சனி, 28 ஜூன், 2014

மலையாளத்தை தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு கடத்திய EMS.நம்பூதிரிபாடு என்ற பார்பன கம்யுனிஸ்ட் !

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
emsசமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு மலையாள மொழியை சமஸ்கிருத மயமாக்கியதாக கூறியிருந்தார்கள். அதற்கு காரணம் ஈ.எம்.எஸ் ஒரு ஆரிய பார்பனர் என்பதுதான். இதுபோன்ற உள் நோக்கம் ஏதேனும் அவருக்கு இருந்ததா? இதன் முழு பின்ணனி என்ன?
சிவகுமார்
சென்னை

அன்புள்ள சிவக்குமார்,
நானும் யாரோ என்னமோ என்று நினைத்துவிட்டேன். தமிழ்த்தேசியவாதிகள்தானே? அவர்கள் சொல்வதற்கெல்லாமா கோபித்துக்கொள்வது? அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே. எதையும் எப்படியும் சொல்வது என்னும் நூறாண்டுக்கால நெடிய வரலாறு அவர்களுக்கு உள்ளதே.
அவர்களுடைய இந்தச் சிந்தனையில் உள்ள மிகப்பெரிய பிழையே உலகிலுள்ள அனைத்து மொழிகளும், அனைத்துச் சிந்தனைகளும் தமிழே என்று அவர்களின் முன்னோடியான பாவாணர் சொன்னதை இக்கூற்று மறுதலிக்கிறது என்பதுதான். உலகிலுள்ள அனைத்துமொழிகளும் தவறாகப்பேசப்படும் தமிழே என்றும் அனைத்துச்சிந்தனைகளும் தமிழனிடமிருந்து திருடி திரித்துக்கொண்டவையே என்றும் [ஆமாம், உண்மையாகவே. வேடிக்கை இல்லை!] வாதிட்ட அவர் எங்கே, ஏதோ இ.எம்.எஸ் மட்டும்தான் திரித்தார் என்று சொல்லும் இவர்கள் எங்கே? விடுங்கள்.

*


துஞ்சத்து எழுத்தச்சன்

சரி, உண்மையில் மலையாளத்தின் சம்ஸ்கிருத மயமாக்கம் எப்படி நிகழ்ந்தது? நான் இந்த தளத்திலேயே பலமுறை இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். மீண்டும் ஒரு சுருக்கமான சித்திரம் இன்றைய கேரளம் பண்டைய சேரநாடு. ஆனால் அன்று அங்கே மக்கள் வாழ்ந்தபகுதி என்பது மிகமிகக்குறைவே. பெரும்பகுதி மலைச்சரிவுகளும் கடலோரச்சதுப்புகளும்தான். அங்கே வாழ்ந்தவர்கள் பழங்குடிவாழ்க்கையோ அரைப்பழங்குடி வாழ்க்கையோதான் வாழ்ந்திருக்கவேண்டும். அவர்கள் பேசிய மொழி இன்றும் பளியரும் காணிகளும் பேசுவதுபோன்ற ஒரு வகையான தமிழ்.அதுவே மலையாளத்தின் மூலம்
மேற்குமலை பழங்குடிகளின் , அல்லது கடலோர மீனவர்களின் தமிழின் ஒலியைக் கேட்டால் மலையாளம் எப்படித் தோன்றியது என்னும் ஐயமே எழாது. அந்தப் பழங்குடி மொழிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்த ஒரு தொடர்செயல்பாட்டின் விளைவே மலையாளம்.
கேரளத்தில் பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுவரை நீடித்த சோழர் ஆட்சிக்காலத்தில்தான் ஆறுகளாலும் காடுகளாலும் பிரிக்கப்பட்டு தொடர்பற்ற பழங்குடி நிலமாக இருந்த கேரளத்தின் பெரும்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டு அரசு நிர்வாகமும் வணிகத்தொடர்புகளும் உருவாகி வந்தன. மலையாளத்தின் தொடக்கம் இக்காலத்தில்தான்.

ஹெர்மன் குண்டர்ட்
சோழர் ஆட்சிக்காலத்தில் ஆட்சியிலும் செய்தித்தொடர்பிலும் சம்ஸ்கிருதத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. கேரளத்தின் பேராலயங்கள் பலவும் அக்காலத்தில் அமைந்தவைதான். கேரளத்தில் பிராமணகுடியேற்றம் விரிவாக நடந்ததும் அக்காலத்திலேயே. ஆகவே உருவாகி வந்த மலையாளத்தின் உயர்தளம் சம்ஸ்கிருதம் நோக்கிச் செல்ல அடித்தளத்தில் மக்கள்பேசும் மொழிவழக்குகள் முயங்கிக்கொண்டே இருந்தன
ஒருமொழியை அல்லது பண்பாட்டை உருவாக்கிய பரிணாம விதிகளை மிக எளிதில் அறிந்துகொள்ளலாம்.அது தொடர்ந்து சமகாலத்திலும் நடந்துகொண்டே இருக்கும். மலையாளத்தில் இன்றும் இவ்விரு போக்குகளும் தொடந்து நீடிக்கின்றன.மலையாளத்தை சற்றேனும் அறிந்த எவரும் இவ்விரு போக்குகளை காணமுடியும்.

ஏ.ஆர்.ராஜராஜ வர்மா
மலையாளத்தின் தொடக்ககால நூல்களான கண்ணச்ச ராமாயணம், பாஷாபாரத சம்புக்கள் போன்றவை பதிமூன்று பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. செவ்வியல்தமிழ், கேரளத்தின் பேச்சுத்தமிழ், சம்ஸ்கிருதம் ஆகியவற்றை கலந்து எழுதப்பட்டவைபோலத் தோன்றுகின்றன அவை.அவற்றை மலையாளப்பேரறிஞர்களை விட எளிதாக தமிழறிந்த நான் வாசிப்பேன்.
மலையாளத்தின் முதல் இலக்கியம் என்று பனாறாம் நூற்றாண்டில் உருவான துஞ்சத்து எழுத்தச்சனின் ராமாயண மகாபாரத நூல்கள் கருதப்படுகின்றன. அவை ‘நாட்டுமலையாளத்தில்’ எழுதப்பட்டவை. சம்ஸ்கிருதச் சொற்கள் மிகக் குறைவாகவும் பேச்சுவழக்கிலுள்ள மலையாளச் சொற்கள் அதிகமாகவும் உள்ளவை. அந்நிலையில் தமிழுக்கு அணுக்கமானவை. ஒரு தமிழன் காதால் கேட்டால் பெரும்பகுதி புரிந்துகொள்ளக்கூடியவை.அதாவது மக்களை நோக்கி இலக்கியத்தைக் கொண்டுவந்தவை.
எழுத்தச்சன் நில உடைமைகொண்ட உயர்சாதியினரல்ல.எழுத்தச்சன் என்பது ஆலயங்களை நம்பிவாழும் மூன்றாம்படிநிலையில் உள்ள சாதி. மக்களிடையே சோதிடம், மருத்துவம், கற்பித்தல் ஆகியவற்றைச் செய்து வாழ்பவர்கள். எழுத்தச்சனின் மக்கள்மொழிச்சார்பின் காரணம் இதுவாக இருக்கலாம். எப்படியென்றாலும் அவரது இரு நூல்களும் பெரிய மொழிநிகழ்வுகள்.
ஏறத்தாழ இதேகாலத்தில்தான மலையாளம் மறுபக்கத்தில் சம்ஸ்கிருதத்தை நோக்கி மிகநெருங்கிச்சென்றது.பிராமணர்களும் அரசகுலத்தவருமான கவிஞர்கள் மலையாளத்தை சம்ஸ்கிருதத்திலேயே எழுதத் தொடங்கினார்கள். காளிதாசன் போன்றவர்களின் சம்ஸ்கிருத நூல்களை அடியொற்றி சந்தேச காவியங்கள் [தூது] ஏராளமாக எழுதப்பட்டன. வடக்கும்கூர் மன்னரால் எழுதப்பட்ட உண்ணுநீலி சந்தேசம் அதில் முக்கியமான ஆக்கம்.
வெண்மணி அச்சன் நம்பூத்திரிப்பாடு ,வெண்மணி மகன் நம்பூதிரிப்பாடு போன்றவர்கள் சம்ஸ்கிருத அணியிலக்கணங்களை முழுமையாகவே அடியொற்றி எழுதிய சிருங்கார சுவைகொண்ட படைப்புகள் இப்போக்கின் உச்சம் எனலாம். [இ.எம்.எஸ் இக்கவிதைகளை மூரிசிருங்காரம் என்கிறார். எருமைகள் மூக்குகளையும் கொம்புகளையும் உரசிக்கொஞ்சிக் கொள்வதுபோன்ற சில்லறை சிருங்காரம்]

வள்ளத்தோள் நாராயண மேனன்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளத்தின் உயர்குடியினரால் ஒரு அறிவியக்கம் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது. நம்பூதிரிகளும் அரசகுடியினரும் நாயர்பிரபுக்களும் இதில் பெரும்பங்காற்றினர். சம்ஸ்கிருதக்கல்வியை அரசர்கள் ஊக்குவித்தனர். பெரும் சம்ஸ்கிருத அறிஞர்கள் உருவாகி வந்தனர். சம்ஸ்கிருதத்தில் இருந்து மதநூல்களும் காவியங்களும் சாஸ்திரங்களும் மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. இன்றையமலையாளத்தின் செவ்வியல் அடித்தளமாக அவையே உள்ளன
இக்காலகட்டத்தில்தான் மலையாளத்திற்கான இலக்கணம் உருவாக்கப்பட்டது.இதிலும் இரு போக்குகள் உண்டு. ஹெர்மன் குண்டர்ட் என்னும் ஏசுசபை பாதிரியார் மலையாள மொழிக்கு முதல் அகராதியை 1872 ல் உருவாக்கினார். ஆங்கில மலையாள அகராதி அது. அவர் மலையாளத்தில் மக்கள்பேசும் சொற்களை தொகுத்து மொழியின் அடித்தளத்தைக் கட்டமைத்தார்.
குண்டர்ட் கேரளத்தின் மக்கள் வாய்மொழியில் விளங்கிய பழமொழிகளைத் தொகுத்தார். கேரள நாட்டார் மரபிலிருந்து வரலாற்றைத் தொகுத்து கேரளப்பழமை என்னும் நூலை மலையாளத்தில் எழுதினார். அவர் எழுதிய நூல்கள்தான் பலவகையான பேச்சுமுறைகளாக சிதறிக்கிடந்த மலையாளத்தை அறிவியல்ரீதியாக ஒற்றைமொழியாக தொகுத்தன என்று சொல்லலாம்.

உள்ளூர் பரமேஸ்வர அய்யர்
மறுபக்கம் ஏ.ஆர்.ராஜராஜ வர்மா என்னும் அரசகுலத்துப் பெரும்பண்டிதர் 1896ல் மலையாளத்துக்கு பாணினியின் சம்ஸ்கிருத இலக்கணத்தை முழுமையாகவே அடியொற்றி முதல் இலக்கணநூலை உருவாக்கினார். கேரள பாணினீயம் என அது அழைக்கப்படுகிறது.
இந்த முரணியக்கத்தின் விளைவாக உருவாகி வந்ததே இன்றைய மலையாளம். எழுத்தச்சன், குண்டர்ட் போன்றவர்களை அதன் மக்கள் மொழிசார்ந்த அடித்தளத்தை வலுவாக்கியவர்கள் எனலாம்.வடக்கும்கூர் ராஜா, வெண்மணிநம்பூதிரிகள், ஏ.ஆர்.ராஜராஜவர்மா போன்றவர்களை அதன் அறிவியக்க உச்சியை வளர்த்தவர்கள் எனலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்த இரண்டாவது போக்குக்கே அறிவுலக மரியாதையும் அரச ஆதரவும் இருந்தன. எழுத்தச்சனின் நூல்கள் மக்களிடையே பெரும்புகழுடன் இருந்தன என்றாலும் அன்றைய பெரும்பண்டிதர்களின் அறிவுலகால் அங்கீகரிக்கப்படவில்லை.
மலையாள இலக்கிய மறுமலர்ச்சியின் முதல்மூவர் என கருதப்படுபவர்கள் வள்ளத்தோள் நாராயணமேனன், உள்ளூர் பரமேஸ்வர அய்யர், குமாரன் ஆசான் ஆகியோர். இவர்களில் முதல் இருவரும் சம்ஸ்கிருதம் நோக்கிய செவ்வியலாக்கத்தை முன்னெடுத்தவர்கள். நவீன மலையாளம் சம்ஸ்கிருதமயமானதற்கு பெரும்பங்களிப்பாற்றியவர்கள்.சம்ஸ்கிருத அணியிலக்கணத்தையும் மொழியிலக்கணத்தையும் முழுமையாகவே கடைப்பிடித்தனர். சம்ஸ்கிருத மகாகாவியப் பிரஸ்தானத்தை அடியொற்றி காவியங்களை தாங்களும் எழுதினார்கள்.

குமாரன் ஆசான்
நாராயணகுருவின் இயக்கத்தின் விளைவாக உருவான கவிஞரான குமாரன் ஆசான் இவர்களுக்கு மாறான போக்கு கொண்டவர். சம்ஸ்கிருதத்தை விட்டு விலகி மக்கள் மொழியில் எழுதியவர். அவரது கருக்களும் புதிய ஜனநாய்க உலகுக்கான அறைகூவல்களாக ஒலித்தவை.அவரது பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் அளவுக்கே புகழ்பெற்றிருந்தன. ஆசான் அன்று தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட ஈழவச்சாதியைச் சேர்ந்தவர்.
இளங்குளம் மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு ரிக்வேதிகளான நம்பூதிரிகளின் முதன்மையான குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே வேதம் கற்க அனுப்பப் பட்டவர். ரிக்வேதத்தை முறைப்படிக் கற்றவர். அன்றைய இரு அரசியல் எழுச்சிகள் அவரை பொதுவாழ்க்கைக்குக் கொண்டுவந்தன. ஒன்ற வி.டி.பட்டத்திரிப்பாடு என்னும் சமூக சீர்திருத்தவாதி தொடங்கிய ‘நம்பூதிரியை மனிதனாக்குவோம்’ என்னும் இயக்கம்.
யோகஷேமசபை என்ற பேரில் அவர் தொடங்கிய அமைப்பு நம்பூதிரி இளைஞர்களில் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அவரது அறைகூவலை ஏற்று திரிச்சூரில் நிகழ்ந்த பொதுநிகழ்ச்சியில் பூணூலை பகிரங்கமாக அறுத்தெறிந்து மதத்தைத் துறந்து அரசியலுக்கு இறங்கிய இளைஞர்களில் முதன்மையானவர் இ.எம்.எஸ்.
இ.எம்.எஸை கவர்ந்த இரண்டாவது அரசியல் இயக்கம் நாராயணகுருவின் மாணவரான டி.கெ.மாதவன் தலைமையில் காந்தியின் காங்கிரஸால் நடத்தப்பட்ட வைக்கம் போராட்டம். இ.எம்.எஸின் அரசியல் நடவடிக்கை தொடங்குவது வைக்கத்தில்தான். வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்குப்பின் காந்தி அதை பிற ஆலயங்களுக்கும் விரிவாக்கம் செய்தார். குருவாயூர் நுழைவுப்போராட்டம் உள்ளிட்டவற்றில் இ.எம்.எஸ் கலந்துகொணடார். அது அவரை காங்கிரஸ் உறுப்பினராக்கியது.


வி.டி.பட்டதிரிப்பாடு

காங்கிரஸின் பொருளியல், அரசியல் கொள்கைகளுடன் மாறுபட்டு மார்க்ஸியம் நோக்கி நகர்ந்த இ.எம்.எஸ் கேரள கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆரம்பகால நிறுவன உறுப்பினர்களில் ஒருவரானார். கேரள கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டி எழுப்பிய மக்கள் தலைவரும் சித்தாந்தியுமாக மாறினார். அறுபதாண்டுக்காலம் ஓய்வொழிவின்றி கம்யூனிஸ்டுக் கொள்கைகளை எழுதியும் பேசியும் கேரளத்தின் முக்கியமான அறிவுத்தரப்பாகச் செயல்பட்டார். அவரை ஒரு செவ்வியல் மார்க்ஸியர் எனலாம். இந்துமதம், இந்தியப்பண்பாடு ஆகியவற்றை பழைய நிலப்பிரபுத்துவகால எச்சங்கள் என்று கருதிய இ.எம்.எஸ் அவற்றை முழுமையாக நிராகரித்தார். ஆனால் அவர் உண்மையிலேயே பேரறிஞர். மார்க்ஸிய நோக்கில் பண்பாட்டையும் வரலாற்றையும் அணுகியவர். ஆகவே மதநூல்களையும், தத்துவங்களையும் மார்க்ஸிய முரணியக்க வரலாற்றுவாத அணுகுமுறையில் விரிவாக பிரித்து ஆராய்ந்தார். அவரது நூல்கள் அவ்வகையில் அரசியல், பொருளியல் மாணவர்களுக்குரிய பெரும் ஆக்கங்கள். மலையாளச் சிந்தனையின் மார்க்ஸிய எதிர்ப்பாளர்களுக்கும் அவைதான் ஆரம்பகாலப் பயிற்சிக்களங்கள்

ஜோசப் முண்டச்சேரி
இ.எம்.எஸ் அரசியல்வாதி மட்டுமல்ல. அவர் மாபெரும் இலக்கிய வரலாற்றாசிரியரும்கூட. அவரது கேரள இலக்கிய வரலாறு ஒரு முக்கியமான கொடை. அந்நூலின் முக்கியமான சாதனை என்பது அன்றுவரை மலையாள இலக்கியத்தில் ஓங்கி நின்றிருந்த சம்ஸ்கிருத செவ்வியல்மயமாதலுக்குச் சாதகமான பார்வையை உடைத்து மறு அமைப்பு செய்தது என்பதே. அதற்காக அவர் பல்லாயிரம் பக்கங்கள் தொடர்ந்து எழுதினார். அவரை ஏற்று எழுதக்கூடிய ஜோசப் முணடசேரி எம்.பி.பால் போன்ற அறிஞர்களின் ஒரு வரிசையை உருவாக்கினார். இன்று கெ.இ.என் குஞ்ஞகமது வரை நீடிப்பது அம்மரபு.
இ.எம்.எஸ் துஞ்சத்து எழுத்தச்சனை மலையாளமொழியின் முதற்பெருங்கவிஞனாக அழுத்தமாக நிலைநாட்டிய இலக்கிய விமர்சகர். குண்டர்ட் முன்வைத்த மக்கள் மொழி இலக்கியங்களை அவர் மலையாளத்தின் அடித்தளமாக சுட்டிக்காட்டினார். வள்ளத்தோளுக்கும் உள்ளூருக்கும் மேலாக குமாரன் ஆசானை முதன்மைப்படுத்தினார். ஆசானின் படைப்புகளிலேயே எவை இயல்பான மக்கள் மொழியில் உள்ளனவொ அவற்றை மேலும் அழுத்திக்காட்டினார் – உதாரணம் துரவஸ்தா முதலிய கவிதைகள்.

எம்.கோவிந்தன்
அதாவது மலையாளத்தின் சம்ஸ்கிருதம் நோக்கிய நகர்வுக்கு நேர் எதிர்த்திசையில் செயல்பட்ட மகத்தான சக்தி இ.எம்.எஸ். அவரது மலையாளம் மிக நேரடியானது. பேச்சுமொழியின் அச்சுவடிவம் போன்றது. தேவையான இடங்களிலன்றி அவர் கலைச்சொற்களைப் போடுவதில்லை.
மலையாளத்தின் சம்ஸ்கிருதமயமாக்கலின் அடுத்த அலை என்பது உண்மையில் நவீன ஐரோப்பிய சிந்தனைகள் மலையாளத்தில் வரத்தொடங்கியபோது நிகழ்ந்தது. ஐரோப்பிய மார்க்ஸியம், இருத்தலியம் போன்ற சிந்தனைகள் அறிமுகமானபோது அவற்றை கொண்டுவந்தவர்கள் கலைச்சொற்களுக்காக சம்ஸ்கிருதத்தை நாடத்தொடங்கினர். பின்நவீனத்துவ, அமைப்புவாத, பின்அமைப்புவாதச் சிந்தனையாளர்களும் அவ்வழியையே தொடர்ந்தனர். விளைவாக மலையாளத்தின் நவீனச் சிந்தனைமொழி சம்ஸ்கிருதத்தின் இன்னொரு வடிவமாகத் தெரியத் தொடங்கியது


ஆற்றூர் ரவிவர்மா
இந்த நவீன சம்ஸ்கிருதமயமாதலுக்கு எதிராக செயல்பட்ட கருத்தியல்மையம் என எம்.கோவிந்தனைச் சொல்லலாம். எம்.என்.ராயின் ராடிகால் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் தென்னகப் பொறுப்பாளராக செயல்பட்ட கோவிந்தன் நாட்டுமலையாளத்திற்காக பேசிய வலிமை வாய்ந்த குரல். எளிய பேச்சுமொழிசார்ந்த உரைநடைக்காக அவர் வாதிட்டார். கலைச்சொற்களை தமிழிலிருந்தே எடுத்துக்கொள்ளலாம் என்றார். மலையாளம் இயல்பாகவே தமிழைநோக்கி வரவேண்டும் என்றார்
எம்.கோவிந்தனின் மாணவரான ஆற்றூர் ரவிவர்மா அந்த நோக்கை தொடர்ந்து முன்வைக்கக்கூடியவர். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவரான கல்பற்றா நாராயணனும் அந்நோக்கை முன்வைக்கும் குரல். ஆற்றூரின் மாணவனான நானும் மலையாளத்தை கூடுமானவரை சம்ஸ்கிருதத்தை தவிர்த்து அதன் தனித்தன்மையுடன் எழுதுபவனாகவெ செயல்பட்டு வருகிறேன். அனைவருக்குமே தொடக்கப்புள்ளி இ.எம்.எஸ்தான் என்றால் அது மிகையல்ல
அதேசமயம் ஒரு பண்பாட்டு நிகழ்வின் ஆதார விதிகள் நெடுங்காலமாக உருவாகி வருபவை என்பதையும் கவனிக்கவேண்டும். அந்தப்பேரியக்கத்தின் திசையை மாற்றுவது எளிதல்ல. இ.எம்.எஸில் தொடங்கும் சம்ஸ்கிருத எதிர்ப்புப்போக்கு ஓர் எதிர்விசையாகச் செயல்பட முடிந்ததேயல்லாமல் மலையாளத்தில் உள்ள சம்ஸ்கிருதமயமாக்கலை தடுக்க முடியவில்லை.அங்குள்ள உயர்அறிவியக்கம் சம்ஸ்கிருதச் சார்பு கொண்டதாகையால் கலைச்சொல்லாக்கமும் அத்திசையிலேயே செல்கிறது. எனவே மலையாளத்தின் பொதுவான நகர்வு சம்ஸ்கிருதத்தை நோக்கியதாகவே இன்றும் உள்ளது.

கல்பற்றா நாராயணன்
அடிப்படைவாசிப்போ வரலாற்றுப்புரிதலோ அற்ற, ஒற்றைப்ப்புள்ளிகளின் அடிப்படையில் மட்டுமே யோசிக்கத்தெரிந்த கும்பலால் புரிந்துகொள்ளமுடியாத எத்தனையோ உள்ளோட்டங்கள் இதில் உண்டு. மலையாளத்தின் சம்ஸ்கிருதமயமாக்கலுக்காக உழைத்தவர்கள் நம்பூதிரிகளும் அரசகுலத்தவருமான முன்னோடி அறிஞர்கள். நம்பூதிரியான இ.எம்.எஸும் அரசகுலத்தவரான ஆற்றூர் ரவிவர்மாவும்தான் அவ்வடிப்படைகளை சிதறடிக்க முன்னின்றார்கள். அவர்கள் அந்த முன்னொடி அறிஞர்கள் மீது உருவாக்கிய விமர்சனங்களும் கூரியவை. கறாரானவை
அதேசமயம் அடித்தள மக்களில் இருந்து எழுந்து வந்த நவீன மார்க்ஸிய சிந்தனையாளர்கள், பின்நவீனத்துவர்கள் மலையாளத்தை சம்ஸ்கிருதம் நோக்கிக் கொண்டுசென்றனர். தங்கள் சொல்லாடல்கள் மிகச்சரியாக அமையவேண்டும், அவை மரபுசார்ந்த சம்ஸ்கிருத அறிவியக்கத்துக்கு நிகரான மாற்று அறிவியக்கமாக நிலைநிற்கவேண்டுமென்றே அவர்கள் எண்ணினர். இருபதாம் நூற்றாண்டில் கேரளத்தின் சம்ஸ்கிருத அறிஞர்களில் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் ஈழவர்கள்.
இலக்கியத்தின் செயல்பாடுகள் அத்தகையவை. தாசில்தார் அலுவலகத்தின் எளிய சாதிச்சான்றிதழ் முத்திரைகளுடன் ஆராயும் அசடுகளால் புரிந்துகொள்ளமுடியாதவை. எந்த மாபெரும் சிந்தனையாளனாக இருந்தாலும் அவனை அறிய அவன் சாதியை மட்டும் அறிந்தால்போதுமென நினைக்கும் இந்தக் கீழ்த்தரச் சாதிவெறியர்கள்தான் நமது பண்பாட்டின் மலினங்கள்.
ஜெ .jeyamohan.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக