செவ்வாய், 24 ஜூன், 2014

ரிலையன்ஸை புறக்கணிப்போம்'- ட்விட்டரில் இணையவாசிகள் போர்க்கொடி

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில், 'ரிலையன்ஸை புறக்கணிப்போம்' என்ற கோஷத்தை எழுப்பி, இந்திய இணையவாசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனத்தை ஈர்த்தனர்.
நிகழ்நேரத்தில் முக்கிய நிகழ்வுகள், பிரச்சினைகள், சுவாரசியங்கள், பிரபலங்கள், முக்கியச் செய்திகளையொட்டி, ட்விட்டர் தளத்தில் காரசார விவாதங்கள் அரங்கேறும்.
அந்த வகையில், இன்று காலை முதலே #BoycottReliance (ரிலையன்ஸை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.
ஹாஷ்டேகை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ அல்லது விவகாரத்தையோ எடுத்துக்கொண்டு, அதையொட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்து பதிவிடுவதால், அது ட்ரெண்டிங்கில் முன்னிலை வகிக்கும். ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேகை பயன்படுத்தி, நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் பதிவாகும்போது, அந்த ஹேஷ்டேக் தேச அளவில் பிரபலமடையும்.
ரிலையன்ஸுக்கு எதிரான கோஷம் ஏன்?
#BoycottReliance என்ற ஹேஷ்டேக் இன்று பிரபலமடைந்ததற்கு, ஆம் ஆத்மி கட்சியினரே காரணம். இவர்கள் அம்பலமாக்கிய ரிலையன்ஸ் குறித்த ஒரு விவகாரத்தைக் கொண்டு, ட்விட்டர் இணையவாசிகள் பலதரப்பட்ட கருத்துக்களையும் விவாதத்தையும் தொடுத்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மக்கள் மீது பெரும் சுமையாக உள்ளது.
ஏற்கெனவே சமையல் எரிவாயு, வணிக எரிவாயு சிலிண்டர்கள் மீதான மானியம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய அரசு மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
ஆனால், 'பல ஆண்டுகளாகவே எரிவாயு விலை உயர்வுக்கு காரணம், மத்திய அரசுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நெருக்கடி
தருவதுதான். ரிலையன்ஸ் நிறுவனம் தன்னிச்சையாக எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துகிறது. பெட்ரோலியத் துறைக்கு இது தொடர்பாக மக்கள் விரோத யோசனைகளை தருவதும் ரிலையன்ஸ்தான்' என்று ட்விட்டரில் பலரும் கருத்துகளைக் குவித்தவண்ணம் உள்ளனர்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரது தொடர்பான விவகாரங்கள் தங்களிடம் உள்ளதாக அவ்வப்போது அம்பலப்படுத்தும் ஆம் ஆத்மி கட்சி, ரிலையன்ஸ் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது.
"கிருஷ்ணா – கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயு, இந்திய அரசுக்குச் சொந்தமானது. அதற்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உரிமை கொண்டாடுவதும், கேஜி பேஸின் எனப்படும் கிருஷ்ணா – கோதாவரிப் படுகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது பெரும் அளவில் இயற்கை எரிவாயுவை எடுத்து, லாபம் பார்த்து வருவதாகவும், இந்த எரிவாயுவை மீண்டும் அரசின் மூலம் மக்களுக்கே விற்று மிக பெரிய அளவில் முறைகேடு செய்து வருகிறது" என்று சிஏஜி (கணக்கு தணிக்கை ஆணயம்) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி நேற்று குற்றம்சாட்டியது.
ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டை கண்ட ட்விட்டர்வாசிகள், இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் விமர்சனங்களையும், கருத்துக்களையும் குவித்து #BoycottReliance ஹாஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்டிங்காக வருவதற்கு வகை செய்துள்ளனர்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸால்தான், எரிவாயு விலை உயர்வு, மின்சார தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை
உயர்வு ஆகியவற்றை மக்கள் சந்திக்கின்றனர். மக்களை இருளிலும் நெருக்கடியிலும் தள்ளிவிட்டு ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் பார்த்து உலக அளவில் மிக பெரிய முதலாளிகள் என்று பெயரை வாங்கி, இந்தியாவில் அரசியல் செய்வதாகவும், இதற்கு சாமானிய மக்கள் பலியாவதாகவும் ட்விட்டரில் பலரும் தங்கள் ட்வீட்டுகளை பகிர்ந்து, ரிலையன்ஸுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகினறனர்.
மற்றொரு தரப்பினரோ, நாட்டின் வளர்ச்சிக்கு ரிலையன்ஸ்தான் காரணம் என்றும், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைய தலைமுறையினருக்கு ரிலையன்ஸ் வேலைவாய்ப்பு அளித்து வாழ்வாதாரத்தை உயர்த்தியதாகவும், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் நிதியில் வாழும் ஆம் ஆத்மிக்கு இது பிடிக்காமல் இவ்வாறு முதிர்ச்சியில்லாத ஒரு குற்றச்சாட்டை வைப்பதாகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக