சனி, 19 ஜூலை, 2014

BAR களில் வேலை செய்ய அதிக பெண்கள் முன் வருகிரார்கள் !

பணிகள் பலவற்றிலும் பாலின பேதங்கள் இருப்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிந்தவைதான். இன்று லாரி ஓட்டுவதிலிருந்து ராணுவப் பணிகள் வரை பலவிதமான வேலைகளில் பெண்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.
மதுபான அரங்குகளில் மது விற்பனை, மது வகைகளைப் பரிமாறுதல் ஆகிய பணிகளையும் பெண்கள் இன்று திறம்படச் செய்துவருகிறார்கள். ஆனால், 'கால் சென்டரில் வேலை பார்க்கிறேன்' என்றோ, 'ஐ.டி. கம்பனியில் வேலை' என்றோ, 'எம்.என்.சி. வேலை' என்றோ பெருமையாய்ச் சொல்லிக்கொள்பவர்கள், "நான் பாரில் வேலை பார்க்கிறேன்" என்பதை இயல்பாகச் சொல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
ஆண்களே இதற்குத் தயங்கும்போது, பெண்களின் நிலை பற்றிக் கேட்கவே வேண்டாம் என்கின்றனர் சிலர். மதுபானக் கடைகளில் செய்யப்படும் இந்தப் பணி, பார் டெண்டிங் என்று சொல்லப்படுகிறது. மதுபானங்களைச் சரியான அளவுகளில் கலப்பது, பரிமாறுவது, மதுப்புட்டிகளைச் சுழற்றி வித்தைகள் காட்டுவது ஆகியவை இந்தப் பணியில் அடக்கம்.
"பார் டெண்டிங் என்பது ஒரு கலை. சரியான அளவுகளில் மதுபானங்களைக் கலப்பதைத் தாண்டி, இதில் ஒவ்வொருவருக்கும், ஒரு தனி ஸ்டைல் உள்ளது"
என்கிறார் பெங்களூரில் உள்ள பிரபல பார் டெண்டர் எமி ஷெரோஃப்.
பெண்கள் மதுக்கடைகளிலும் வேலை பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பார்கள் மதியம் 12.00 மணி தொடங்கி நள்ளிரவு 1.00 மணி வரை இயங்குகின்றன. பெண்களும் இந்த வேலை ஆர்வம் காட்டி வருகின்றனர். பார் டெண்டர், பார் உரிமையாளர், கார்ப்பரேட் பார் மேனேஜர், பயிற்சியாளர் என பல வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளன.
ஒரு பெண் பாரில் வேலை பார்க்கிறாள் என்பது பெரும்பாலும் அவர்களது பெற்றோர்களுக்கே தெரிவதில்லை. அதாவது, பாரில் வேலை பார்ப்பதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லக்கூடப் பெண்கள் தயங்குகிறார்கள். பாரில் வேலை பார்ப்பவர்கள் நிச்சயமாக குடிப்பழக்கம் உள்ளவர்களாத்தான் இருப்பார்கள் என்ற தவறான பார்வையே இதற்குக் காரணம். ஆனால் பாரில் வேலை செய்தும் மதுவைத் தீண்டாதவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.
"பாருக்கு சென்று மது அருந்தும் பெண்களைவிட, அங்கு பணிபுரிபவர்கள் அதிகம் பாதுகாப்பாகவே உள்ளனர். இங்கு பல பெண்கள் நள்ளிரவு வரை வேலை பார்கின்றனர். அதனால் என்ன இன்று மருத்துவர்கள் நைட் ஷிஃப்ட்களில் அமர்த்தப்படுவதில்லையா?" என்ற கேள்வியை எழுப்புகிறார் 35 வருடங்களாக பார் டெண்டராக இருக்கும் ஷட்பி பாசு (53).
ஒரு பெண், பார் வேலைக்குத் தயாராகிறாள் என்றால், அவள் எதையும் செய்யத் தயாராக இருப்பாள் என்ற சமூகத்தின் தவறான பார்வையும் இந்தத் தொழிலில் இருக்கும் பெண்களைத் தவறாக நினைப்பதற்கு ஒரு காரணம். ஆனால், பாரில் வேலை செய்யும் பெண்கள் வருமானத்திற்கான தொழிலாகவே அதைப் பார்க்கிறார்கள்.
"நான் பார் டெண்டராக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால் இன்று நான் கடந்து வந்த தடைகள், முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, எனக்கு தன்னம்பிக்கை வருகிறது. நான் ஒரு தைரியமான பெண்ணாக மாறிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. பெண்கள் தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுக்கக் கூடிய சுதந்திரமும் சூழலும் அவளுக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்று கூறுகிறார் பார் டெண்டர் இஷிடா மானேக் (27).
பார்களில் பெண்கள் வேலை செய்கிறார்கள் என்றவுடன் சினிமாவில் வருவதைப் போலக் லோ ஹிப் சேலைகளும், கவர்ச்சிகரமான நடனங்களுடன் வலம்வரும் பெண்களின் தோற்றமே பொதுவாக மக்கள் நினைவில் சட்டென்று வருகிறது. குறிப்பாக பார்களைப் பார்க்காதவர்கள் பலர் இப்படித்தான் நினைக்கிறார்கள். சினிமாவின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
"என்னுடைய பாரில் வேலை பார்க்கும் பெண்களின் மேல் நான் அதிக கவனம் செலுத்துகிறேன். அவர்களுக்கு நடை, உடை, நயம், செய்ய வேண்டிய வேலைகள் என அனைத்தையும் கற்றுத் தருகிறோம்" என்கிறார் பார் உரிமையாளர் புனா ஒஹாரா.
"மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பேசும் எந்த ஒரு வாடிக்கையாளருக்கும் நாங்கள், மதுபானம் வழங்குவதில்லை. யார் அத்துமீற முயற்சித்தாலும் காவல்துறையின் உதவிக்கு அணுகுவோம்" என்கிறார் அவர்.
பெண்கள் மதுக்கடைகளிலும் வேலை பார்க்கலாம் என்று கூறும் உச்ச நீதிமன்றம், அப்பெண்களின் வயது 21-க்கு மேல் இருக்க வேண்டும் என்றும், ஆபாச உடைகளை அணியக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
பாரில் பணிபுரியும் பெண்களைத் தகாத வார்த்தைகளில் பேசினாலோ, அவர்களிடம் அத்துமீறி நடக்க முயற்சித்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய பாதுகாப்பு அளிக்காத பாரின் உரிமமும் பறிக்கப்படும்.
இன்று ஹோட்டல் மெனேஜ்மன்ட் கல்லூரிகள் பலவற்றில் காக்டெயில் பரிமாறுதல் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எந்தத் துறையில் வேலை பார்த்தாலும், கவனத்துடனும் துணிச்சலுடனும் பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்பதே பெண்கள் முன்னேற்றத்தை விரும்பும் தரப்பினரின் கருத்து.
விமானத்தில் ஏர் ஹோஸ்ட்டஸ் ஆகப் பணிபுரியும் பெண்களையும், ஹோட்டல்களில் பணிபுரியும் பெண்களையும் தவறாகப் பார்க்காதபோது பாரில் பணிபுரியும் பெண்களை மட்டும் ஏன் தரக்குறைவாய் பார்க்கிறார்கள் என்பதே மதுபானக் கடைகளில் வேலை பார்க்கும் பெண்களின் கேள்வி.
"டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், கோவா போன்ற இடங்களில் பெண்கள் மதுக்கடைகளில் அதிகம் வேலை பார்க்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரையில் பாரில் வேலை பார்க்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பெண்கள் யாரும் இந்த வேலையைத் தேர்ந்தடுத்து வருவதில்லை. பெரும்பாலும் அவர்களின் குடும்பச் சூழலும், வறுமையும்தான் அவர்களை இந்த வேலைக்குத் தள்ளுகிறது. இதனை இந்தச் சமுதாயம் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அவர்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்" என்று ஐ.பி.எஸ். அதிகாரி சோனியா நரங் கூறுவது மொத்த சமுதாயமும் கவனிக்க வேண்டிய செய்தி.
கட்டுரையாளர் - ரேணுகா சந்திரமோகன் | தொடர்புக்கு, crenuka28@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக