வியாழன், 3 ஜூலை, 2014

சதானந்த கவுடா : ராஜ்யசபாவில் திமுக எம்பீக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் !

தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படாமல், நாட்டின் நலனுக்கான விஷயங்களில், தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து, தலைவர் கருணாநிதியிடம் சொல்லி, நல்ல முடிவெடுக்கப்படும்,'' என, ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவிடம், தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் உறுதியளித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் ஒதுக்கப்பட்டிருக்கும் சிறப்பு பெட்டியில், பொது பெட்டியைப் போல மற்றவர்களை பயணிக்க அனுமதிக்கின்றனர். அதனால், நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம்' என, கடந்த சில நாட்களாக, சென்னையில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த பிரச்னையை தீர்க்க, நேற்று முன்தினம் டில்லியில் ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்துப் பேசினார் தி.மு.க., ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி.
அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக, உடனே கவனிக்கிறேன் எனச் சொல்லி, சென்னையில் இருக்கும் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளருக்கு போனில் பேசி, பிரச்னையை தீர்க்க உத்தரவிட்டார் அமைச்சர் கவுடா.அதன்பின், தமிழகத்தில் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக, தெற்கு ரயில்வேயின் கீழ் திருநெல்வேலியை தலைமையகமாகக்கொண்டு, புதிய கோட்டம் அமைக்க உத்தரவிட வேண்டும்; திண்டுக்கல் - நாங்குநேரியில் ரயில்வே என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்து, அமைச்சர் சதானந்த கவுடாவுடன் பேசிக் கொண்டிருந்தார் கனிமொழி.

அப்போது, பேச்சு அரசியல் பக்கம் திரும்பியதும், ''ராஜ்யசபாவில் தி.மு.க.,வுக்கு நான்கு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்,'' என, கவுடா கேட்டுக் கொள்ள, ''தமிழக நலன் பாதிக்கப்படாமல், நாட்டு நலனுக்கான விஷயங்களில் தி.மு.க., எப்போதும் அரசுக்கு ஆதரவாகவே செயல்படும். இருந்தாலும், இந்த விஷயத்தை தலைவர் கருணாநிதியிடம் சொல்லி, நல்ல முடிவெடுக்கக் கேட்டுக் கொள்வேன்,'' என சொல்லியிருக்கிறார்.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:தி.மு.க., நாட்டு நலனுக்கான விஷயங்களில், ஒருபோதும் எதிராக இருக்காது. அந்த வகையில், கனிமொழியின் கருத்து தான், தி.மு.க.,வின் கருத்தும்.பா.ஜ., தரப்பில் இருந்து, முறையாக அணுகினால், மத்திய அரசுக்கு, ராஜ்யசபாவில் ஆதரவுஅளிப்பது குறித்து, தி.மு.க., தலைமை யோசிக்கும்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்களில் கூறினர்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக