வெள்ளி, 20 ஜூன், 2014

டார்வின், உயிரினங்களின் தோற்றம், இயற்கைத் தேர்வு – ஒரு அறிமுகம்


இந்த உலகின் உயிரினங்கள் யாரால் எப்படி தோன்றின, ஏன் மாறின போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான பதில்களை கண்டுபிடித்து மதங்களின் பிடியில் இருந்து அறிவை விடுதலை செய்த ஒரு அறிவியலாளனின் சாதனையை படியுங்கள்!
பிரபஞ்சத்தில் நாம் அறிந்த கோள்களிலேயே நமது பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலைப் பெற்றுள்ளது. இங்கு வியத்தகு எண்ணிக்கையிலான உயிரினங்கள் வாழ்கின்றன. நமது பூமியில் எங்கு நோக்கினும் நுண்ணுயிரிலிருந்து மிகப்பெரும் விலங்கினங்கள் வரை ஏதாவது ஓர் உயிரினத்தை காணமுடியும்.

உயிரினங்களின் தோற்றம்
உயிரினங்களின் தோற்றம்
பூமியில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ள சுமார் அறுபது இலட்சத்திலிருந்து பத்து கோடி வகையான உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனக்கே உரிய தனிச்சிறப்பான உடல்கூறு வடிவமைப்பை பெற்றுள்ளன.
இப்படி தனிச்சிறப்பான உருவ வடிவமைப்பை கொண்ட வெவ்வேறு வகையான உயிரினங்கள் எப்படி, எப்போது தோன்றின? திகைப்பூட்டும் எண்ணிக்கையிலான இத்தனை வகைகளும், தொகுப்புகளும் இருக்க காரணமென்ன?
உயிரினங்களின் தோற்றம் பற்றிய இக்கேள்விகளுக்கு மதங்கள், ‘ஒவ்வொரு உயிரும் தனித்தனியாக, தனிச்சிறப்பான வடிவமைப்புடன் கடவுளால் படைக்கப்பட்டது’ என்று தத்துவ உலகில் கருத்து முதல்வாதம் என அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தபடைப்புக் கொள்கையை முன் வைக்கின்றன.
கத்தோலிக்க திருச்சபை ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பாவில் பைபிளின் படைப்புக் கொள்கையே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக நிலவி வந்தது. பைபிளின் படி சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடவுள் இவ்வுலகை படைத்த மூன்றாம் நாளில் தாவரங்களை படைத்தார். ஐந்தாம் நாளில் மீனினங்களையும், பறவையினங்களையும் ஆறாம் நாளில் விலங்கினங்களையும், பாலூட்டிகளையும் படைத்து கடைசியாக ஏழாவது நாளில் மனிதர்களை படைத்தார்; களிமண்ணிலிருந்து ஆதாமையும், அவனது விலா எலும்பிலிருந்து ஏவாளையும் படைத்தார்.
பைபிளுக்கு 557 ஆண்டுகளுக்கு பின் உருவான, ‘அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லா’வின் திருப்பெயருடன் ஆரம்பிக்கும் திருக்குர்-ஆனில் அல்லா உலகை ஆறு கட்டங்களாகப் படைத்தார். சுட்ட களிமண்ணிலிருந்து ஆதாமை உருவாக்கினார்.
பார்ப்பன புராணங்களின்படி ஈரேழுலோகங்களையும், அவற்றிலுள்ள உயிரினங்களையும், நால்வருண மனிதர்களையும் பிரம்மா படைத்தார். அப்பிரம்மனை படைத்ததே தங்களுடைய விஷ்ணுதானென்றும், இல்லை விஷ்ணுவையும் படைத்தது சிவன் தானென்றும் கோஷ்டிப்பூசல்கள் நிலவினாலும், ‘அனைத்தும் ஏதோ ஒரு கடவுளால் படைக்கப்பட்டது’ என்ற படைப்பு தத்துவத்தையே முன்வைக்கின்றனர்.
தத்துவத் துறையை பொறுத்த வரை, 19-ம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பிய அறிவியலாளர்கள் மத்தியிலும் அரிஸ்டாட்டிலின் ஆதியும் அந்தமும் அற்ற நிலையான உலகம் என்ற இயக்க மறுப்பியல் கோட்பாடு ஆதிக்கம் செலுத்தியது.
சார்லஸ் டார்வின்
சார்லஸ் டார்வின்
இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு சரியென்று நம்பப்பட்ட, நிலவி வந்த கருத்துகளிலிருந்து வேறுபட்டு விளக்கமளிக்க முற்பட்டார் சார்லஸ் டார்வின். ஆனால், முதன் முதலாக படைப்பு கொள்கையை மறுத்து பரிணாம வளர்ச்சியை முன்வைத்தவர் டார்வின் அல்ல.
அறிவியலும் அனைத்து அறிவுத் துறைகளும் திருச்சபையில் கட்டுண்டு கிடந்த காலத்தில் பெரும்பாலான அறிவியலாளர்களும், கல்வியாளர்களும் பாதிரிமார்களாக இருந்த போதிலும், இறைவனின் படைப்புகளை முழுவதுமாக அறிந்து கொள்ள இயற்கையை ஆய்ந்து இறை இயற்கையியல் (theological naturalism) என்று பெயரிட்டு விவரங்களை திரட்டி வந்தனர்.
18-ம் நூற்றாண்டில் சுவீடனை சேர்ந்த உயிரியலாளர் கரோலஸ் லின்னயேஸ் (Carolus Linnaeus) உயிரினங்களை வகைப்படுத்தி, ஒவ்வொரு உயிரையும் இனம், பேரினம், குடும்பம், குடும்பங்களை உள்ளடக்கிய வரிசை அதற்கும் மேல் பைலா (Phyla), அதற்கும் மேல் ராஜ்ஜியம் என ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கி வகைப்படுத்தி வைத்தார்.
பிரான்சை சேர்ந்த பஃபோன் (Georges-Louis Leclerc Comte de Buffon) என்ற அறிவியலாளர் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து மாற்றமின்றி நிலைத்திருக்கவில்லை என்றும் உயிரினங்கள் தோன்றும் போதே வெவ்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து தோற்றம் – வடிவம் அமைகிறது என்றும் ஒரு விதமான பரிணாம கோட்பாட்டை முன் வைத்திருந்தார்.
முன்னதாக 17-ம் நூற்றாண்டில் பாறை அடுக்குகளில் எலும்புகள், உயிரின படிவங்கள் கண்டறியப்பட்டன. அக்காலத்திய டேனிஷ் அறிவியலாளரும், பாதிரியாருமான நிக்கோலஸ் ஸ்டெனோ (Nicolus steno) திரவ நிலையிலிருந்த குழம்புகள் குளிர்ந்து கெட்டிப்பட்டு பாறைகளாவதையும், புதிதாக குளிர்ந்து உருவாகும் புதிய பாறை பழைய பாறையின் மீது படிந்து பாறை அடுக்குகள் உருவாவதையும் விளக்கிக் கூறி கண்டறியப்பட்டவை தொல்லுயிர் எச்சங்கள் என்றார். அவரது கருத்துகள் தொல்லுயிரியல் துறைக்கு அடிப்படையாக அமைந்தன.
18-ம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் தங்கள் பகுதியில் இல்லாத உயிரினங்களின் தொல்லுயிர் புதைபடிவங்களை கண்டறிந்தனர். அவை உலகின் வேறு பகுதிகளில் வாழ்வதாக நம்பினர். பிரான்சை சேர்ந்த ஜார்ஜ் குவியர் (George Cuvier) புதைபடிவங்களில் கண்டறியப்பட்ட சில உயிரினங்கள் உலகின் எப்பகுதியிலும் வாழ்வதற்கான சான்றாதாரங்கள் இல்லை என்று கண்டறிந்து அவை அருகி அழிந்து போன உயிரினங்கள் என்பதை முன்வைத்தார்.
இதன் மூலம் கடவுளால் படைக்கப்பட்டு மாற்றமின்றி நிலைத்திருப்பதாக மதவாதிகள் சொல்லும் உலகத்தில் பல உயிரினங்கள் வாழ்ந்து அருகி அழிந்திருக்கின்றன என்றும் புதிய உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன என்றும் கருதுவதற்கான அடிப்படை உருவாக்கப்பட்டது.
லாமார்க்
லாமார்க்
இப்பின்னணியில், டார்வினுக்கு முன்னரே 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ழான் லாமார்க் (Jean-Baptiste Lamarck) என்ற பிரான்சை சேர்ந்த விஞ்ஞானி படைப்பு தத்துவத்தை நிராகரித்து பரிணாமக் கோட்பாட்டை முன்வைத்திருந்தார். உயிரினங்கள் தமது வாழ்நாளிலேயே சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் மூலம் உடல்கூறில் மாற்றமடைந்து அத்தனிக்கூறினை தமது சந்ததிகளுக்கு கடத்துகின்றன (Transfer) என்றும் எளியதிலிருந்து சிக்கலானவையாக வளர்ச்சியடையும் இயற்கை விதி பரிணாம வளர்ச்சியை இயக்குவதாகவும் கூறினார். வளர்ச்சி ஏணிப்படி வடிவில் நடப்பதாக நம்பினார்.
இந்த கோட்பாடு உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய மாபெரும் பாய்ச்சலை விளக்க முயன்ற போதிலும், அழிந்துபோன உயிரினங்களை பற்றியும், உயிரினங்களுக்கிடையிலான விடுபட்ட இணைப்புக் கண்ணிகளை பற்றியும் முரணின்றி விளக்குவதில் வெற்றியடையவில்லை. இன்று நம் கண்களுக்கு முன் பரிணாம வளர்ச்சி ஏன் நடக்கவில்லை என்பதற்கு இக்கோட்பாடு விடையளிக்க முடியவில்லை. எனவே இந்த கோட்பாடு மதவாதிகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது மட்டுமின்றி, சக அறிவியலாளர்கள் மத்தியிலும் அங்கீகாரத்தை பெறவில்லை.
எளியதிலிருந்து சிக்கலானதாக வளர்ச்சியடையும் ஏணிப்படி வடிவிலான பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக வெவ்வேறு உயிரினங்களின் உயிர்கருக்களுக்கிடையே உள்ள ஒற்றுமையைக் காட்டினர். 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கார்ல் வான் பேயர் (Karl von baer) என்ற எஸ்டோனிய அறிவியலாளர் வெவ்வேறு உயிரினங்களின் உயிர்கருக்களிடையே இருந்த குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கரு வளர்ச்சி படிநிலைகளை பரிணாம வளர்ச்சி நிலைகளில் அர்த்தமுள்ள தொடராக காண முடியாது என விளக்கினர்.
19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, முறையான கல்வியறிவு இல்லாத வில்லியம் ஸ்மித் (William smith) என்ற சர்வேயர் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பாறை அடுக்குகளை ஒப்பிட்டு, ஒவ்வொரு அடுக்கிற்கும் குறிப்பான வரலாற்று காலத்தை கணக்கிட்டு அதன் மூலம் நிலவியல் வரைபடத்தை உருவாக்கினர். பாறை அடுக்குகளின் வரலாறு, தொல்படிமங்களின் வரலாறாகவும், உயிரினங்களின் வரலாறாகவும் ஆனது.
உலக நிலவியல் அமைப்பு பல திடீர் மாற்றங்களையும், சீற்றங்களையும் சந்தித்ததால் தான் இப்போதைய நிலையை அடைந்தது என்று நம்பப்பட்டது. இது அழிவமைவு கோட்பாடு எனப்பட்டது. டார்வினின் சமகாலத்தவரான சார்லஸ் லயல் (Charles Lyell) அது வரை நிலவியல் அமைப்பை விளக்கிய அழிவமைவு கோட்பாட்டை நிராகரித்து சீர்மாற்ற கோட்பாட்டை முன்வைத்தார். கண்களுக்கு புலப்படாத சிறுக சிறுக நடந்த சீரான படிப்படியான மாற்றங்களாலேயே பூமி இப்போதைய நிலையை அடைந்தது என்றார்.
படைப்பு தத்துவமும் பரிணாம கோட்பாடும்
உயிரினங்களின் தோற்றம் பற்றி இத்தகைய கோட்பாடுகள் நிலவிய சூழலில் அவற்றுக்கு ஒரு தீர்மானகரமான அறிவியல் உள்ளடக்கத்தை கொடுத்த டார்வின் 1809-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் நாள் இங்கிலாந்தின் சுரூஸ்பெரியில் (Shrewsbury) ராபர்ட் டார்வின் என்ற மருத்துவரின் மகனாக பிறந்தார். சார்லஸ் டார்வினின் தாத்தா எராமஸ் டார்வின் மருத்துவத் தொழில் செய்து வந்த அதே வேளை இயற்கையியல் அறிஞராகவும் இருந்தார். தன்னைப் போலவே தனது மகனும் சிறந்த மருத்துவராக வேண்டுமென்ற தந்தையின் விருப்பத்திற்கேற்ப தனது 16-ம் வயதில் மருத்துவம் படிக்கச் சென்றார் டார்வின். தனது தாத்தாவின் தாக்கத்தால் சிறுவயது முதலே இயற்கை விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவராக இருந்த டார்வினுக்கு மருத்துவச் சொற்பொழிவுகளை கேட்பதிலும், அறுவைச்சிகிச்சை முறைகளைக் கற்பதிலும் ஆர்வம் ஏற்படவில்லை.
டார்வினை பாதிரியார் ஆக்க விரும்பிய அவரது தந்தை, அன்று இறையியல் கற்று பாதிரியார் ஆக வேண்டுமானால், கேம்பிரிட்ஜில் பட்டம் பெற வேண்டும் என்ற தேவையை முன்னிட்டு அவரை 1828-ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பட்டப்படிப்பில் சேர்த்தார்.
டார்வின் கால கல்வியாளர்களை பொறுத்தமட்டில் இயற்கை விஞ்ஞானத்தின் – விலங்கியல், உயிரியல், நிலவியல், இயற்பியல் போன்ற – ஒவ்வொரு துறை மட்டுமல்ல, அவற்றின் சிறப்புப் பிரிவுகளும் கூட, ஒன்றை ஒன்று சாராமல் தனித்தனியாக ஆராயப்பட வேண்டியவை, கற்க வேண்டியவையாக இருந்தது. புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிவியலாளர்கள், கல்வியாளர்களால் நிரம்பியிருந்த போதிலும், மதத்தில் கட்டுண்டு ஆதி முதல் இன்று வரை அனைத்தும் மாறாமல் இருந்து வருகின்றன என்ற இயக்கமறுப்பியல் சிந்தனையில் சிக்கியிருந்தது.
கேம்பிரிட்ஜில் சார்லஸ் டார்வினும், கிருத்துவம் முன்வைத்த உலகமும் உயிர்களும் தோன்றிய கோட்பாட்டை ஐயம் திரிபுற கற்றார். அப்போது  அவருக்கு அக்கருத்துக்கள் தவறாக தோன்றவில்லை. அங்கு நிலவியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கற்றுத் தேர்ந்த டார்வின் அப்பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோவின் (John Henslow) நெருங்கிய நண்பரானார்.
ஹென்ஸ்லோ
ஹென்ஸ்லோ
முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியை தொடர்ந்து  உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்காக இயற்கை வளங்களை சுரண்டுவதற்கும், வணிகத்தை பெருக்குவதற்கும், சந்தைகளைக் கைப்பற்ற புதிய காலனிகளை உருவாக்குவதற்கும் கடல்வழிகள், கடல்நீரோட்டங்கள், நிலப்பகுதிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்து விவரங்களை திரட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நோக்கங்களுக்காக தென்னமெரிக்க கண்டத்தின் கடல்பகுதிகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள ’எச்.எம்.எஸ்.பீகிள்’ என்ற கப்பலை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது.
அக்கப்பலின் இரண்டாவது பயணத்தின் கேப்டனாக ராபர்ட் ஃபிட்ஸ்ராய் (Robert FitzRoy) நியமிக்கப்பட்டார். இப்பயணத்தில் தன்னுடன் ஒரு ’இயற்கை விஞ்ஞானியை’, அழைத்துச் செல்ல அவர் விரும்பினார். ஜான் ஹென்ஸ்லோவின் மூலம் அப்போது 22 வயதான டார்வினுக்கு கேப்டன் பிட்ஸ்ராயின் நட்பும், அவருடன் பயணிக்கும் வாய்ப்பும் கிட்டியது.
பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
பீகிள் கப்பலில் பயணம் செய்த டார்வின், ஐந்தாண்டுகளில் பல ஆயிரம் கிலோமீட்டர் கடல்வழியாகவும், 3,200 கிலோமீட்டர் நிலவழியாகவும் பயணித்து நிலஅமைப்பு, தாவர, விலங்குகள் பற்றிய சுமார் 1,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட குறிப்புகளுடன், 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புகள், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எலும்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்களை சேகரித்திருந்தார்.
டார்வினுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சியை முன்வைத்த அறிஞர்கள் அனைவரும் ஊகத்தை அடிப்படையாக கொண்டும், பரிணாமம் நீண்ட-காலப்போக்குடைய விதிகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் விளக்கினர். ஆனால் டார்வின் இயற்கையில் கிடைத்த சான்றாதாரங்களை கொண்டு உயிரினங்களின் தோற்றத்தை முரணின்றி விளக்குவதன் மூலம் பரிணாமக் கொள்கையை வந்தடைந்தார்.
The origin of speciesடார்வின், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் வெவ்வேறு அறிவியல் துறை கண்டுபிடிப்புகள், கோட்பாடுகளில் சரியானவற்றை ஒருங்கிணைத்து புரிந்து கொள்ள முயன்றதோடு, பீகிள் பயணத்தில் தனது சொந்த அனுபவத்தில் தான் கண்ட தனிச்சிறப்பான வடிவமைப்பை கொண்ட வெவ்வேறு வகையான உயிரினங்களின் ஒற்றுமை- வேறுபாடுகளை ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள முயன்றார்.
தனது பயணத்தின் போது கோடானுகோடி உயிரினங்களில் பெரும்பாலானவை ஒத்தவடிவமைப்புடன் சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட தொகையினங்களாக இருப்பதையும் அறிந்து கொண்ட டார்வின் உயிரினங்கள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான முறையில் கடவுளால் படைக்கப்பட்டன என்ற படைப்புக் கொள்கையை சந்தேகிக்க ஆரம்பித்தார்.
சான்றாக நமது பூமியில் வியப்பூட்டும் வகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான குரங்கினங்களும், சுமார் 315-க்கும் மேற்பட்ட ஓசனிச்சிட்டு குருவிகளும் (Hummingbird), ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவ்வால் இனங்களும், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்டு-பூச்சியினங்களும், 2.5லட்சத்துக்கு மேற்பட்ட பூக்கும் தாவர இனங்களும் உயிர் வாழ்வதாக இன்று வரை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது, இன்னும் கண்டறிய வேண்டியவையோ ஏராளம்.
தென்அமெரிக்க காடுகளில் தீக்கோழி போன்ற, பறக்கமுடியாத ரியா (Rhea) பறவைகளின் இருவெவ்வேறு வகைகளை டார்வின் கண்டார். மிகச்சிறு வேறுபாடுகளை கொண்ட இரு ஒத்த பறவைகளை கடவுள் ஏன் படைக்கவேண்டும்? அவரது பயணம் தொடர தொடர மர்மம் இன்னும் தீவிரமடைந்தது.
தென்அமெரிக்காவிற்கு மேற்கே, பசிபிக்பெருங்கடலில் உள்ள காலபகாஸ் (Galapagos) தீவுகளில் அவர் பார்த்த ஆமைகளிடையே புலப்பட்ட வேறுபாடுகளும் அவருடைய சிந்தனையை தூண்டின. காடுகளில், சதுப்புநிலத்தில், ஆற்றில், கடலில் இப்படி ஒவ்வொரு இடத்திலும் வாழும் ஆமை இனங்கள், தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப பிரத்யேகமான வெவ்வேறு வடிவமைப்பை பெற்றிருந்தன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிலா தனிச்சிறப்பானவை அல்ல என்றும் அவற்றுக்கிடையே காணும் சிறுசிறு வேறுபாடுகள் உயிரினங்கள் தத்தமது சூழ்நிலைகளுக்கு தகவமைத்து கொண்டதால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
தென்னமெரிக்காவின் அர்ஜெண்டினாவில் சில தொல்லுயிர் புதைபடிவங்களை (Fossil) காணுற்றார் டார்வின். அதில் ஒன்று நிலத்தில் வாழும் தேவாங்குகளை ஒத்த உடலமைப்பை கொண்டிருந்தது. அவை நாம் காணும் தேவாங்குகளைவிட பலமடங்கு பெரியவையாக இருந்தன.
டார்வின் காலத்தில் பிரபலமான உயிரியலாளர் ரிச்சர்ட் ஓவன். தொல்லியல் புதை படிவங்களை ஆய்வதிலும் உடற்கூறியலிலும் வல்லுனரான இவர் டைனோசர்களின் புதைபடிவங்களை முதன்முதலில் வகைப்படுத்தினார். லண்டன் இயற்கை அருங்காட்சியகத்தை தோற்றுவித்து அதில் பல உயிரின மாதிரிகளை சேகரித்தார். ஆயினும், 19-ம் நூற்றாண்டு உயிரியலாளர்களைப் போல ஓவனும் கூட ஒவ்வொரு தனிச்சிறப்பான உயிரினமும் பிரத்யோகமான முறையில் கடவுளால் படைக்கப்பட்டது என்ற படைப்பு கொள்கையையே நம்பினார்.
தான் கண்டெடுத்த தேவாங்கை ஒத்த புதைபடிவத்தை ரிச்சர்ட் ஓவனுக்கு அனுப்பி வைத்தார் டார்வின். அதை ஆய்ந்தறிந்த ஓவன், அது அழிந்து போன தேவாங்கு இனம் என்று வகைப்படுத்தி அதற்கு டார்வினின் பெயரை சூட்டினார். இவ்வளவு பெரிய உயிரினம் இப்போது ஏன் அழிந்து போனது?. ஆபிரகாமிய மதவாதிகளோ, “நோவாவின் படகில் இடம் கிடைக்காததால் அவை அழிந்து போனதாக” கருதினர். “கல்லுக்குள் தேரைக்கும் படியளந்தான் பரமன்” என்று கதை விடும் இந்து மதவாதிகளிடமோ அழிந்து இல்லாது போன உயிரினங்கள் குறித்து விளக்கம் இல்லை.
படைப்பு தத்துவம்
டார்வின் ஐந்தாண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய உடனேயே தனது பரிணாம கொள்கையை முன் வைத்து விடவில்லை. அவர் சேகரித்திருந்த சான்றுகளும் குறிப்புகளும் பரிணாம கொள்கையை முரணின்றி விளக்குவதற்கு அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. ஆயினும், டார்வினுக்கு, அவர் சேகரித்த குறிப்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்கள் பெரும் புகழை பெற்றுத்தந்தன. இவற்றால் டார்வின் கர்வமுற்று சும்மா இருந்து விடவில்லை. அன்றாடம் காணும் உயிரினங்கள், நிகழ்வுகளை மிகக்கூர்மையாக கவனிக்க ஆரம்பித்த டார்வின் தனது குறிப்புகள், சான்றுகளை ஆராய்ந்து மறு பரிசீலனை செய்தார்.
பல்வேறு பாலூட்டிகளின் எலும்புக்கூடுகள் குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருப்பதை விரிவாக ஆராய்ந்தார். அவற்றின் மூட்டெலும்புகள் ஒரே வரிசையில் இருப்பதையும், அவை வெவ்வேறு உயிரினங்களுக்கு ஏற்ற வகையில் மறுவடிவம் பெற்றதென்றும் கண்டறிந்தார்.
மேலும், விலங்குகள், பறவைகள் மீனினங்கள் ஆகியவற்றின் உயிர்க்கருக்களுக்கிடையே, கரு வளர்ச்சியிலிருந்த ஒற்றுமை, வேற்றுமைகள் டார்வினின் கவனத்தை ஈர்த்தன. ஒவ்வொரு உயிரினம், பேரினம், குடும்பம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது உறுதியானது. மனிதனின் உடலமைப்பை ஒத்ததாக குரங்கின் உடலமைப்பு இருப்பதும் அவர் கவனத்தை ஈர்த்தது.
டார்வின் தமது காலத்தின் குதிரை, முயல், புறா, நாய் – பிராணி வளர்ப்பு ஆர்வலர்களிடம் கவனமாக தகவல்களை திரட்டினார். ஆதி ஓநாயிலிருந்து தோன்றிய நாய்களை தமது விருப்பத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப விதவிதமான நாய்களாக மனிதர்கள் உருவாக்கியுள்ளதை கண்டறிந்தார். அதாவது செயற்கை தேர்வின் (artificial selection) மூலம் மனிதர்கள் உயிரினங்களில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றனர்.
இதேபோல் ஏன் இயற்கையும் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப ஒரு குடும்பத்திற்குள் வெவ்வேறு வகைகளை – தனித்தனி இனத்தை- உருவாக்கியிருக்கக் கூடாது? எனில் இயற்கைத் தேர்வை நிகழ்த்துவது யார்?
சமூக அறிவியல் துறையில் தவறான நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்ட ஒரு கருத்திலிருந்து உயிரினங்களின் தோற்றம் குறித்த டார்வினின் கோட்பாட்டுக்கு அடுத்த உந்துதல் கிடைத்தது.
காரலஸ் லின்னேயஸ்
காரலஸ் லின்னேயஸ்
தாமஸ் மால்துஸ் எழுதிய முதலாளித்துவ பிரிட்டனில் மக்கள் தொகை பெருக்கத்தின் அபாயங்களை பற்றிய கட்டுரையில், ‘மக்கள் தொகை பெருக்கம் தான் மக்களிடையே இடையறாது நடக்கும் போராட்டங்களுக்கான காரணம்’ என்றும் ‘உணவுப் பற்றாக்குறையும், நோய்களும் தவிர்க்கவியலாமல் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன’ என்றும் கூறியிருந்தார். அதாவது ஏழைகள் பட்டினியில் வாடுவதும், நோய் வந்து சாவதும் இயற்கையின் (அல்லது இறைவனின்) திருவிளையாடல் என்று ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக மத போதகராக இருந்த மால்துஸ் மக்கள் தொகை பற்றிய தனது கோட்பாட்டை முன் வைத்திருந்தார். முதலாளித்துவமும் அதற்கு முந்தைய வர்க்க சமூகங்களும் நிலவிய காலகட்டங்களில் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான மோதல்களும், உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும் இயல்பான வளர்ச்சிக்கான காரணிகள் என்று கூறுவதுதான் மால்துசின் நோக்கம்.
ஆனால், மால்தூசின் கட்டுரைகளை படித்த டார்வின், அந்த மோசடியான கோட்பாட்டை, பல லட்சம் ஆண்டுகள் கால ஓட்டத்தில் உயிரினங்களிக்கிடையே இடையறாது நடக்கும் உயிர் பிழைத்திருப்பதற்கான உக்கிரமான போராட்டத்துக்கு வரித்துக் கொண்டார். உயிரினங்கள் பிழைத்திருப்பதற்கு தேவையான வளங்களும் சூழ்நிலையும் எல்லா உயிர்களுக்கும் சமமாகவும் வரம்பின்றியும் அமைவதில்லை. இயற்கை சூழ்நிலைகளில் உயிர்த்திருப்பதற்கான நிகழ்தகவு (probability) அனைத்து உயிர்களுக்கும் சமமானதாக இருப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் தகுதியானவை  வாழ்கின்றன, தகுதியற்றவை சாகின்றன என்ற கருதுகோளை முன்வைத்தார்.
உயிரினங்கள் சூழ்நிலைக்கு தகவமைத்துக் கொள்வதன் மூலம் தமது உடல்கூறில் சிறு சிறு மாற்றத்தை பெறுகின்றன. இயற்கை உயிரினங்களை தகவமைத்துக் கொள்ள நிர்பந்திக்கிறது. அச்சூழ்நிலையில் உயிர்த்திருந்து, இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றதான உடற் கூறுகளை பெற்றவை உயிர்த்திருந்தன, மற்றவை அருகி அழிந்தன. உயிர்த்திருந்தவை தாம் பிழைத்து வாழ்வதற்கு உதவிய தனிக்கூறை தமது சந்ததிகளுக்கு பாரம்பரிய பண்புகளாக கடத்தியதன் (Transfer) மூலம், படிப்படியாக வளர்ச்சியடைந்தன. இம்மாற்றங்கள் நிலைபெறுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்ற கோட்பாட்டை வந்தடைந்தார். இவ்வறாக, “பரிணாமத்தை எளியதிலிருந்து சிக்கலானதாக வளரும் வளர்ச்சி விதி தீர்மானிக்கவில்லை. மாறாக தகவமைத்து (Adaptation) உயிர்த்திருக்கும் போராட்டங்களே தீர்மானிக்கின்றன” என்ற ”இயற்கை தேர்வு” கொள்கை உருவம் பெற்றது.
ஜார்ஜஸ் குவியர்
ஜார்ஜஸ் குவியர்
ஆதியில் தோன்றிய ஒரு உயிரே பிரிந்து சூழ்நிலைகளில் தம்மை தகவமைத்துக் கொண்டதன் மூலம் படிப்படியாக கோடானு கோடி உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என சிந்தித்த டார்வின் தனக்கு முந்தைய அறிஞர்கள் முன்வைத்த ஏணிப்படி முறையிலான பரிணாம வளர்ச்சியை மறுத்து ஒரு புள்ளியில் தோன்றி கிளை கிளையாக பிரியும், மரத்தை போன்ற பரிணாம வளர்ச்சி பைலோஜெனிக் மர (phylogenic Tree) வரைபடத்தை வரைந்தார். இயற்கை தெரிவு கோட்பாட்டு முடிவுகளுக்கு வந்த பிறகும் கூட தனது கண்டுபிடிப்பை டார்வின் உடனடியாக வெளியிட்டு விடவில்லை.
அதே காலத்தில் ஆசிய கண்டத்தில் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வந்த மற்றொரு இயற்கை அறிவியலாளர் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலசும் (Alfred Russel Wallace) உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியல் கொள்கையை உருவாக்க முயன்று வந்தார். அவருக்கும் டார்வினுக்கும் தொடர்பு ஏற்பட்டது, இருவரும் ஒருவருக்கொருவர் அறிவியல் தகவல்களை பரிமாறி உதவிக் கொண்டனர்.
1858-ம் ஆண்டு வாலஸ், டார்வினுக்கு ஒரு கடித்ததை எழுதினார். அக்கடித்தம் டார்வினை வியப்பில் ஆழ்த்தியது. அக்கடித்த்தில் வாலஸ் தனது பரிணாம கொள்கையை விளக்கியிருந்தார். அதில் வாலசும் தனது சொந்த முயற்சியில் ”இயற்கைத் தேர்வு” கொள்கையை முன்வைத்திருந்தார்.
டார்வின் மற்றும் வாலஸ் இருவரின் கோட்பாடுகளையும் லண்டன் லின்னியன் சங்கத்தில் சமர்ப்பிக்கும் ஏற்பாட்டை சார்லஸ் லயல் செய்தார். 1858-ம் ஆண்டு இருவரின் கோட்பாடுகளும் லின்னீயன் சமூகத்தில் வாசிக்கப்பட்ட போது ஆசிரியர்கள் இருவருமே அங்கு இல்லை; அவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவுமில்லை.
ஓராண்டுக்கு பின் 1859-ல் டார்வின் பீகிள் பயணத்திலிருந்து பெற்ற சான்றாதாரங்களை கொண்டு எழுதப்பட்ட தனது புகழ் பெற்ற, “உயிரின்ங்களின் தோற்றம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை வெளியிட்டார்.
மதவாதிகள் மூர்க்கத்தனமாக டார்வினை எதிர்த்தனர். டார்வினை, குரங்காகவும் சாத்தானாகவும், பைத்தியமாகவும் சித்தரித்தனர்.
டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு எதிராக கடவுள் படைப்புவாதத்தை தூக்கிப் பிடித்தவர்களுக்கு முன்னோடியாக பிரிட்டனைச் சார்ந்த வில்லியம் பேலீ இருந்தார். அவர் ஒரு கடிகாரத்தில் உள்ளடங்கிய சிக்கலான உள்பாகங்களுக்கு ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer) தேவைப்படுவது போன்றே சிக்கல் நிறைந்த முழுமையான உயிரமைப்புகளுக்கு ஒரு வடிவமைப்பாளர் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார். இன்றும் இசுலாமிய, கிருத்தவ மதவாதிகள் இவ்வாறே வாதிடுகின்றனர்.
மனிதன் அறிவார்ந்த வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டிருந்தால், மனிதக் குழந்தை பிறக்கும் போதே ஏன் வளர்ச்சியடைந்த மனிதனைப் போல் நடப்பது, பேசுவது, சிந்திப்பது போன்ற செயல்களை செய்வதில்லை?
ரிச்சர்ட் ஓவன்
ரிச்சர்ட் ஓவன்
மதவாதிகள் மட்டுமின்றி ஓவன் போன்ற அறிவியலாளர்களும் டார்வினின் கோட்பாட்டை ஏற்கவில்லை. அவர் எல்லா உயிரினங்களும் ஒரே ஆதி உயிரிலிருந்து தோன்றியதெனில், ஒவ்வொரு உயிரினத்திற்கும் இடைப்பட்ட இணைப்பு சங்கிலி அறுந்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். பிற்காலத்தில் ஓவன் பறவையும் மீனும் சேர்ந்த கலவையாக இருந்த ஆர்ச்சியோபெட்ரிக்ஸ் (Archaeopteryx) புதைபடிவத்தை கண்டுபிடித்தார். பெரும்பாலான இணைப்பு கண்ணி உயிரினங்கள் – மூதாதை உயிரினங்கள் அருகி அழிந்திருக்கின்றன என்பது தெரிய வந்தது. தொல்லுயிர் ஆய்வாளர்கள் அவற்றை புதைபடிவ சான்றுகளாக கண்டறிந்து வருகிறார்கள்.
மேலும், தென்னமெரிக்க அமேசான் காடுகளில் வாழும் ஹோட்ஜின் (hoatzin) பறவை ஆர்ச்சியோபெட்ரிக்சைப் போலவே தனது காலில் உள்ளதைப் போன்ற கூர் நகங்களை இறக்கைகளின் நுனியிலும் கொண்டிருக்கின்றன. கிழக்கு ஆஸ்திரேலிய காடுகளில் வாழும் பிளாட்டிபஸ் (platypus) என்னும் பாலூட்டி வியத்தகு வகையில் பல விலங்குகளின் கலவையாகவும், பாலூட்டி மற்றும் ஊர்வனவற்றின் கலவையாகவும் இருக்கிறது. இவை தான் அழியாமல் இன்று உயிருடன் இருக்கும் இணைப்பு சங்கிலிகள்.
டார்வினுக்கு பிறகு 20-ம் நூற்றாண்டில் கதிரியக்க தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனிமங்கள் இயற்கையாகவே கதிரியக்கத்தின் மூலம் ஆற்றலை தொடர்ந்து வெளியிட்டு நிறையை இழக்கின்றன. இத்தனிமங்கள் தமது அணுநிறையில் பாதியளவை இழப்பதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் ‘அரை ஆயுட்காலம்’ எனப்படுகிறது.
புவியின் பாறை அடுக்குகளில் உள்ள கரிம பொருட்களின் அரை ஆயுட்காலத்தை கணக்கிடுவதன் மூலம் பாறைகளின் வயதை கண்டறிய கரிமக் காலக்கணிப்பு நுட்பம் உருவாக்கப்பட்டது. இக்கணக்கீட்டு முறையின் மூலம் தொல்லுயிர் எச்சங்களின் வயதை அறிவியலாளர்கள் கணக்கிடுகின்றனர். இவற்றின் மூலம் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்றும், நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின என்றும் கண்டறிந்துள்ளனர். சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையிலும் நுண்ணுயிர்களே பூமியில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் அதன் பின்னரே படிப்படியாக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். டார்வின் முன்வைத்த படிப்படியான மாற்றம் ஏற்பட தேவையான நீண்ட காலக்கெடு இயற்கை வரலாற்றில் இருந்தது கண்டறியப்பட்டு விட்டது.
சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்து பெற்ற மாற்றங்கள் பாரம்பரிய பண்புகளாக எவ்வாறு தலைமுறை தலைமுறையாக சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு டார்வின் காலத்தில் அறிவியல் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை.
ஆனால், டார்வினுக்கு பின்னர் உயிரியல் துறை பல முன்னேற்றங்களை அடைந்து குரோமோசோம்களினுள் உள்ள மரபணுக்களின் மூலம் பாரம்பரிய பண்புகள் சந்ததிகளுக்கு கடத்தப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
history_bar2நாம் அறிந்தவற்றில் மிகச்சிறிய பாக்டீரியாவான மைக்ரோ பிளாஸ்மா ஜெனிட்டலியம் சுமார் 400-க்கும் மேற்பட்ட மரபணுக்களை கொண்டுள்ளது. எளிமையான உடலமைப்பை கொண்டிருக்கும் நாடாப்புழுவில் சுமார் 16,000 மரபணுக்கள் இருக்கின்றன. மனித உடலிலோ சுமார் 30,000 மரபணுக்கள் மட்டுமே இருக்கின்றன.
டார்வின் தனது இயற்கை தெரிவுக்கு உயிரினங்களுக்கிடையிலான ஒற்றுமையை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை. வேற்றுமையையும் கணக்கிலெடுத்துக் கொண்டே பரிணாம மர வரைபடத்தை உருவாக்கினார்.
1990-களில் பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களை குறிநீக்கம் செய்து படியெடுத்து வைக்கும் திட்டங்கள் துவக்கப்பட்டன. 2000-ம் ஆண்டு கிரேக் வெண்டர் என்ற ஆய்வாளரும் அவரது குழுவினரும் மனித மரபணுக்களை குறிநீக்கம் செய்தனர். இவ்வாய்வுகள் டார்வினின் பரிணாம மரத்தை (வரைபடத்தை) சரியென்று நிருபிக்கின்றன. உதாரணமாக மனிதனுக்கும் சிம்பன்சி குரங்குகளுக்கும் இருக்கும் மரபணு வேறுபாடு 0.2% மட்டுமே (ஆயிரத்தில் 2 பங்கு).
இன்றும் பரிணாம வளர்ச்சியை மறுக்கும் மதவாதிகள் டார்வினுக்கு முந்தைய பரிணாம கோட்பாடுகளில் இருந்த குறைபாடுகளை முன்வைத்தே கேள்வியெழுப்புகின்றனர். உதாரணமாக எல்லா குரங்கும் ஏன் மனிதனாகவில்லை? இப்போது ஏன் குரங்கு மனிதனாக மாறுவதை நாம் காண முடியவில்லை. பரிணாமம் தற்போது ஏன் நிகழவில்லை? போன்ற கேள்விகள் ஏணிப்படி வடிவிலான பரிணாம வளர்ச்சியை மனதிற்கொண்டு 19-ம் நூற்றாண்டிலேயே கேட்கப்பட்டு டார்வினின் கோட்பாட்டால் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டவைதான்.
மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடையவில்லை. மாறாக ஒரு பொது மூதாதை உயிரினத்திலிருந்து மனிதனும் குரங்கும் இயற்கை தெரிவின் மூலம் மாற்றமடைந்து வெவ்வேறு உயிரினங்களாக மாறின. மேலும் மாற்றங்கள் சிறுக சிறுக படிப்படியாக நடக்கின்றன. அவை பரிணாமத்தில் பிரதிபலிக்க ஆயிரத்தில் தொடங்கி இலட்சம் கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் தான் நம்மால் அவற்றை கண்டுணர இயலவில்லை.
மேலும் பூச்சிக் கொல்லிகளில் இருந்து தம்மை தகவமைத்து பாதுகாத்துக் கொள்ளும் பூச்சிகள், கொசு மருந்துகளால் பாதிப்படையாத கொசுக்கள் என இன்றும் தகவமைத்தல் நடந்து கொண்டுதானிருக்கிறது.
இயற்கை தெரிவு அதுவரை நிலவிவந்த மதவாத முகாம்களைச் சேர்ந்த கருத்துமுதல்வாத மற்றும் இயக்கமறுப்பியல் தத்துவ, சிந்தனை முறைகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து குப்பைக்கு வீசியெறிந்ததுடன் அறிவியல் பூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாததிற்கு நிருபணமாகவும் இருக்கிறது.
ஆனால் இன்றும் மதவாதிகள் பரிணாமம் என்பது டார்வின் முன்வைத்தது ஒரு கோட்பாடே அன்றி உண்மை அல்ல என்கின்றனர். பரிணாமம் என்பது இயற்கையில் நடக்கும் எதார்த்த உண்மையாகும். இயற்கை தெரிவு என்பதே டார்வின் முன்வைத்த கோட்பாடாகும்.
முன்னர் டார்வினை மூர்க்கமாக எதிர்த்த கத்தோலிக்க பாதிரிகள், இன்று அனைத்து உயிர்களுக்கும் மூதாதையான ஆதி உயிரிலிருந்தே தோன்றின என்ற பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாகவும், அந்த ஆதி உயிரை படைத்தது தங்களது கடவுள் தானென்று வெட்கமின்றி கூறிக்கொள்கின்றனர்.
வேத காலந்தொட்டு தனது ஒடுக்குமுறை கோட்பாடுகளை கைவிடாமலேயே எதிர் மரபுகளை உள்வாங்கியும், அழித்தும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் சனாதான மதமோ இவை அத்தனையும் பத்து அவதாரங்களின் மூலம் அன்றைக்கே சொல்லப்பட்டு விட்டதாகவும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளனைத்தும் தங்களது இந்து தத்துவ மரபை நிருபணம் செய்யும் சான்றாதாரங்களே என்றும் வழமைபோலவே பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இசுலாமியர்களும் குரானின் வசனங்களுக்கும் அறிவியியல் கண்டுபிடிப்புகளுக்கும் முடிச்சு போட்டு எல்லாமே ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டதாக தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். அதாவது எல்லா மதவாதிகளும் இயற்கையில் இல்லாத தங்களது இருத்தலுக்கான வாய்ப்புகளை அறிவியலிடம் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு சமாளிக்க முயல்கின்றனர்.
மற்றொரு புறம் டார்வினின் பரிணாமக் கொள்கையை குறுக்கித் திரித்து வறட்டுத்தனமாக சமூகத்திற்கு பொருத்துகின்றனர் சிலர். 18-ம் நூற்றாண்டில் மால்துஸ் தமது கட்டுரைகளில் அன்றைய முதலாளித்துவ சமூகத்தில் நிலவிய பட்டினிச்சாவுகள், வேலையின்மை போன்ற கொடூரமான ஏற்றத்தாழ்வுகளை இயற்கை நியதியாக முன்வைத்து மனித சமூக வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலச்சூழலில் உருவான முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழ் நிலவிய சமூக அவலங்களை எக்காலத்திற்கும் பொருந்தும் இயற்கை விதியாக்கி சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் முட்டுக்கொடுத்தை, சமூக வரலாற்றின் இயக்க விதிகளை கண்டறிந்த மார்க்ஸ் அம்பலப்படுத்தினார்.
நவீன மால்தூசியர்கள் இன்றும் கூட தகுதியானவை பிழைத்திருக்கும், வலியவை உயிர்வாழும் போன்ற டார்வினுடைய கோட்பாட்டை கொண்டு முதலாளித்துவ சுரண்டலையும் ஏற்றத்தாழ்வுகளையும் நியாயப்படுத்துகின்றனர்.
தகுதியான பண்புகளை சந்ததிக்கு கடத்தும் மரபு விதிகளை செயல்முறைபடுத்தி தகுதியற்றவை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதை தடுப்பதாக கூறி இனப்படுகொலைகளும் கூட நியாயப்படுத்தப்படுகின்றன. டார்வினின் கோட்பாட்டை பின்பற்றியே நாஜிக்கள் ஆரிய இனத்தின் புனிதப்பண்புகளை உயர்த்துவதற்காகவும் பரவலாக்குவதற்காகவும் இரண்டாம் உலகப்போரின் இனப்படுகொலைகளை நடத்தியதாகவும் அவதூறு பரப்பப்படுகிறது.
இயற்கையை கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளை மனிதன் தனது செயல்பாடுகளால் தீர்மானித்து மாற்றியமைக்கும் சமூக நிகழ்வுகளுக்கு பொருத்துவதும், டார்வினின் இயற்கை தெரிவு கோட்பாட்டிற்கும் நாஜிக்களின் இனப்படுகொலைக்கும் முடிச்சு போடுவதும், டார்வினின் கோட்பாடுகளை பற்றிய அறிவீனம் மட்டுமின்றி திட்டமிட்ட அவதூறுமாகும்.
டார்வின் முன்வைத்த இயற்கை தேர்வு கோட்பாட்டில் எவ்வித புனித பண்புகளையும் குறிப்பிடவில்லை. உயிர்கள் சூழ்நிலையில் உயிர்த்திருப்பதற்கு தம்மை தகவமைத்துக் கொள்ளும் பண்புகளை, உயிர்கள் அப்பண்புகளை பெறுவதற்கு இயற்கை நிர்பந்திப்பதாகவும் தான் கூறினார். இனப்படுகொலையாளர்கள் இயற்கை தெரிவு கோட்பாட்டை பின்பற்றவில்லை, மாறாக செயற்கை தெரிவு நடைமுறையையே பின்பற்றுகின்றனர், அத்தகைய நடைமுறைகள் இயற்கையானவை அல்ல, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இயற்கை தெரிவை மறுக்கும் கடவுள் படைப்பு கோட்பாடும் கூட ஒருவகையில் இத்தகைய செயற்கை தெரிவு நடைமுறையே என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதனுடைய சமூக ரீதியான போராட்டத்தில் இயற்கைத் தேர்வின் பங்கான கூட்டுழைப்புதான் முக்கிய பங்காற்றியிருக்கிறது. இந்தக் கூட்டுழைப்புதான் பல்வேறு அனுபவங்களை பெற்று, தொகுத்து, ஆய்வு செய்து, புதியவற்றை கண்டுபிடித்து சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இறுதியில் இந்த இயற்கைத் தேர்வு தன்னுணர்வு  பெற்று உணர்வுபூர்வமாக அதை முன்னெடுக்கும் போராட்டத்தினை நடத்துகிறது.
இன்றைக்கு இயற்கைத் தேர்வும் அது சார்ந்த பரிணாமும் மனிதனின் புரிதலுக்குள் வந்து விட்டபடியால் அதில் மனித அறிவும் இனி வினையாற்றும். அதாவது உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் குறித்த செயல்பாடுகளில் மனிதனின் அறிவு பாரிய மாற்றத்தை கொண்டு வரும், வந்திருக்கிறது. ஒட்டு ரக விதைகள், குளோனிங், பிராயலர் கோழி, லெக்கான் கோழி, சீமைப் பசு என்று அதற்கு ஏராளம் சான்றுகளைக் கூறலாம். எதிர்மறையில் இவை உயிரியில் ஆயுதங்களாகவும் ஏகாதிபத்தியங்களின் கைகளில் இருக்கின்றது. அதே நேரம் இப்போதும் போராட்டத்திற்கான களம் நின்றுவிடவில்லை. மனித சமூகத்தில் இருப்பவனும், இல்லாதவனும் பிரிந்து கொண்டு சண்டை போடுகிறார்கள். இந்த சண்டையில் ஏழைகள் அல்லது உழைக்கும் மக்கள் வெற்றிபெறுவார்கள் என்பதை அறிவியல் உண்மையாக மார்க்சியம் நிறுவியிருக்கிறது. அப்போது இயற்கைத் தேர்வும் அது உருவாக்கிய மனிதனின் செயற்கைத் தேர்வும் இணைந்து பொது நலனின்பாற்பட்டு ஒரு உன்னத இயற்கை அமைப்பை காப்பதற்கு வேலை செய்யும். அப்போது டார்வின் விதித்திருந்தபடி இயற்கைத் தேர்வில் தோற்க இருக்கும் உயிரினங்கள் கூட காக்கப்படும்.
இது டார்வினின் கோட்பாட்டிற்கு மாறானதல்லவா என்று சிலர் கேட்கலாம். இல்லை. இயற்கை தன்னைத் தானே அறியாமல் காப்பாற்ற முயற்சி செய்ததற்கும், தன்னை அறிந்து கொண்டு காப்பாற்ற முயற்சி செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. அதாவது ஒட்டு மொத்த இயற்கையும் கூட எளிமை எனும் இயக்கத்திலிருந்து சிக்கல் எனும் வளர்ச்சியை நோக்கி மாறுகிறது. அனிச்சை முயற்சிகள் திட்டமிட்ட முயற்சிகளாக மாறுகின்றன. இறுதியில் கடவுளை படைத்த மனிதனே இயற்கையின் பாதுகாவலனாக மாறுகிறான். இதற்கு டார்வின் போன்ற அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள இயற்கை அறிவியல் மட்டும் போதுமானதல்ல. சமூக அறிவியலான மார்க்சியத்தின் புரட்சிகள் தேவைப்படுகிறது.
- மார்ட்டின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக