செவ்வாய், 22 ஜூலை, 2014

எல்லாரையும் நீக்கி விட்டு கட்சி நடத்த முடியாது ! கலைஞர் ஸ்டாலினிடம் கூறினார் !

தி.மு.க.,வில் இருந்து, முல்லை வேந்தனை நீக்கிய கருணாநிதி, கே.பி.ராமலிங்கத்தை நீக்க மறுத்து விட்டதால், ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். தனக்கு எதிராக, பகிரங்க குற்றச்சாட்டு சுமத்திய ராமலிங்கத்தையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற, அவரது வலியுறுத்தலை, கருணாநிதி ஏற்க மறுத்து விட்டதற்கு, அழகிரி தான் காரணம் என கூறப்படுகிறது.
தேர்தல் தோல்விக்கு பின், களையெடுப்பு நடவடிக்கையாக, 33 பேருக்கு, தி.மு.க., தலைமையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தேர்தல் பணியில் சொதப்பிய குற்றத்திற்கு ஆளான அந்த, 33 பேரில், முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், ராஜ்யசபா எம்.பி., கே.பி.ராமலிங்கம் ஆகியோர் முக்கியமானவர்களாக கட்சித் தலைமை கருதியது.
இவர்கள் வகித்து வந்த, கட்சிப் பொறுப்புகளில் இருந்து, தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன், ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கத் தவறினால், கட்சியை விட்டே நீக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டனர். அதன்படி, சம்மன் பெற்ற அனைவரும் விளக்கம் அளித்தனர். பலர், தி.மு.க., தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, மன்னிப்பு கோரினர். ஆனால், முல்லைவேந்தன், கட்சி தலைமைக்கு விளக்கம் அளிக்க மறுத்து, ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி அளித்தார்; அறிக்கை விட்டார். ஆனால், ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த கே.பி.ராமலிங்கம், தன் விளக்கத்தை, தபால் மூலம் அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தார்.

கைவிடப்பட்டது: இந்நிலையில், முல்லைவேந்தனை மட்டும் கட்சித் தலைமை நீக்கி இருக்கிறது. அதே நேரத்தில், அவரது ஆதரவாளரும், தர்மபுரி வடக்கு மாவட்டச் செயலருமான இன்பசேகரன் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. அவரது மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டாலும், கட்சியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல், தஞ்சை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்த பழனி மாணிக்கமும், கட்சியில் நீடிக்கிறார். ஆனால், முல்லைவேந்தன், பழனி மாணிக்கம், கே.பி.ராமலிங்கம், இன்பசேகரன் ஆகிய நான்கு பேரையும், கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்று, கருணாநிதியிடம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதிலும் குறிப்பாக, தனக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கிய முல்லைவேந்தன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர், கட்சியில் நீடிக்கக் கூடாது என்றே ஸ்டாலின் கருதினார். ஆனால், தி.மு.க., தலைமை எடுத்துள்ள நடவடிக்கையில், கே.பி.ராமலிங்கம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பது தெளிவாகி உள்ளது. இதுதான், ஸ்டாலினை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது: ராமலிங்கம், மு.க.அழகிரி யின் தீவிர ஆதரவாளர்; ராஜ்யசபா உறுப்பினர்.>நடத்த முடியாது: அழகிரியுடன் சமாதானம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு பொருத்தமானவர் கே.பி.ராமலிங்கம் தான். அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தலைமையின் இந்த முடிவால், அதிருப்தி அடைந்த ஸ்டாலின், இது பற்றி கருணாநிதியிடம் பேசியுள்ளார். ஆனால் கருணாநிதி, 'எல்லாரையும் நீக்கி விட்டு கட்சி நடத்த முடியாது' என, கூறி விட்டதாக தெரிகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக