4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரயிலில் 2-ம் வகுப்பு பெட்டிகள் 11 ஆக இருந்தது 10 ஆக குறைந்து, ஏசி பெட்டிகள் 4 ஆக உயர்ந்திருக்கின்றன; 72 டிக்கெட்டுகள் ஏசி கட்டணத்துக்கு மாறியிருக்கின்றன. படிப்படியாக 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 0 ஆகி, 3 ஏசி பெட்டிகள் 14 ஆக மாற்றப்படும்.
அந்தப் பெட்டியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தட்கல் முறையில் மாற்று இடம் வழங்கப்படுகிறது. “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே பெட்டியில் இடம் ஒதுக்க முயற்சி செய்யப்படும்” என்று ஒரு அதிகாரி சமாதானம் கூறியிருக்கிறார். முன்பதிவு சுழற்சிக் காலம் (60 நாட்கள்) முடிவது வரை கூட பொறுக்காமல் மக்கள்மீது உடனடியாக தாக்குதலை இறக்கும் மோடியின் வேகம்தான் பன்னாட்டு/இந்திய முதலாளிகளின் விருப்பம்.
சென்னை எழும்பூரிலிருந்து மங்களூர் சென்டிரல் போகும் வண்டி எண் 16859-ல் எஸ்-7 என்ற பெட்டி ஒழித்துக் கட்டப்படுகிறது, மங்களூர் சென்டிரலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வண்டி எண் 16860ல் எஸ்-9 என்ற பெட்டி இனிமேல் இணைக்கப்படாது. அவற்றுக்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி-4 என்ற ஏசி சேர் கார் பெட்டி இணைக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் வண்டிகளில் இருந்து நீக்கப்படும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் நடு படுக்கையை அகற்றி விட்டு அவற்றை இருக்கை பயணிகள் மட்டும் செல்லும் ரயிலில் பயன்படுத்த போவதாக ரயில்வே கூறியிருக்கிறது.
மோடியின் வளர்ச்சி என்பது டாடாவுக்கும், அதானிக்கும், அம்பானிக்கும்தான், உழைக்கும் மக்கள் மீதும், நடுத்தர வர்க்கம் மீதும் அது பெரும் சுமையாக இறங்கும் என்பதை மறைத்து ‘ஆட்டோ ஓட்டுபவர்களும், இளநீர் வெட்டுபவர்களும், ஐ.டி துறையினரும் என சாதாரண மக்கள் பெருவாரியாக மோடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்‘ என நடுத்தர வர்க்க வாசகர்களை நம்பவைக்க முயன்ற கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி இப்போது ரயில் கட்டண உயர்வு குறித்தோ, 2-ம் வகுப்பு ஒழிப்பு என்ன சொல்வார்? வெப்ப மண்டல நாடான இந்தியாவில் இனி வெக்கையின்றி ஏசியில் ‘மக்கள்’ பயணம் செய்யலாம், வேர்வையின் கஷ்டங்கள் இல்லை என எழுதுவாரோ?
மேலும் ரயில் நிலையங்களில் ‘அங்கேயே கை கழுவி, வாய் கொப்பளித்து, ஏவ் என்று பெரும் ஏப்பம் விட்டு, அப்படியே ஒரு அழுக்குத் துண்டை விரித்து, சற்றே சாய்ந்து உறங்கும் மக்கள் நாம். தட்டுமுட்டுச் சாமான்கள் ஒரு பக்கம், உருகி ஓடும் பனிப்பாளத்திடையே மூக்கைத் தாக்கும் மீன்கூடைகள் ஒரு பக்கம், கட்டுக்கட்டாக வார மாத இதழ்கள் ஒரு பக்கம், சாக்கில் சுற்றிய இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஒரு பக்கம், இன்னுமா இவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்மை அதிசயிக்கவைக்கும் தகரப் பெட்டிகள் ஒரு பக்கம்’ என்றெல்லாம் இனி ‘பிளடி இந்தியாவை’ சலித்துக் கொண்டு அவர் எழுத வேண்டியதில்லை. ஏனெனில் இனி நம்மைப் போன்ற பரதேசிகளும், நடுத்தர வர்க்கமும் கூட ரயில்வே நிலையத்திற்கு போகவே மாட்டோம். உடை கலையாத கனவான்கள் மட்டும் வந்து போகுமிடமாக ரயில் நிலையங்கள் மாறிய பிறகு பத்ரி அவர்களின் கனவு ரயில் நிலையம் அமுலுக்கு வரும்.
மோடியின் ஆட்சியில் இத்தகைய சாதாரண மக்களை பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் புல்லட் ரயில்களில் அல்லது ஏசி பெட்டியில் பயணிக்கும் கனவான்களுக்கென, ஸ்பெசல் நடைபாதை, பூங்காக்கள், நட்சத்திர விடுதி ஓய்வறைகள், சிறு மல்டிபிளக்சுகள், ஷாப்பிங்மால்கள், கிளப்புகள், ரயில்களையே மாளிகைகளாக்கும் திட்டம் எல்லாம் அமல்படுத்தலாம். இதற்கெல்லாம் நிதி வேண்டுமென்றால் 2-ம் வகுப்பு படுக்கை வசதிகளை ஒழிக்க வேண்டும் என்பது சரிதானே?.
ஏ.சி பெட்டியில் போக வசதியற்ற உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் ஏசி பெட்டிகளுக்கு பின் இணைக்கப்பட்டுள்ள சாதாரண பெட்டிகளில் கூட்டமாக தொங்கிக் கொண்டே வருவது பணக்காரர்களின் கண்களில் படாமல் தவிர்க்க அவர்களுக்கென தனி நடைமேடையை ஸ்டேசனுக்கு வெளியே அமைக்கவும் மோடி அரசு ஏற்பாடு செய்து தரும்.
தப்பித் தவறி கனவான்களின் நடைபாதையில் சாதாரண மக்கள் வந்து விட்டால் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கும் ரயில்வே வழிகாட்டுகிறது. கடந்த 25-ம் தேதி மும்பை புறநகர் ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு எடுத்திருந்த 65 வயது பெண் பயணி ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியிருக்கிறார். பயணச் சீட்டை பரிசோதித்த பெண் பரிசோதகர்கள் இருவர் அவரை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று அபராதம் செலுத்துமாறு கூறியிருக்கின்றனர். தன்னிடம் ரூ 25 மட்டும் இருப்பதாக பயணி சொல்லவே, அவரது ஆடைகளை களைந்து சோதனையிட்டு அவமானப்படுத்தியிருக்கின்றனர்.
மேலும், சட்டங்களும், விதிமுறைகளும் உழைக்கும் மக்கள் மீது எவ்வளவு கறாராக அமல்படுத்தப்படும் என்பதற்கு டெல்லி போக்குவரத்துத் துறையும் வழிகாட்டுகிறது.
1973-ம் ஆண்டு ஒரு பயணிக்கு 15 பைசா சீட்டுக்கு பதிலாக 10 பைசா சீட்டு கொடுத்த பேருந்து நடத்துனர் ரன்வீர் சிங்-ஐ எதிர்த்து டெல்லி போக்குவரத்துக் கழகம் 40 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துனருக்கு ஆதரவாக பணியாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு உயர்நீதிமன்றத்தில் நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்றமும் பணியாளர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு சொன்னது. அதற்குள் ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்டிருந்த ரன்வீர் சிங்குக்கு முன் தேதியிட்ட ஊதியம், ஓய்வுக்கால சலுகைகள் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிர்வாகம்.
‘சட்டத்தை எல்லாம் ஸ்டிரிக்டா இம்ப்ளிமென்ட் பண்ணணும் சார்’ என்று டிராஃபிக்  ராமசாமிகள் பேசும் வீரம் இது போன்ற வயதான ஏழை பெண்களிடமும், ரன்வீர் சிங் போன்ற தொழிலாளர்களிடம் பாய்ச்சப்படுகிறது. இந்திய அரசுக்கு இயற்கை எரிவாயு எடுத்து தர காண்டிராக்ட் எடுத்து, பல மடங்கு விலை உயர்த்தி வாங்க பிளாக் மெயில் செய்யும் அம்பானி, அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற சதி செய்த டாடா, மிட்டல் போன்ற முதலாளிகளிடம் இந்த சட்டங்கள் செல்லுபடியாவதில்லை. மட்டுமல்ல, தேவைப்பட்டால் வளைந்து கொடுத்தோ இல்லை புதிதாக வேறு வடிவில் பிறந்தோ காப்பாற்றும்.
எந்த மக்களை ஓட்டுப் போட வைத்து ஆட்சிக்கு வருகிறார்களோ அந்த மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மாறாக காங்கிரசு, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காக ஆறுவழிச்சாலைகள், புல்லட் ரயில்கள், நவீன நகரங்கள் என்று திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொடுக்கின்றன.
ரயில் கட்டண உயர்வு, மானிய விலை சமையல் வாயு ரத்து, மாதம் தோறும் டீசல் விலை உயர்வு, சேவை வரி மூலம் மக்களை சுரண்டுதல் என்று அடுத்தடுத்து மோடி அரசு தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து போராடுவதைத் தவிர உழைக்கும் மக்களுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் வேறு வழியே இல்லை.
காவி கல்லுளிமங்கன்
இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கிடையாது என்பதை ஏற்கப் போகிறீர்களா? இல்லை மோடிக்கு எதிராக களம் இறங்குவீர்களா? vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக