சனி, 21 ஜூன், 2014

அகதி முகாம் மாணவிக்கு மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு?

xnandhiniபிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி, அழைப்புக்கடிதம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு இலங்கையிலிருந்து வந்த 164 குடும்பங்களைச் சேர்ந்த 523 தமிழர்கள் இங்கு தங்கியுள்ளனர். இவர்களில், பெயிண்டிங் தொழி லாளியான ராஜாவின் குடும்பமும் ஒன்று. தனது தாய் ரூபாவதி மற்றும் மூன்று தம்பிகளுடன், இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜாவுக்கும், அதே முகாமைச் சேர்ந்த அல்லிமலருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந் தது. இவர்களுக்கு நந்தினி உள்பட 2 மகள்களும், மகனும் உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்த நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மருத்துவம் படிக்க விரும்பினார் நந்தினி. அதற்கான கட் ஆப் மதிப்பெண் 197.50 இருந்த நிலையில், மருத்துவ கலந்தாய் வுக்காக விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவக் கலந்தாய் வில் பங்கேற்க அவருக்கு அழைப் புக் கடிதம் வரவில்லை. 197.50 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று (21-ம் தேதி) மருத்துவக் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், அழைப்புக் கடிதம் வராததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது நந்தினியின் குடும்பம்.
இது குறித்து நந்தினி கூறிய தாவது: மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிதேன். விண்ணப்ப எண் (245143), ஏ.ஆர்.எண் (1529), ரேண்டம் எண் (6965643762) ஆகிய மூன்று எண்களும் எனக்கு கிடைத்தன. ஆனால், எனது கட் ஆப் 197.50 பெற்றிருந்தவர்கள் பெயர் பட்டியலில் எனது பெயர் இல்லை. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதமும் வரவில்லை. கலந்தாய் வில் பங்கேற்க எனது தந்தையுடன் சென்னை செல்கிறேன். கலந்தாய் வில் அனுமதிக்கவில்லையெனில், முதல்வரை சந்தித்து முறையிட உள்ளேன் என்றார்.
அதிகாரி விளக்கம்
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் (டி.எம்.இ.,) கூறுகையில், பொதுவாக, விண்ணப்பித்த அனைவருக்கும், ரேண்டம் எண் வழங்கப்படும். அதில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெயர் மட்டும், புரவிஷனல் பட்டியலில் வெளியிடுவோம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்றனர். salasalappu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக