வியாழன், 26 ஜூன், 2014

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரானார் சீனிவாசன்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதல் தலைவராக என்.சீனிவாசன் இன்று முறைப்படி நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மாநாட்டில், ஐசிசி கவுன்சிலின் 52 உறுப்பினர்கள் அளித்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஐசிசி தலைவராக சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டனர்.
இந்தப் புதிய சீர்திருத்தங்களுக்குப் பிறகு, தேர்வு செய்யப்படும் முதல் ஐசிசி தலைவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டு எவ்வளவு தரம் தாழ்ந்து விட்டது என்பதற்கு இனி வேறு சாட்சிகள் தேவையில்லை ? எங்கும் மாபியா ?

இதையடுத்து, சீனிவாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஐசிசி தலைவராக உறுதிசெய்யப்பட்டதை மிகுந்த கவுரமாகக் கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் வலுவான வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன்.
கிரிக்கெட் விளையாட்டு மேலும் பிரபலமடைவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இந்த இலக்கை எட்டுவதற்கு, உள்நாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுப்பது அவசியம்.
ஐசிசி தலைவர் பதவியில் இருந்து விலகும் ஐசக், சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. ஐசிசி தலைவர் பதவிக்கு அவர் முன்னுதாரணமாகவே திகழ்கிறார்" என்று சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சையைக் கடந்த சீனிவாசன்
பிசிசிஐ தலைவராக இருந்தவர் சீனிவாசன். ஐபிஎல்-2013 போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின்பேரில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அவரை பதவி நீக்கம் செய்தது. அவருக்குப் பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சிவ்லால் யாதவ் ஆகியோர் பி.சி.சி.ஐ. நிர்வாகத்தைக் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீதான சூதாட்டப் புகார் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், மூத்த வழக்கறிஞர் நிலோய் தத்தா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.பி.மிஸ்ரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு சீனிவாசனின் பெயர் கடந்த பிப்ரவரியில் சிங்கப்பூரில் நடந்த ஐ.சி.சி. மாநாட்டிலேயே பரிந்துரைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஐ.சி.சி. தலைவர் பதவி தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு தடை விதிக்கக் கோரி பிஹார் கிரிக்கெட் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
ஐ.சி.சி. விதிகளின்படி மாநாட்டுக்கு முன்னதாக வேட்பாளர் பெயரை இறுதியாக பரிந்துரை செய்வது அவசியம். சீனிவாசன் பெயரை பரிந்துரை செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை நடத்தியது. அவர்களின் கருத்துக்களுடன் சீனிவாசனை வேட்பாளராக அறிவித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பி.சி.சி.ஐ. அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக