சனி, 19 ஜூலை, 2014

விமான விபத்தில் எய்ட்ஸ் மாநாட்டுப் பிரதிநிதிகள் 100 பேர் பலி ! ஆஸ்திரேலியா சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டு பிரதிநிகள் ..


உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதிநிதிகள் சுமார் 100 பேர் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.
20-வது சர்வதேச எய்ட்ஸ் மாநாடு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. சுமார் 12,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், ராக் பாடகரும் ஏழ்மைக்கு எதிராக போராடி வருபவருமான பாப் கெல்டாப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச மாநாட்டில் எய்ட்ஸுக்கு எதிரான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நிதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இம்மாநாட்டு பிரதிநிதிகள் சுமார் 100 பேர், சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. இந்த விமானம் மலேசியாவின் கோலாலம்பூர் வந்தவுடன், அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் இவர்கள் மெல்போர்ன் செல்லவிருந்தனர். இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் தாக்குதலுக்கு இலக்காகிவிட்டனர்.
மாநாட்டுப் பிரதிநிதிகள் சுமார் 100 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக, சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு தெரிவிக்கிறது. ஆனால், சர்வதேச எய்ட்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜோயப் லாங்கே உள்பட 108 பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயணித்தாக ஆஸ்திரேலியாவின் மற்றொரு முன்னணி நாளேடு தெரிவிக்கிறது.
இம்மாநாட்டை நடத்தும் விக்டோரியா மாநிலத்தின் முதல்வர் டெனிஸ் நாப்தினே கூறும்போது, “ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செயல்பாட்டாளர்கள் என எஸ்ட்ஸுக்கு எதிரான பணிகளில் மும்முரமாக பணியாற்றிய பலர் இந்த விமானத்தில் பயணம் செய்தனர். அவர்கள் அதிக அளவில் பயணம் செய்த உண்மை. ஆனால் அவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை” என்றார்.
விமான விபத்தில் மாநாட்டு பிரதிநிதிகள் இறந்ததை சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டி உறுதி செய்துள்ளது. இறந்த பிரதிநிதிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக