வெள்ளி, 18 ஜூலை, 2014

பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக் ! ஊதிய உயர்வு கோரிக்கை ! நோயாளிகள் அவதி !

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி டாக்டர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 3,500 பயிற்சி மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் மொத்தம் 600 பேர் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்க ஊதியமாக ரூ.8200ம், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.17,400ம் வழங்கப்படுகிறது. இது மற்ற மாநிலங்களில் பயிற்சி டாக்டர்களுக்கு அளிப்பதை விட குறைவாகும். பயிற்சி டாக்டர்களுக்கு ஊக்க ஊதியத்தை ரூ.20 ஆயிரமாகவும், முதுநிலை மாணவர்களுக்கு ரூ.45 ஆயிரமாகவும் உயர்த்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பயிற்சி டாக்டர்களும், முதுநிலை மாணவர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கடந்த மாதம், அரசு மருத்துவமனைகள் முன்பாக கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதன்பின், பயிற்சி டாக்டர்கள் சங்க நிர்வாகிகள், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்ச விஜயபாஸ்கரை சந்தித்து பேசினர். அப்போது, பயிற்சி டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மனம் இருந்தாலும், நிதி இல்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறார். இதனால், அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குனர் கீதலட்சுமி அறிவித்தார்.
 ஆனால், அதன்படி எந்த அறிவிப்பும் வராததால் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை பயிற்சி மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இதிலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பயிற்சி டாக்டர்களும், முதுநிலை மாணவர்களும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டிய பயிற்சி டாக்டர்கள் தங்கள் பணியை புறக்கணித்தனர். இதனால், நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நெல்லை உள்பட பல ஊர்களில் மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பாக பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பயிற்சி டாக்டர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறுகையில், ‘பிப்ரவரி மாதம் முதல் ஊதிய உயர்வு கேட்டு போராடி வருகிறோம். இது வரை அரசிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கவில்லை. முதல்வரிடம் பேசி விரைவில் நல்ல முடிவு அறிவிப்போம் என அமைச்சர் கூறினார். சட்டசபையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், இது வரை எந்த முடிவும் தெரியவில்லை. எனவே, இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறோம் இதில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பயிற்சி டாக்டர்களும் பங்கேற்றுள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேறா விட்டால், அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்’ என்றார். - See more tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக