சனி, 26 ஜூலை, 2014

சானிய மிர்சா கண்ணீர் : கடைசி மூச்சு இருக்கும்வரை நான் இந்திய பெண்தான் !

எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நான் இந்திய குடிமகள்தான் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கண்ணீர் மல்க கூறினார். சானியாவை தெலங்கானா மாநில நல்லெண்ண தூதராக நியமித்ததற்கு, பாஜக எம்.எல்.ஏ. லட்சுமண் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் பாகிஸ் தானின் மருமகள் என்றும் விமர்சித்தார். இந்நிலையில், தொலைக்காட்சி சேனலுக்கு சானியா வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் பல முறை கண்ணீர் விட்டு அழுதார். சானியா அளித்த பேட்டி வருமாறு:
நான் ஓர் இந்திய பிரஜை என பலமுறை நிரூபித்து இருந்தாலும், சிலர் இதனை அரசியலாக்குவது வருத்தமளிக்கிறது. எனக்கு திருமணம் ஆன பிறகும், நான் இந்தியாவுக்காக விளையாடி வருகிறேன். என்னை வெளிநாட்டு பிரஜையாக சித்தரிக்க முயல்வதை கடுமையாக கண்டிக்கிறேன்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எனது முன்னோர்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளனர். அதிலும் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளனர். எனவே இதுபோன்ற விமர்சனங்களை கண்டுகொள்ளப்போவதில்லை. இது ஆண்களின் சமூகம் என்பதால்தானோ என்னவோ இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. எனது பாஸ்போர்ட் இந்தியாவை சேர்ந்தது. நான் இந்தியப் பெண்.
வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால், ஒருபெண் வெளிநாட்டை சேர்ந்தவர் ஆகிவிடுவாரா? இது போன்று வேறு எந்த நாட்டிலும் நடப்பது கிடையாது. நான் ஒரு பெண் என்பதால்தான் இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன என நினைக்கிறேன். தெலங்கானா மாநில தூதராக நியமிக்கப்பட்டதில் பெருமை அடைகிறேன். மாநிலத் துக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபடுவேன். தெலங்கானாவின் தூதராக என்னை அரசு நியமித்ததில் எந்த விளையாட்டு வீரர், வீராங்கனைக்கும் அதிருப்தி ஏற்படவில்லை. ஹைதரபாதை பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலுக்கும் நியாயம் கிடைக்கும்படி தெலங்கானா அமைச்சருடன் பேசி உள்ளேன். இவ்வாறு சானியா கூறினார்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக