திங்கள், 9 ஜூன், 2014

மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிக்கும் தமிழ் திரை உலகம்

நாமே அறியாமல் நம்மை கொள்ளை அடிக்கிறார்கள். மெய்மறந்து திரையில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நம் பாக்கெட்டில் இருந்து பணம் உருவுகிறார்கள். ஐந்தோ பத்தோ அல்ல. வருடா வருடம் பல நூறு கோடி ரூபாய். யார் அப்பன் வீட்டு காசு?‘கோச்சடையான் படத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரிவிலக்கின் பலன் மக்களுக்கு தரப்பட வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற உத்தரவு வந்தபோது நிறைய பேர் ஆச்சரியமாக அச்செய்தியை வாசித்தார்கள். சினிமாவில் வரிவிலக்கு என்பது மக்களுக்கான உரிமை என்பதையே முதன்முதலாக இப்போதுதான் அறிகிறார்கள். தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக சில திரையரங்குகள் மட்டுமே அந்த உத்தரவினை ஏற்று கேளிக்கை வரி வசூலிக்காமல் கட்டணத்தை குறைத்தன. சென்னையில் தேவி சினிப்ளக்ஸ் போன்ற அரங்குகளின் வழக்கமாக டிக்கெட் கட்டணம் ரூபாய் நூற்றி இருபது. ஆனால் கோச்சடையான் திரைப்படத்துக்கு எண்பத்தி நான்கு ரூபாய் முப்பது காசு மட்டுமே வசூலித்தார்கள். படம் பார்த்த ஒவ்வொரு ரசிகருக்கும் வரிவிலக்கின் காரணமாக முப்பத்தைந்து ரூபாய் எழுபது காசு லாபம். அப்படியெனில் கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களுக்கும் கூட முழுமையான டிக்கெட் கட்டணமாக நூற்றி இருபது ரூபாய்தானே கொடுத்துக் கொண்டிருந்தோம்? அந்த பணம் அரசின் கஜானாவுக்கும் போகவில்லை எனில், யார் எடுத்துச் சென்றார்கள்.
இப்போதும் கோச்சடையானை திரையிட்டிருக்கும் பெரும்பாலான திரையரங்குகள் கூட வரிவிலக்கின் பலனை மக்களுக்கு தராமல் முழுமையான கட்டணம் வசூலிக்கிறார்களே. இதையெல்லாம் யார்தான் தட்டி கேட்கப் போகிறார்கள்.

கேளிக்கைக்கு ஏன் வரி?

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் வெள்ளையருக்கு எதிரான கூட்டங்கள் கலை கலாச்சார நிகழ்வுகளின் பெயரால் கூட்டப்பட்டன. நாடக அரங்குகளுக்கோ, சினிமா திரையரங்குகளுக்கோ கேளிக்கைக்கு வருவது மாதிரி மக்கள் வந்து சுதந்திரப் போருக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. போராட்டங்களுக்கு நிதி வசூல் செய்யப்பட்டது. இம்மாதிரியான கூட்டங்களை கட்டுப்படுத்தவே பிரிட்டிஷ் அரசாங்கம் ‘கேளிக்கை வரி’ முறையை அறிமுகப்படுத்தியது. கூட்டத்துக்கு வரக்கூடிய ஒவ்வொருவரும் தான் பார்க்க வேண்டிய நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிக்கான கட்டணத்தோடு கூடுதலாக குறிப்பிட்ட சதவிகித பணத்தை அரசுக்கு பொழுதுபோக்கு வரியாக செலுத்த வேண்டும்.

வெள்ளையர் போன பிறகும் மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கும் வண்ணமாக கேளிக்கைவரி வசூலிப்பதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே சேர்த்து விட்டார்கள்.

சினிமாக்களுக்கு மட்டுமின்றி தொலைக்காட்சி சேவைகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு மையங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஒரு மாநில அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாக கிடைக்கிறது. ஆனால் வருவாயில் பிரதானமான பங்கு சினிமாவில் இருந்தே கிடைக்கும்.

வரிவிலக்கு : யாருக்கு பலன் கிடைக்க வேண்டும்?

திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்பது ஆடிக்கொரு முறை அமாவசைக்கு ஒருமுறை முன்பெல்லாம் நிகழும் அதிசயம். ஏதேனும் தேசத்தலைவர்கள் குறித்த படங்களுக்கோ அல்லது நல்ல செய்திகளை மக்களுக்கு தாங்கிவரும் பிரச்சாரப் படங்களுக்கோ மட்டும்தான் வரிவிலக்கு கிடைக்கும்.

அவ்வாறு வரிவிலக்கு கிடைத்த படங்களுக்கு திரையரங்கில் கட்டணம் வசூலிக்கும்போது முழுமையான டிக்கெட் கட்டணமாக இல்லாமல் வரியை கழித்துக்கொண்டது போக மீதி தொகையைதான் கவுண்டரில் வாங்குவார்கள். எனவே கேளிக்கை வரியை விலக்கினால் அதன் பலன் காசு கொடுத்து டிக்கெட் வாங்குபவருக்குதான் போய் சேரவேண்டும் என்பதே நடைமுறை.

வரிவிலக்கு எனும்போது யாருக்கு வரி விதிக்கப்படுகிறதோ, அவருக்குதான் விலக்கு என்பதே சரியான லாஜிக். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் சினிமாவுக்கு கேளிக்கைக்கு வரிவிலக்கு கொடுத்தாலும், அதை படம் பார்ப்பவர்கள் செலுத்துகிறோம். வருமானமோ அரசின் கஜானாவுக்கும் வந்து சேருவதில்லை. இடையில் இருப்பவர்கள் தங்களுக்குள் அதை பிரித்துக் கொள்ளும் அநியாயம் பகிரங்கமாகவே கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் ஏன் தட்டிக் கேட்பதில்லை என்கிற கேள்விக்கான விடை ஊரறிந்த ரகசியம். நாம் சொல்லிதான் உங்களுக்கு தெரியவேண்டுமா?

அரசியல் கேளிக்கை

முந்தைய திமுக அரசுதான் சினிமாக்காரர்களை ‘கூல்’ செய்வதற்காக தமிழ் வளர்ச்சி (!) என்கிற பெயரில் கேளிக்கை வரிவிலக்கு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. தமிழில் தலைப்பு வைக்கப்படும் தமிழ்ப் படங்களுக்கு வரிவிலக்கு என்று வித்தியாசமாக தமிழை வளர்த்தார்கள். இதற்காக அன்றைய முதல்வருக்கு சினிமாக்காரர்கள் அவ்வப்போது பாராட்டுவிழாக்கள் நடத்தி அசரடித்தார்கள். அன்றைய தமிழக முதல்வரின் உறவினர்கள் ஏகப்பட்ட பேர் சினிமாத்துறையில் குதித்து, படத்தயாரிப்புகளில் ஈடுபட்டு கேளிக்கைவரி விலக்கின் பலன்களை அனுபவித்தார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாகவே நடந்ததுதான்.

ஆட்சி மாற்றம் நடந்தபிறகாவது இந்த கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு அரசுக்கு முறையாக கேளிக்கைவரியாக கிடைக்கக்கூடிய முப்பது சதவிகிதத்தை முறையாக வசூலிப்பார்கள் என்று பார்த்தால், இவர்கள் வேறு மாதிரியாக முந்தைய ஆட்சியின் அதே மரபை தொடர்ந்தார்கள். அரசுக்கும் வருமானமில்லை. மக்களுக்கும் வரிவிலக்கினால் பிரயோசனமில்லை என்கிற போக்கே இன்னமும் தொடர்கிறது. அதிலும் இப்போதைய அரசு தங்களுக்கு வேண்டுபவர்களுக்கு வரிவிலக்கும், வேண்டாதவர்களுக்கு காரணமேயின்றி வரிவிலக்கு மறுப்பும் செய்து குழப்பங்கள் ஏற்படுத்துவதாக ஏராளமான புகார்கள் குவிகின்றன. இன்றைய முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தி ஜமாய்த்துவிட்டார்கள் அதே சினிமாக்காரர்கள்.

அரசுக்கு எவ்வளவு இழப்பு?

இந்த கேளிக்கை வரி விலக்கில் அரசுக்கு இதுவரை குறைந்தபட்சம் ஐநூறு கோடி ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. 2006ஆம் ஆண்டு இந்த முழு வரிவிலக்கு கலாச்சாரம் வந்தபிறகு 2007-08ஆம் ஆண்டுகளில் கேளிக்கைவரியாக சுமார் பதினாறு கோடி ரூபாய்தான் அரசுக்கு வருமானமாக வந்தது. முந்தைய ஆண்டுகளில் இது வருடத்துக்கு சராசரியாக எழுபத்தைந்து கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்து வந்தது. மற்ற மொழி படங்கள், டப்பிங் படங்கள் மூலமாக மட்டுமே கேளிக்கை வருவாய் வரிவசூல் என்று நிலைமை சுணங்கி விட்டது. தமிழ் படங்கள் ஒவ்வொன்றும் ஐம்பது கோடி வசூல், நூறு கோடி வசூல் என்று பெருமையாக பேசிக்கொள்கிறோம். அதன் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வருவாய் கிடைப்பதில்லை. அல்லது மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய சலுகையும் கிடைப்பதில்லை. சட்டப்பூர்வமாகவே மக்களின் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இது மட்டுமா?

கேளிக்கை வரி விலக்கில் மட்டுமல்ல. தியேட்டருக்கு வரும் ரசிகனிடமிருந்து எல்லாவகையிலும் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

அதிகபட்ச கட்டண விகிதத்தை அரசு நிர்ணயித்திருக்கிறது. எல்லா வசதிகளும் கொண்ட மல்ட்டிப்ளக்ஸ் அரங்குகளிலேயே கூட அதிகபட்ச டிக்கெட் கட்டணம் ரூ.120/-தான். ஆனால் ஏதேனும் பெரிய நட்சத்திரத்தின் புதுப்பட வெளியீட்டின்போது டப்பா தியேட்டர் கூட கவுண்டரிலேயே இருநூறு ரூபாய் என்று டிக்கெட்டை ப்ளாக்கில் விற்பது அனாயசமாக நடக்கிறது. இந்த அநியாயத்தை எல்லாம் தட்டி கேட்க வரும் அதிகாரிகளின் பறக்கும் படை, புதுப்படம் பார்த்துவிட்டு ‘லம்பாக’ திருப்தியாக கிளம்புகிறார்கள். ஆன்லைனிலேயே ரிசர்வேஷனிலேயே 200 ரூபாய் என்று வெளிப்படையாக டிக்கெட் ரேட்டை நிர்ணயிக்கும் விருகம்பாக்கம் தேவி கருமாரி மாதிரி தியேட்டரை இதுவரை ஒரு அரசு அதிகாரியாவது தட்டிக் கேட்டதுண்டா?

அடுத்து பார்க்கிங். ஒரு இரு சக்கரவாகனத்துக்கு அதிகபட்சமாக பத்து ரூபாயும், காருக்கு இருபத்தைந்து ரூபாய் வரையும் வாங்கலாம். வெயிலிலோ, மழையிலோ நம் வாகனத்தை எவ்விதத்திலும் காக்காத திறந்தவெளி பார்க்கிங்குக்கு இரண்டரை, மூன்று மணி நேரத்துக்கு இதுவே அதிகம். ஆனால் டூவீலர்களுக்கே முப்பது ரூபாய் கூட நிறைய அரங்குகளில் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள். மால்கள் எனப்படும் வணிக அரங்குகளில் இருக்கும் திரையரங்கங்களில் தனியாக பார்க்கிங் வசதி இல்லை. அங்கிருக்கும் பார்க்கிங்குகளில் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் (வாரயிறுதிகளில் டபுள் ரேட்) என்று கூறி நூறு, நூற்றி ஐம்பது என்று பட்டவர்த்தனமாகவே திருடுகிறார்கள். படம் பார்க்கவே நூற்றி இருபது ரூபாய் டிக்கெட்டுக்கு செலவழிக்கும் ஒருவன், அதே நூற்றி இருபது ரூபாயை வெறும் பார்க்கிங் கட்டணமாகவும் அழவேண்டியிருக்கிறது என்றால் இதற்கு பெயர் திருட்டு அல்லாமல் வேறென்ன?

அடுத்து இடைவேளைகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் கொள்ளை. அதிகபட்ச சில்லறை விலைக்கும், நாம் தியேட்டர் கேண்டீனில் வாங்கும் விலைக்கும் சம்பந்தமே இருக்காது. நகர்ப்புறங்களில் இருக்கும் தியேட்டர்களில் சும்மா மெல்லும் பாப்கார்னே எழுபத்தைந்து ரூபாய் எனும்போது, அவ்வளவு பணத்தை கொட்டியழுது தின்பவனுக்கு வயிறு எரியாதா? பத்து ரூபாய்க்கும், பதினைந்து ரூபாய்க்கும் வெளியே நாம் குடிக்க முடிகிற கூல்ட்ரிங்ஸ், தியேட்டர்களில் அறுபது ரூபாய், நூறு ரூபாய் என்று டோக்கன் போட்டு விற்கப்படுகிறது. இப்படி கொள்ளை அடிக்கத்தான் வெளியே இருந்து ஒரு முறுக்கையோ, சாக்லேட்டையோ கூட நாம் உள்ளே கொண்டுவந்து விடக்கூடாது என்று தியேட்டர் வாசலிலேயே நம்மை சோதித்து உள்ளே அனுப்புகிறார்கள். பெரும் மக்கள் கூடும் அரங்குகளில் தாகத்துக்கு தண்ணீர் கூட வைக்காமல், ‘பாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கொள்ளையடிக்கிறார்களே. இப்படி அநியாயமாக சம்பாதிக்கும் காசு சினிமாக்காரர்களுக்கு நிலைக்குமா என்று மக்கள் சாபமிடுவது நியாயமாகதான் தோன்றுகிறது. 3டி படமாக இருந்தால் கண்ணாடிக்கு முப்பது ரூபாய், நாற்பது ரூபாய் என்று தாந்தோன்றித்தனமாக வாடகை வாங்கி நம் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள்.

பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இன்றைய நிலையில் குறைந்தது ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு இல்லாமல் ஒரு குடும்பம் தியேட்டர் பக்கம் வந்துவிட முடியுமா என்ன? இப்படியாக தியேட்டருக்கு வரும் ஒவ்வொரு ரசிகனையும் ஒட்டு மொத்தமாக உருவி அனுப்பும் சினிமாக்காரர்கள் திருட்டு டிவிடியால்தான் தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை என்று புலம்புவதை விட மோசமான ஜோக் வேறெதாவது உண்டா?

என்னதான் தீர்வு?

அரசுதான் தீர்வு. அதிகாரிகள்தான் தீர்வு. தமிழ் வளர்ச்சி, சினிமாவை வளர்க்கிறோம் என்றெல்லாம் கூறிக்கொண்டு கேளிக்கை வரிவிலக்கினை அரசுகள் தொடர்ந்து வருவதே அபத்தமான நடவடிக்கை. சினிமாவை சினிமாக்காரர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். அரசுக்கு இதுதான் வேலையா? ஒருவேளை வரிவிலக்கினை தொடர்ந்து கொடுப்போம் என்றால் அது மக்களுக்கு பலன் தரும் விதத்தில்தான் இருக்க வேண்டும். மக்கள் பணத்தை தூக்கி சினிமாக்காரர்களுக்கு தர அரசுக்கு எந்த உரிமையுமில்லை.

மாநகராட்சிகளில், நகராட்சிகளில், பேரூராட்சிகளில், ஊராட்சிகளில் திரையரங்குகளுக்கு அதிகபட்ச கட்டணம், குறைந்தபட்ச கட்டணம் எவ்வளவு என்று வரையறை செய்து வெளிப்படையாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். போலவே பார்க்கிங் கட்டணத்தையும் முறைபடுத்தி மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ரசிகர்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரமுடியாத மால்களில் இயங்கும் திரையரங்குகளின் லைசென்ஸை ரத்து செய்யவேண்டும்.

இதையெல்லாம் செய்யாவிட்டால் கேளிக்கைவரி விலக்கின் பலன் மக்களுக்கும் கிடைக்காமல், அரசுக்கும் கிடைக்காமல் எப்படி சினிமாக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறதோ, அதுபோல சினிமாக்காரர்களின் உழைப்பும், பணமும் அசால்டாக திருட்டு டிவிடி வியாபாரிகளால் கொள்ளையடிக்கப்படும். மக்கள் மத்தியில் ராபின்ஹூட்டுகளாக திருட்டு டிவிடி ஏஜெண்டுகள் உருவாகியே தீருவார்கள். இதை தடுக்கவே முடியாது.

கேட்டால் கிடைக்கும்

“அரசு மூலமாகவோ, நீதிமன்றங்கள் மூலமாகவோ நீதி பெறுவதெல்லாம் அடுத்த கட்டம். விதிகளுக்கு மாறாக ஒரு விஷயம் நடந்தால், சம்பந்தப்பட்ட நுகர்வோர் உடனடியாக சம்பவ இடத்திலேயே அதை தட்டிக் கேட்டு நீதி பெறவேண்டும். ஓட்டலில் சாப்பிடப் போனால் தண்ணீர் இலவசமாக கொடுக்க வேண்டும். பாட்டில் வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் அங்கேயே பிரச்சினை செய்ய வேண்டும். தியேட்டர்களிலும் ஒவ்வொரு உரிமையையும் நாம் கேட்டுதான் வாங்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில் கூட இருப்பவர்களை சேர்த்துக்கொண்டு நியாயத்தை தட்டி கேட்க வேண்டும். எதையுமே கேட்டால் கிடைக்கும். கிடைக்காவிட்டால் மீண்டும் கேளுங்கள். கொடுக்காதவர்களை புறக்கணியுங்கள். மக்கள் பங்கேற்பில்லாமல் யாரால் என்னதான் செய்துவிட முடியும்?” என்று கேட்கிறார் இயக்குனர் கேபிள் சங்கர். இவர் ‘கேட்டால் கிடைக்கும்’ என்கிற ஆன்லைன் நுகர்வோர் உரிமை அமைப்பினை நடத்தி வருகிறார். சென்னை திரையரங்குகளில் ‘கேட்டால் கிடைக்கும்’ அமைப்பினர் பிரச்சினைகளை செய்து, சில நியாயமான உரிமைகளை கேட்டு வாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர் சொல்வது மாதிரி சினிமாக்காரர்களை கடைசியாக கேட்டுப் பார்ப்போம். கிடைத்தால் சரி. இல்லாவிட்டால் புறக்கணிப்போம். டிவியிலும் புதுப்படம் போட்த்தானே செய்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

(நன்றி : புதிய தலைமுறை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக