புதன், 25 ஜூன், 2014

பூட்டான் வென்ற பூவேந்தே வாழ்க ! பூடானை நேபாளாக்கிய புகழ்வேந்தே !

பூடான் நாடாளுமன்றம்பிரதமரின் நேபாள பயணம் மகத்தான வெற்றி பெற்றது என்று கேள்விப்பட்டேன்…. இல்லை இல்லை லடாக் பயணம் … கொஞ்சம் இருங்க, வாய் தவறி விட்டது. பூடான் என்றுதான் சொல்ல வந்தேன்.”
பூடான் நாடாளுமன்றத்தில் மோடியின் ‘வீர’ உரை
“இன்றைக்கு பூடானையும் நேபாளத்தையும் குளறுபடி செய்யும் மோடி நாளைக்கு ஐநா அல்லது பிரிக் (BRIC) கூட்டங்களில் சொதப்பி இந்தியாவை அவமானப்படுத்த மாட்டார் என்று நம்புவோம்”
“குஜராத்தி மொழியில் நேபாளம் என்றால் பூடான் என்று பொருளாக இருக்கும்”
“மோடி புவியியலில் கொஞ்சம் வீக் போல, அதுதான் பூடானுக்கு பதிலாக நேபாள்னு சொல்லியிருக்கிறார். முனபு (தேர்தல் பிரச்சாரத்தின் போது), சந்திரகுப்த மவுரியரையும் தட்சசீலத்தையும் பீகாருடன் இணைத்து பேசி குழப்பியவர்தான்”

“நம்ம பிரதமர் சொன்னதை உண்மையாக்குவதற்கு மாண்புமிகு மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி என்.சி.ஈ.ஆர்.டி வரலாற்று புத்தகங்களை திருத்தி பூடானை நேபாளத்தின் பகுதியாக மாற்ற உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.”
சமீபத்தில் பூடான் பயணம் மேற்கொண்ட மோடி, இணையத்தில் இப்படி கலாய்க்கப்பட்ட போது, சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஜிங்குஜா அடிக்கும் மோடி இணையப் படை  எங்கோ மாயமாகியிருந்தது.
ஜூன் 15, 16 தேதிகளில் பூடானுக்கு 2 நாட்கள் அரசு முறை பயணமாக சென்ற மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பூடானுக்கு பதில் நேபாளம் என்று பேசி சொதப்பினார். “நான் ஜனநாயக மதிப்பீடுகளையும், மக்களின் உரிமைகளையும் பாதுகாத்த நேபாள…. பூடான் அரச குடும்பத்தை பாராட்டி என் உரையை ஆரம்பிக்கிறேன்.” என்று உளறியதோடு பின்னர் ஒரு இடத்தில் பூடான் என்பதற்கு பதில் லடாக் என்றும் பேசினார்.
மோடி பதவியேற்பு விழா
மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட தெற்காசிய நாட்டு தலைவர்கள்.
சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் பதவி ஏற்ற இந்துத்துவ பிரதமர் என்ற பூரிப்பில் தனது பதவி ஏற்பு விழாவுக்கு தெற்காசிய தலைவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டாடினார் மோடி. ஆனால், ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு, நவாஸ் ஷெரீபை அழைத்ததில் இந்துமதவெறியரில் சிலர் அதிருப்தி என்று அந்த முடிசூட்டு விழா முழுமையாக பலனளிக்கவில்லை. இந்நிலையில், மோடியின் அடுத்த கட்ட விளம்பர அத்தியாயமாக வெற்றிகரமான வெளிநாட்டு பயணத்தை நடத்திக் காட்டுவோம் என்று சிந்தன் பைட்டக் நடத்தியிருக்கின்றனர் பா.ஜ.கவினர். “நம்ம ஏரியாவை விட்டு அமெரிக்கா, ஐரோப்பா என்று போனால் ‘மோடி அளவு’ பந்தாவுக்கு ஸ்கோப் குறைவு, ஏதாவது அசம்பாவிதமாக முட்டை வீசும் சம்பவம், அல்லது செருப்பு வீசும் சம்பவம் கூட நடந்து விடலாம். அதனால், முதலில் நம்ம பேட்டையான தெற்கு ஆசிய பிராந்தியத்தில் நாமதான் தாதா என்று உறுதி செய்து கொள்வோம்.” என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
அப்படி தெற்கு ஆசியாவில் பயணம் மேற்கொள்வதிலும் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. இலங்கைக்கு போகலாம் என்றால் ‘ஜெயலலிதா ஏதாவது கடிதம் எழுதி விடுவாரோ, வைகோ டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி விடுவாரோ’ என்று யோசிக்க வேண்டும், வங்கதேசத்துக்குப் போகலாம் என்றால் மம்தா தீதியின் கண் உருட்டலை சமாளிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு போக வேண்டுமென்றால், ராஜ் தாக்கரேவிடம் முன் ஜாமீன் வாங்கிக் கொள்ள வேண்டியிருந்திருக்கும். நேபாளத்திற்கு போனால் மாவோயிஸ்டுகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்.
அதனால், யாரையும் துன்புறுத்தாத, இந்தியாவின் தயவில் வாழும் பிள்ளைப் பூச்சி நாடு பூடானுக்கு போய் அந்நாட்டு அரசின் மகத்தான வரவேற்பை பெற முடிவு செய்திருக்கிறார் 56 இஞ்சு மார்பு படைத்த வீரர் நரேந்திர மோடி.
ராஜதந்திரம் மிக்க இந்த ஒற்றை முடிவின் மூலம் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார் மோடி. அவற்றில் முக்கியமானது, தினமணி உள்ளிட்டு நாடெங்கிலும் வெறும் வாயிலேயே மோடியின் பஜனை பாடும் பக்தர்களுக்கு மெல்லுவதற்கு நிறைய அவல் கிடைத்தது.
பூடான் மன்னர் - மோடி
பூடான் மன்னருடன் மோடி
பூடானில் மொத்தமே ஏழேகால் லட்சம் மக்கள்தான் (மதுரை மாநகரை விட குறைவு, திருநெல்வேலியை விட கொஞ்சம் அதிகம்) வாழ்கிறார்கள்; 1949-லிருந்தே இந்திய அரசுதான் அந்நாட்டின் திட்டச் செலவுகளுக்கு நிதி கொடுத்து அதன் வெளியுறவுக் கொள்கையையும், பொருளாதாரக் கொள்கையையும் கட்டுப்படுத்துகிறது போன்ற விபரங்களை எல்லாம் யாரும் தேடிக் கொண்டிருக்கவா போகிறார்கள். இருந்தாலும் பூடான் போனாலும், வாஷிங்டன் போனாலும் வெளிநாட்டுப் பயணம், பயணம்தான். அந்த வகையில் மோடியின் முதல் வெளிநாட்டு பயணத் திட்டம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
பூடான் அரசின் மொத்த ஆண்டு வருமானம் $27 கோடி (சுமார் ரூ 1,600 கோடி) ஆனால் செலவுகளோ ஆண்டுக்கு $35 கோடி (சுமார் ரூ 2,100 கோடி). இந்த செலவுகளில் சுமார் 60% ‘மானியமாக’ கொடுப்பது யார் என்று பார்த்தால் அது இந்திய அரசுதான். 1990 வரை பெருமளவு இயற்கை பொருளாதாரம் சார்ந்து வாழ்ந்து வந்த பூடானில் கடந்த 20 ஆண்டுகளில், 5 சதவீதமே உள்ள ஆளும் அரச குடும்பத்தினர் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், ஆடம்பர வீடுகள், நவீன நுகர்வு பொருட்கள் என்று வாழ்வதற்குத்தான் இந்த பணம் திருப்பி விடப்படுகிறதே தவிர, சாதாரண பூடான் மக்களின் வாழ்க்கையில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தி விடவில்லை.
இந்திய அரசோ இத்தகைய நிதி உதவி மூலம் பூடானில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான காண்டிராக்டுகளை இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வாங்கி தருவதோடு, இயற்கை வளங்களும் நீர்வளமும் நிறைந்த அந்நாட்டிலிருந்து மின்சாரத்தை மலிவு விலையில் வாங்கிக் கொள்கிறது. பூடானிலிருந்து பெறும் மின்சாரத்துக்கு விலையாக இந்திய அரசு கொடுக்கும் தொகையிலிருந்து வாங்கிய கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல், கடனை கட்டவே கடன் வாங்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது பூடான்.
இத்தகைய நாட்டுக்கு சென்று திரும்பி ‘பூடான் கொண்டான்’ என்று பெயர் சூடிக் கொள்ளும் முயற்சியிலான மோடியின் பயணத்தை தினமணி பரபரப்பாக படம் பிடித்தது.
மோடியின் பயண முடிவு வெளியான ஜூன் 11-ம் தேதி பிரதமர் மோடி 15-இல் பூடான் பயணம் என்ற தலைப்பிலும், ஜூன் 14-ம் தேதி பிரதமர் மோடி நாளை பூடான் பயணம் என்ற தலைப்பிலும், ஜூன் 15 அன்று பிரதமர் மோடி இன்று பூடான் பயணம் செய்திகளை வெளியிட்டதோடு 16, 17, 18 தேதிகளில் மோடி பூடானில் வரவேற்கப்பட்டது, அங்கு அவர் நடத்திய உரைகள், வெளியிட்ட அறிக்கைகள், திறந்து வைத்த திட்டங்கள் என்று தடபுடல் செய்ததோடு இந்திய-பூடான் உறவு குறித்து இறுதியில் ஒரு தலையங்கத்தையும் தீட்டியது. மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு போனால், “உசிலையை வென்ற அழகிரி அண்ணே நீ வாழ்க” என்று உடன்பிறப்புகள் விளம்பரம் செய்வது போல தினமணி பரவசமாக எழுதியது.
உண்மை நிலவரம் என்ன?
அணிவகுப்பு மரியாதை - மோடி
மோடிக்கு பூடானில் அணிவகுப்பு மரியாதை
பூடானின் முந்தைய பிரதமர் ஜிக்மே தின்லே பிற நாடுகளுடன் குறிப்பாக சீனாவுடன் பூடானின் உறவை வளர்க்க முயற்சித்ததை பார்த்து கடுப்பான இந்திய ஆளும் வர்க்கங்கள் பூடானுக்கு பெட்ரோலிய மானியத்தை ரத்து செய்தும், பொருட்களின் ஏற்றுமதியை முடக்கியும் அந்நாட்டு அரச குடும்பத்தையும் ஆளும் குடும்பங்களையும் நிலைகுலையச் செய்திருந்தன.
உண்மையில் இந்தியாவுடன் இணைந்திருப்பது வரையில்தான் அந்நாட்டு மக்கள் மீதான மன்னர் மற்றும் அரச குடும்ப மேட்டுக்குடியினரின் ஆட்சிக்கு உத்தரவாதம். அந்த வகையில் பூடான் மன்னர் ஆட்சி இருப்பது வரை சீனாவுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வது அரசியல் ரீதியாகவும் சரி, நடைமுறை ரீதியாகவும் சரி சாத்தியமில்லாத ஒன்று.
எனவே, அடுத்த தேர்தலில் முதல் சுற்றில் ஜிக்மே தின்லேயின் கட்சி முதலிடத்தை பிடித்தாலும் இறுதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவிற்கு அடிபணிதலை உறுதியாக கடைப்பிடிக்கும் ஷெரிங் தோப்கே பிரதமராக்கப்பட்டார்.
இத்தகைய பூடானுக்கு போவது மோடியின் சூப்பர் மேன் இமேஜை தூக்கி நிறுத்த மட்டும் பயன்படவில்லை. மோடியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்த முதலாளிகளில் முக்கியமானவர்களான குஜராத்தி, மார்வாடி வியாபாரிகளின் உத்தரவை நிறைவேற்றும் கடமையும் மோடிக்கு இருந்தது. அரிசியில் ஆரம்பித்து பல்வேறு நுகர்பொருட்களை பூடானுக்குள் கொண்டு சென்று விற்கும் அவர்களது வர்த்தகத்துக்கு பாதிப்பு வராமல் பேசி உறுதி செய்து வருவதுதான் மோடிக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலை.
இப்படி தரகு வேலை பார்க்க போன மோடிக்கு இந்த பயணத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பை பற்றி
பாரோ விமான நிலையம் சென்றடைந்த மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங் ஆகியோரை பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் மோடிக்கு, சிகப்பு கம்பள வரவேற்பும், பூடான் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பாரோவில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் மலைவழிப்பாதையில் பயணித்து, திம்புவுக்கு மோடி சென்றார். அப்போது சாலையின் இருமருங்கிலும் இந்தியா மற்றும் பூடான் நாட்டு தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் திரண்டு நின்று மோடிக்கு வரவேற்பு அளித்தனர். சாலையின் சில இடங்களில் மோடியின் புகைப்படங்களுடன், அவரை வாழ்த்தி பிரமாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
என்று தினமணி எழுதியிருந்தது. இது கிட்டத்தட்ட ஜெயலலிதா மதுரைக்கு விமானத்தில் வந்து இறங்கினால் மதுரை மேயரும் கவுன்சிலர்களும் வரவேற்பதற்கு சமமானது.
மோடி கட் அவுட்
தமிழ்நாட்டில் லேடியானாலும் சரி, டெல்லியில் மோடியானாலும் சரி தம் உருவத்தை பெரிய கட்-அவுட்டுகளாக பார்க்கும் பூரிப்பு நோயை கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா மீதான ‘பாசத்தை வெளிப்படுத்தும் வகையில்’ பள்ளிக் குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து டார்ச்சர் செய்வது போல பூடானிலும் ஆளும் வர்க்கங்கள் தேசியக் கொடி ஏந்திய மகளிரை நிறுத்தி வைத்ததோடு, மோடியின் பிரமாண்ட கட் அவுட்டுகளை  கூட செய்து நிறுத்தியிருக்கின்றனர். தமிழ்நாட்டில் லேடியானாலும் சரி, டெல்லியில் மோடியானாலும் சரி தம் உருவத்தை பெரிய கட்-அவுட்டுகளாக பார்க்கும் பூரிப்பு நோயை கொண்டிருக்கிறார்கள். அந்த நோயை பக்தி மணத்துடன் செய்வதில் அவர்களது அடிமைகளும் சளைப்பதில்லை.
16-ம் தேதி பூடான் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில்தான் மோடி வலிமையான இந்தியா, அமைதியான பூடான் என்றெல்லாம் பேசி நேபாளம், லடாக் எல்லாம் கலந்து அடித்து தனது முதல் வெளிநாட்டு சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இதையடுத்து, பூடான் நாடாளுமன்றத்தில் இருந்தவாறே காணொளிக் காட்சி மூலம் கொலாங்க்சு நீர் மின் திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார். இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் 600 மொகாவாட் மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
என்று தினமணி வெளியிட்ட செய்தியை “இந்த கூட்டு முயற்சியில் நீர் மின் திட்டத்துக்கு பணம் கொடுத்து, காண்டிராக்ட் எடுத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கிட்டத்தட்ட இலவசமாக உறிந்து கொள்வது இந்திய அரசின் பங்கு. பூடான் மக்களை சமாளித்து, திட்டத்தை நிறைவேற்ற இடம், நீர், சட்ட ஒழுங்கு சூழலை ஏற்படுத்தி தருவது பூடான் அரசின் பங்கு.” என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பூடானுக்கு பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய், தானியங்கள், அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படுகிறது என்று இந்தியா தெரிவித்தது.
பூடான் அரசை பணிய வைக்க இந்திய அரசு விதித்திருந்த தடைகள், பூடான் அரசு முறைப்படி பணிந்த பிறகு இப்போது விலக்கப்பட்டன, அவ்வளவுதான்.
குடியரசு தின ஊர்வலத்தில் பூடான் மன்னர்
குடியரசு தின பட்டாசு வெடிக்க எந்த கூமுட்டையும் வரவில்லை என்றால் ஃபோனை போட்டு இழுத்து வரப்படும் எக்ஸ்ட்ரா வண்டிதான் இந்த பூடான் மன்னர்
இந்த கவரேஜ் முடிந்து, ஒரு வாரம் யோசித்த பிறகு 18-ம் தேதி எழுதிய தலையங்கத்தில், “புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிரதமரின் முதல் அரசுமுறைப் பயணத்தை உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்துமே கூர்ந்து கவனிக்கும் என்பது தெரிந்து, திட்டமிட்டுதான் பூடானைப் பிரதமர் மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
என்று கண்டு பிடித்து சொன்னது தினமணி. உண்மையில் சென்ற ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய அரசு அழைத்திருந்த ஓமன் சுல்தான் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்ததும் ஒரு ஃபோனை போட்டு பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நாம்கியால் வாங்சுக்கை அழைத்து உட்கார வைத்தது இந்திய அரசு. அதுதான் இந்தியா பூடானுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அளவு. குடியரசு தின பட்டாசு வெடிக்க எந்த கூமுட்டையும் வரவில்லை என்றால் ஃபோனை போட்டு இழுத்து வரப்படும் எக்ஸ்ட்ரா வண்டிதான் இந்த பூடான் மன்னர்.
கடைசியாக, பூடான் பாரம்பரிய வழக்கத்தின்படி கைதட்டுதல் என்பது கெட்ட ஆவிகளை விரட்டுவதற்காக செய்யப்படுவது. எனவே ‘மாமன்னர்’ மோடி பேசி முடித்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பவில்லை என்று யாரும் எழுதி மானத்தை வாங்கி விடாதீர்கள் என்று பத்திரிகையாளர்களை முன்கூட்டியே எச்சரித்திருந்தது இந்திய தூதரகம்
ஆனால், நாடாளுமன்றத்தில் 25 நிமிடங்களுக்கு இந்தியில் பேசிய மோடி தனது உரையை முடித்ததும் 72 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தம்மை மறந்து கைத்தட்டியிருக்கின்றனர். அது பாரம்பரியத்தை முறித்து மோடிக்கு அப்ளாஸ் போடவா அல்லது பாரம்பரியப்படியே கெட்ட ஆவியை விரட்டியடிக்கவா என்பது பூடான் மக்களுக்குத்தான் வெளிச்சம்.
இதை
மோடி பூடான் நாடாளுமன்றத்தில் உரையை முடித்த உடன் பாரம்பரியத்தை மாற்றிய எம்.பி.க்கள்: பூடான் பாரம்பரிய வழக்கத்தின்படி ஆமோதிப்பதற்காக எம்.பி.க்கள் கரவொலி எழுப்புவது கிடையாது. இந்நிலையில், பூடான் நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் மோடியின் பேச்சு முடிந்தவுடன் எம்.பி.க்கள் அனைவரும் கைகளைத்தட்டி ஆரவாரத்துடன் ஆமோதித்தனர்.
என்று பச்சை பெயின்ட் அடித்து காட்டிய தினமணி தனது தலையங்கத்தை,
ஏற்கெனவே, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் சீனாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நிலையில் பூடானை மையப்படுத்தித் தனது காயை நகர்த்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது!
என்று முடித்திருந்தது.
உசிலையை  மையமாக வைத்து, “அஞ்சா நெஞ்சன் அழகிரி அண்ணன், தமிழக அரசியலில் ஒரு முக்கியமான காயை நகர்த்துகிறார் என்று எழுதியதற்கு சமம்” தினமணியின் இந்த பூரிப்பு! அய்யோ பாவம் பூடானை வைத்து இப்படி பூரிக்க வேண்டிய அவசியம் என்ன?
(பூடானில் வேலை செய்த வினவு வாசகர் ஒருவர் அளித்த தகவல்களோடும் எழுதப்பட்டது)
-    செழியன். vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக