வியாழன், 24 ஜூலை, 2014

ஜெ. சொத்து குவிப்பு வாதம் நிறைவு ! அன்றைய 66 கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு 2,847 கோடி !

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு க்ளைமேக்ஸை நெருங்கி வருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 1991-96ம் காலகட்டத்தில் முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கை உச்ச நீதிமன்றம் 2004-ல் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.
25 நாட்கள்… 80 மணி நேர வாதம்… ஜெ. தரப்பு இறுதி வாதம் 'ஹைலைட்ஸ்' ரூ.66 கோடி சொத்து மாதம் வெறும் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, ரூ. 66 கோடிக்கும் மேலான சொத்தை எப்படி வாங்க முடியும்?. இந்த ஒற்றைக் கேள்விக்குப் பதில் தேடித்தான், சுமார் 18 ஆண்டு இழுத்தடிப்புடன் இந்த வழக்கு நீடித்து வருகிறது. சாட்சிகள் விசாரணை இவ்வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல்கட்ட விசாரணை, சொத்துகள் மதிப்பீடு, மொழிபெயர்ப்பு பணிகள், குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம் சாட்டப்பட்டவர்களிட‌ம் விளக்கம் பெறுதல் என அனைத்து பணிகளும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்தது. அரசு வழக்கறிஞர் பவானிசிங் 259 சாட்சிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங், "66 கோடி ரூபாய் என்பது அன்றைய மதிப்பு. ஆனால், இதன் இன்றைய மதிப்பு 2,847 கோடி ரூபாய்" என்றும் சொல்லி மலைக்க வைத்துள்ளார். இதுதான் அரசு வழக்கறிஞரின் இறுதிகட்ட வாதத்தின் ஒட்டுமொத்த சாராம்சம். இதற்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது இறுதிகட்ட பதிலைச் சொல்ல வேண்டும். அதோடு வாதங்கள் முடிய வேண்டும். தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படும். ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் இடைக்காலத் தடைகள், வாய்தா மேல் வாய்தாக்கள், தடங்கல்கள் என இழுத்தடிக்கப்பட்டதால் நொந்துபோன நீதிபதி ஒரு கட்டத்தில் கடும் கண்டனத்தைத் தெரிவித்தபின் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை கடந்த 19ம் தேதி தொடங்கினார். 25 நாட்களில் 80 மணிநேரம் வாதிட்ட அவர் தனது கட்சிக்காரர் தரப்பில் இருந்த ஆதாரங்களையும், புள்ளிவிபரங்களையும் நீதிபதி டி குன்ஹா முன்பு அடுக்கியுள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி குன்ஹா பல கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்க, அதற்கு சளைக்காமல் பதில் கொடுத்தார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வழக்கறிஞர் குமார் தன்னுடைய வாதத்தின் தொடக்கத்தில், "இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையிலான வழக்கு' என்றே வாதாடினார். ஜெயலலிதா சிறையில் இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற ரெய்டு, அது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டி வாதம் செய்த அவர், அரசியல் ரீதியாக என் கட்சிக்காரரை ஒழித்துக் கட்ட சதி செய்த வழக்கு இது. சட்டப்படியாகப் பார்த்தாலும் இது தவறான வழக்கு' என முதல் இரண்டு நாட்களும் கடுமையாக வாதாடினார். உண்மைகளை வைத்து வாதாடுங்கள் மூன்றாவது நாளும் இதே கோணத்தில் அவர் தனது வாதங்களை முன்வைத்துக் கொண்டே போனபோது நீதிபதி மைக்கேல் டி குன்ஹா குறுக்கிட்டு, தி.மு.க தலைவர் கருணாநிதி பற்றியெல்லாம் இங்கே பேசுகிறீர்கள். இப்படிப் பேசுவதற்கான ஆதாரங்கள் ஏதாவது உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள். ஆதாரமில்லாமல் பேசுவது தவறு. உங்கள் கட்சிக்காரரைப் பாதுகாப்பதற்கான உண்மைகளை மட்டும் முன்வைத்து வாதாடுங்கள். இது அரசியல் மேடை அல்ல, நீதிமன்றம்'' என்றார். உடைகள், அலங்காரப் பொருட்கள் இதையடுத்து அரசியல் ரீதியாகப் பேசுவதைத் தவிர்த்து, வழக்கு விவரங்களின் அடிப்படையில் வாதாடத் தொடங்கினார் வழக்கறிஞர் குமார். போயஸ் கார்டனிலிருந்து எடுக்கப்பட்ட உடை உள்ளிட்ட பொருட்கள் பற்றிய வாதத்தின்போது, "ஒருவர் தனது அன்றாட நடைமுறைக்காகப் பயன்படுத்தும் பொருட்களை சொத்துகளின் பட்டியலில் சேர்க்க முடியாது. ஆனால் அரசுத் தரப்பில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான புடவைகளையும், 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள 98 வாட்ச்களையும், 386 ஜோடி செருப்புகளையும் வருமானத்திற்கு மீறிய சொத்துகளின் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். சொத்துப்பட்டியலில் சேர்க்கலமா? நிறைய பெண்கள் வசிக்கின்ற வீட்டில் இத்தகைய பொருட்களைப் பயன்படுத்தத்தானே செய்வார்கள்? ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, அனுராதா எனப் பலப் பெண்கள் இருந்த வீட்டில் எடுத்த பொருட்களை எப்படி சொத்துகள் பட்டியலில் சேர்க்க முடியும்?'' என்று கேள்வி எழுப்பினார். வருமானத்தை குறைவாக மதிப்பிட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவர் முன் வைத்த வாதங்களில், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் குறிப்பிடுவதெல்லாம் அவரது வருமானத்தைக் குறைவாக மதிப்பிடுவதால்தான் என்ற வழக்கறிஞர் குமார், ஹைதராபாத் திராட்சை தோட்ட வருமானத்தைக் குறைவாக மதிப்பிட்டிருக்கிறார்கள். 1991-96ல் ஹைதராபாத் தோட்டத்திலிருந்து கிடைத்தது 5 லட்சத்து 8 ஆயிரத்து 340 ரூபாய் வருமானம் வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், அங்கிருந்து கிடைத்த வருமானம் 52 லட்ச ரூபாய் என்றார் சசிகலா உறவினர் அல்ல வளர்ப்பு மகன் திருமணம் தொடர்பான வாதங்களின்போது வழக்கறிஞர் குமார் முன்வைத்த பாயிண்ட்டுகள் நீதிமன்றத்தில் இருந்தவர்களை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்தன. "என் கட்சிக் காரருக்கு சசிகலாவோ இளவரசியோ உறவினர் அல்ல. அவர்களுடன் என் கட்சிக்காருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை. வளர்ப்பு மகன் அல்ல சுதாகரன் என் கட்சிக்காரருக்கு வளர்ப்பு மகனும் அல்ல. முதல்வர் என்ற முறையில் அவரது திருமணத்தில் வாழ்த்துவதற்காக என் கட்சிக்காரரை அழைத்தார்கள். அவர் சென்று வந்தார் என்றபோது குமாரின் முகத்தையே திமுக தரப்பு வழக்கறிஞர்களும் லேசான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். திருமண செலவு குமார் தொடர்ந்து வாதாடுகையில், "திருமண செலவுகளை யாராலும் துல்லியமாகக் கணக்கிட முடியாது. ஆனால் இந்த வழக்கில், 1995-ல் நடந்த திருமணத்தின் செலவை 1997-ல் துல்லியமாகக் கணக்கெடுத்து, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தத் திருமணத்தைப் பொறுத்த வரை மணமகள் வீட்டார் சார்பில் நடிகர் பிரபு வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்பில் சம்பாதித்த பணம் இந்தத் திருமணத்தில் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அவரது சகோதரர் ராம்குமார் முறையாக கணக்குக் காட்டியிருக்கிறார்'' என்றார். சிவாஜியிடம் விசாரணை அப்போது நீதிபதி டி குன்ஹா குறுக்கிட்டு, "இந்தத் திருமணத்தின்போது நடிகர் சிவாஜி உயிருடன் இருந்தாரா? திருமண செலவு தொடர்பாக அவரிடமும் விசாரணை நடந்ததா?'' எனக் கேட்க, ""சிவாஜி உயிருடன் இருந்தார். திருமண விழாவில் பங்கேற்றார். ஆனால் அவரிடம் விசாரணை எதுவும் நடைபெறவில்லை'' என பதில் தந்தார் குமார். சுதாகரன் யார்? "அ.தி.மு.க நிர்வாகிகள் பல செலவுகளை ஏற்றுக் கொண்டார்கள்' என வழக்கறிஞர் குமார் சொன்னதையடுத்து, "மணமகன் சுதாகரன் கட்சியில் உறுப்பினரா, பொறுப்புகளில் இருந்தாரா?' என நீதிபதி கேட்க, அ.தி.மு.க.வில் சுதாகரன் உறுப்பினராக இருந்தார் என்று மட்டும் வக்கீலிடமிருந்து பதில் வந்தது. தங்கம், வைரம் ""போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டபோதே அவர்களிடம் 7 கிலோ 40 கிராம் தங்கம் இருந்தது. 1989-90ல் 12 கிலோ 842 கிராம் தங்கம் இருந்தது. 1991-92ல் இது 21 கிலோ 280 கிராமாக ஆனது. கட்சி நிர்வாகிகளான ஜெயக்குமார், அழகு.திருநாவுக்கரசு, கண்ணப்பன் போன்றவர்கள் தங்கத்தட்டு, தங்கப்பேனா, தங்க செங்கோல் ஆகியவற்றைப் பரிசாகக் கொடுத்திருந்தார்கள். அத்துடன் கடிகாரம், வளையல் போன்றவற்றில் தங்கம், வைரம் ஆகியவை இருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து 27 கிலோ 580 கிராம் தங்க நகைகள் இருந்ததாக கேஸ் போட்டிருக்கிறார்கள். சசிகலாவிடமும் 1 கிலோ 931 கிராம் தங்கம் இருந்தது. இவையெல்லாமே வருமானவரி கட்டி முறைப்படி சேர்க்கப்பட்டிருந்த சொத்துகள். வருமான வரித் தீர்ப்பாயம்கூட எங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு கொடுத்திருக்கிறது என்றார். அதை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்றும் கூறினார். முறையான சொத்துக்கள் அப்போது தான் நீதிபதி ஒரு கிடுக்கிப்பிடியைப் போட்டார். நீதிபதி கூறுகையில், "தீர்ப்பாயம் தந்த உத்தரவை நீதிமன்றம் ஏற்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. இது எல்லாம் வருமானவரி கட்டி சேர்க்கப்பட்ட சொத்துகள்தான் என்றால், இதெல்லாம் முறையான சொத்துகள் என்று வழக்குப் போட்டு, இந்த சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்தே விடுவிக்கக்கோரி அப்போதே ஒரு பெட்டிஷன் போட்டு உங்கள் தரப்பினர் விடுவித்துக் கொண்டிருக்கலாமே?, அதை ஏன் செய்யவில்லை'' என்று நீதிபதி கேட்க ஜெயலலிதாவின் வழக்கறிஞரிடம் பதில் இல்லை. நமது எம்.ஜி.ஆர் நாளிதழிக்கு சந்தா "சந்தியா நாட்டியப்பள்ளி மூலமாக ஆண்டுக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. நமது எம்.ஜி.ஆர் பத்திரிகைக்காக 14 கோடியே 25 லட்ச ரூபாய் சிறப்பு டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டது. பிரச்சாரத்திற்குப் போனபோது கட்சிக்காரர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த தங்கத்தின் மதிப்பு 2 கோடி ரூபாய். இதையெல்லாம் வருமானவரித் துறையில் காட்டி முறையாக வரி செலுத்தியிருக்கிறோம் என்றபடி நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கான சிறப்பு டெபாசிட் தொடர்பான ஒரிஜினல் ரசீதுகளை காட்டினார் ஜெ.வின் வழக்கறிஞர். எப்படி ஒரிஜினல் வந்தது? அப்போது மீண்டும் நீதிபதி ஒரு கேள்வியைக் கேட்ட ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் லேசான அதிர்ச்சி. நீதிபதி கேட்டது இது தான்.. "இந்த ரசீதுகளின் ஒரிஜினல்கள் தொலைந்துவிட்ட தாகச் சொல்லி வருமானவரித் துறையில் ஜெராக்ஸ் காப்பிகளைத்தான் காட்டியிருக்கிறீர்கள். இப்போது எப்படி ஒரிஜினல்களைக் காட்டுகிறீர்கள்? ஒரு பத்திரிகை அலுவலகத்தில் ரசீதுகளைக்கூடவா சரியாக மெயின்டெய்ன் செய்ய மாட்டார்கள்' என வழக்கறிஞர் சமர்ப்பித்த ரசீதுகள் தொடர்பான நம்பகத் தன்மையை சோதிப்பதுபோல நீதிபதி கேள்வி கேட்டார். ரூ.1 கோடியே 15 லட்சம் ''நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் மூலம் ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு 1 கோடியே 15 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது. ஆனால் தமிழக லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் 40 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் விட்டுப்போன ரூ. 75,68,000 தொகையை எனது கட்சிக்காரர் ஜெயலலிதாவின் வருமானத்தில் சேர்க்க வேண்டும் என்றார். வாடகை, விவசாய வருமானங்கள் மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டையில் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை வாடகைக்கு விட்டதில் ரூ. 7,00,000 வருமானம் கிடைத்தது. சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கிடைத்த வருமானம் ரூ. 5,11,000. இந்தத் தொகையையும் எனது கட்சிக்காரர் வருமானத்தில் சேர்க்கத் தவறிவிட்டனர்'' என்றும் குமார் வாதிட்டார். ஜனாதிபதி பயன்படுத்திய ஒரு பென்ஸ் காரை வாங்கிய செலவு ''ஜனாதிபதி பயன்படுத்திய ஒரு பென்ஸ் காரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி 1992 பிப்ரவரி மாதம் ரூ. 9,15,000க்கு வாங்கினார். அவரிடம் இருந்து ஜெயா பப்ளிகேஷன் 1992 செப்டம்பரில் 6,76,000 ரூபாய்க்கு அந்தக் காரை வாங்கியது. இந்த காருக்கு வருமான வரியும் கட்டியிருக்கிறோம். இந்த காரின் மதிப்பை 9,15,000 ரூபாய் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிகப்படுத்திக் காட்டியுள்ளனர். இந்தத் தொகையை என் மனுதாரர் செலவுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்'' என்று குமார் வாதிட்டார். பல கோடிகள் டெபாசிட் அப்போது நீதிபதி குன்ஹா, ''ஜெயலலிதா அடிக்கடி 50 லட்சம், ஒரு கோடி என டெபாசிட் செய்துள்ளாரே... இந்தப் பணம் எப்படி வந்தது?'' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த குமார், ''விவசாய நிலத்தில் வந்த வருமானம், கட்டட வாடகை மூலம் கிடைத்த வருமானம் என்று கிடைத்த வருமானங்களை வங்கியில் மொத்தமாக செலுத்தியுள்ளார்'' என்றார். போயஸ்கார்டன் வீட்டுச் செலவு என் கட்சிக்காரர் ஜெயலலிதா குடியிருந்த போயஸ் கார்டன் பங்களாவில் 5 ஆண்டுகளில் மொத்த செலவுகள் ரூ. 16,15,500 என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வாதிட்டார் குமார். நாய்க்கு 8 கிலோ மட்டன் வீட்டு பராமரிப்புச் செலவுகளைத் தவிர, போயஸ் கார்டனில் 12 உயர் ரக நாய்கள் இருந்தது. அந்த நாய்களுக்கு பாண்டி பஜாரில் இருந்து தினமும் எட்டு கிலோ மட்டன் வாங்கி வருவதாக இந்த வழக்கின் 198-வது அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயராமன் தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார். இந்த செலவு எதற்கும் ரசீது கிடையாது. என் மனுதாரர் வீட்டுப் பராமரிப்புக்காக ரூ. 1 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவழிக்கப்பட்ட தொகைகளை வருமானவரித் துறையில் காட்டி அதற்கு வரியும் கட்டியிருக்கிறார். உண்மைக்குப் புறம்பான செய்தி என் மனுதாரர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், அதை பினாமி பெயரில் கம்பெனிகள் தொடங்கி முதலீடு செய்துள்ளதாகவும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் குறிப்பிடுவது உண்மைக்குப் புறம்பானது. அதற்கு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கவில்லை. கம்பெனிகளுக்கு இடையிலான பணப் பரிமாற்றத்துக்கும் எனது கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டதாக சொல்லப்படும் ரூ. 4.5 கோடியை வருமான கணக்கில் இருந்து நீக்க வேண்டும்'' என்றும் வாதிட்டார். எந்த தொடர்பும் இல்லை "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கம்பெனிகளுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமில்லை. அதுபோல என் கட்சிக்காரருக்கும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியவர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்களுடன் ஜெயலலிதாவை இந்த வழக்கில் சேர்த்தது தவறு என்று வாதிட்டார் குமார். ஒரே வீட்டில்தானே இருந்தனர்.. இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி மைக்கேல் டி குன்ஹா குறுக்கிட்டு, "அப்படியென்றால் ஏ1 (ஜெயலலிதா), ஏ2 (சசிகலா), ஏ3 (இளவரசி), ஏ4 (சுதாகரன்) எல்லோரும் ஒரே வீட்டில்தான் வசித்தார்களா?'' என்று கேட்க... "யெஸ்... யுவர் ஹானர்'' என்றார் வழக்கறிஞர் குமார். இந்தப் பதில்தான் வழக்கின் மிக முக்கியமான பகுதியாகப் பார்க்கப்படுகிறது என்கின்றனர் சட்ட நிபுணர்கள். மூன்று சட்டமன்ற தேர்தல்கள் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவான பிறகு, இந்திய நாடாளுமன்றம் 5 தேர்தல்களைக் கடந்துவிட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் 3 தேர்தல்களைச் சந்தித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தீர்ப்பு நாள் எது? வழக்கு தொடரப்பட்ட போது 49 வயதில் இருந்த ஜெயலலிதா பொன் விழா கடந்து, மணி விழா கடந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கே 4 நீதிபதிகள் மாறிவிட்டார்கள். அரசு வழக்கறிஞரும் மாறிவிட்டார். வழக்கின் விசாரணை அதிகாரிகள் ஓய்வுபெற்று விட்டார்கள். நெருங்கும் கிளைமேக்ஸ் இந் நிலையில் ஜெயலலிதா தரப்பின் இறுதிவாதம் முடிந்துள்ள நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வாதங்கள் எடுத்து வைக்கப்பட உள்ளன. இந்த மூவரின் வாதங்கள் அடுத்த சில வாரங்கள் தொடரும். இதன் பின்னர இத்தனை ஆண்டுகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு 2 மாதங்களுக்குள்ளாகவே வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக