வெள்ளி, 11 ஜூலை, 2014

கனடா மனைவியின் ஈமெயில் மூலம் காப்பாற்றப்பட்ட திருச்சி காதலியின் வாழ்க்கை !

இலங்கையை சேர்ந்தவர் சாந்திவாசன்(33). இவர் கனடா வில் சாரதியாக வேலை பார்த்து வருகிறார். சாந்திவாசன் வேலை செய்யும் நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த சீதா என்பவரும் வேலை செய்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்தனர். தற்போது அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாந்திவாசனுக்கும், சீதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவன்– மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி திட்டினர். இதில் ஆத்திரம் அடைந்த சாந்திவாசன், திருச்சியில் எனது முன்னாள் காதலி இருக்கிறாள். அவளை திருமணம் செய்ய போகிறேன், உன்னால் என்ன செய்ய முடியும் என கூறியுள்ளார். நீ எப்படி திருமணம் செய்கிறாய் என பார்த்து விடுகிறேன் என சீதாவும் சவால் விடுத்துள்ளார்.


இதையடுத்து திருச்சி வந்த சாந்திவாசன் தனது முன்னாள் காதலியான சங்கமி (26) என்பவரை சந்தித்துள்ளார். பின்னர் கடந்த 4ம் திகதி சங்கமியை பதிவு திருமணமும் செய்தார். தொடர்ந்து முறைப்படி திருமணம் செய்ய பெண் வீட்டார் ஏற்பாடு செய்தனர். இதன்படி நேற்று காலை சாந்திவாசன்–சங்கமி திருமணம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் நடக்க இருந்தது.

கனடாவில் இருந்த சீதாவிற்கு திருமண விஷயம் தெரியவந்தது. உடனடியாக அவர் தனது கணவரின் 2வது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு மின்னஞ்சல் மூலம் திருச்சி பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பினார். புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கண்டோன்மென்ட் பொலிசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் ஆர்.எம்.எஸ். கொலணி, அசோக் நகரில் உள்ள சங்கமி வீட்டிற்கு சென்ற கண்டோன்மென்ட் சப்–இன்ஸ்பெக்டர் அழகம்மாள் அங்கிருந்த சாந்திவாசனிடம் விசாரணை நடத்தினார். அப்போது கனடாவில் சீதாவுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததாகவும், தங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் எனவும் சாந்திவாசன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று நடக்க இருந்த திருமணத்தை பொலிசார் நிறுத்தினர். சங்கமியை பொலிஸ் நிலைத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கனடாவில் இருக்கும் சீதாவை தொடர்பு கொண்டு திருச்சிக்கு வந்து புகார் தரும்படி பொலிசார் கூறினர். விசா கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தன்னால் இந்தியாவிற்கு வர முடியாது என சீதா கூறியுள்ளார். இதனால் சாந்திவசான் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து பொலிசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இணையதளம் மூலம் நாடு விட்டு நாடு காதல் திருமணங்கள் நடந்து வரும் நிலையில் அதே இணையதளம் (மின்னஞ்சல்) மூலம் காதல் கணவரின் 2வது திருமணத்தை பெண் ஒருவர் தடுத்து நிறுத்தியிருப்பது திருச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக