ஞாயிறு, 29 ஜூன், 2014

ராமதாஸ்: வன்னிய ஜாதி தலைவர்களை கொலை செய்ய சதி !

சென்னை: பாமகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் வன்னிய சமுதாய தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியில் ஐயத்திற்கிடமான நடவடிக்கைகள் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று அதிகாலை காவல்துறை நடத்திய ஆய்வில், பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த இளைஞர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும், ஆறு குழாய் வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. இது வழக்கமாக நடைபெறும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக தோன்றவில்லை. மாறாக தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்தின் தொடக்க முனை தர்மபுரியில் அம்பலமாகி இருப்பதாகவே தெரிகிறது.  வெறும் வன்னிய ஜாதி வோட்டுக்களே போதும் என்ற முடிவுக்கு அய்யா வந்துவிட்டாரா ?
இக்கைது நடவடிக்கையின் பின்னணி பற்றி வெளியாகியுள்ள செய்திகள் தமிழகத்தின் எதிர்காலம் குறித்து அச்சமும், கவலையும், அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. காதல் நாடகத் திருமணம் செய்து, தூண்டிவிட்ட சமூக விரோத கும்பலால் கைவிடப்பட்டதையடுத்து தற்கொலை செய்து கொண்ட நத்தம் காலனி இளவரசனின் முதலாண்டு நினைவு நாள் வரும் 4ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. அதே நாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்ய நத்தம் காலனியைச் சேர்ந்த சிலரும், அவர்களுக்கு பின்னணியாக செயல்பட்டு வரும் சக்திகளும் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதற்காக நத்தம் காலனியை சேர்ந்தவர்கள் உட்பட 30 பேரை ஒரு கும்பல் வெளிமாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று நக்சலைட்டுகள் மூலம் வன்முறை, கலவரம், துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாசகார செயல்களை செய்வதற்கான பயிற்சிகளை அளித்திருக்கிறது. பாமக மற்றும் வன்னிய சமுதாயத் தலைவர்களை கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், குழாய் வெடி குண்டுகள் போன்றவற்றை கொண்டு வந்து நத்தம் காலனியில் பதுக்கி வைத்து விட்டு சதித் திட்டத்தை அரங்கேற்றுவதற்கான ஒத்திகைகளில் ஈடுபட்டிருந்த போது தான் சதிகாரர்களை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்திருக்கிறது. காவல்துறையின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது. இளவரசனின் தற்கொலையால் வேதனையடைந்த சிலர் ஏதோ உணர்ச்சி வேகத்தில் இப்படி ஒரு சதித் திட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று இந்த விஷயத்தை ஒதுக்கிவிட முடியாது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை கலவர பூமியாக்குவதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி தான் இதுவாகும். கடந்த காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை ஆராய்ந்து பார்த்தால் இச்சதியின் பின்னணியை உணரலாம். மக்களவைத் தேர்தலின் போது தர்மபுரி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாமக வேட்பாளரும், இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸை படுகொலை செய்யும் நோக்குடன் பெத்தூர் காலனி என்ற இடத்தில் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கூர்மையான முனை கொண்ட 2 கிலோ எடை கொண்ட கல், அன்புமணி ராமதாஸ் பயணம் செய்த வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஓட்டுனரைத் தாக்கியது. அந்தக் கல் குறி தவறியதால் தான் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தர்மபுரி மாவட்டத்தின் வெவ்வெறு பகுதிகளைச் சேர்ந்த ரவுடிகள் ஆவர். அன்புமணியைத் தாக்க வேண்டும் என்பதற்காவே தேர்ந்த ரவுடிகள் அழைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது தெளிவானது. அதற்கு முன்பாக அரக்கோணம் தொகுதியில் பாமக வேட்பாளர் அரங்க. வேலு மீது 3 முறையும், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு மீது இரு முறையும், ஆரணி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் அகோரம் ஆகியோர் மீது தலா ஒருமுறையும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவையும் பெத்தூர் காலனி தாக்குதலைப் போன்றே திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கூலிப்படையினரை அழைத்து வந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் என்று அப்போதே கூறியிருந்தேன். அதுமட்டுமின்றி, "இந்த தாக்குதல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்பு தான் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. வட தமிழகத்தில் பெருமளவில் சாதிக் கலவரத்தை ஏற்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் பிரச்சாரத்தை தடுத்து, வெற்றி பெற முயற்சி செய்வது தான் இந்தத் தாக்குதல்களின் முக்கிய நோக்கம் ஆகும். ஆனால், பாமக தலைவர்கள் தங்களின் தொண்டர்களை அமைதிப்படுத்தி, எதிர் தாக்குதல் எதுவும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனினும், இத்தாக்குதல்களுக்குக் காரணமான சமூக விரோத சக்திகள் தங்களின் நோக்கம் நிறைவேறும் வரை தங்களின் சமூக விரோத செயல்களைத் தொடர்வார்கள்" என்று எச்சரித்திருந்தேன். அதைப் போலவே, மிகப் பெரிய கொலைச்சதி திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே பாமக மற்றும் வன்னியர் சமுதாயத் தலைவர்களை படுகொலை செய்ய மிகப்பெரிய அளவில் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதும் இதன் பின்னணியில் பல்வேறு சக்திகள் இருப்பதும் தெளிவாகிறது. இதற்கு முன்பு பாமகவினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதெல்லாம், பொது அமைதியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொண்டர்களை பாமக தலைவர்கள் அமைதிப்படுத்தினர். பெத்தூர் காலனியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அங்கும், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொந்தளிப்புடன் காணப்பட்ட தொண்டர்களை டாக்டர் அன்புமணி ராமதாஸ் அமைதிப்படுத்தியதை காவல்துறை அதிகாரிகளே பாராட்டினர். ஆனால், வன்முறை செய்வதையே வாடிக்கையாகக் கொண்டவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயல்வதும், அவர்களுக்கு ஆதரவாகவும், வன்னியருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து இத்தகைய செயல்களை சில அரசியல் கட்சிகள் ஊக்குவிப்பதும் சரியானவையல்ல. சாதியையும், அதற்கு ஆதரவாக உள்ள சில சட்டங்களையும் கேடயமாக பயன்படுத்திக் கொண்டு சமூக அமைதிக்கு சில சக்திகள் தீங்கு விளைவிப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது. நத்தம் காலனியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு நக்சலைட்டுகள் மூலம் ஆயுதப்பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்தக் கும்பலில் உள்ளவர்கள் வேறு ஏதேனும் பகுதிகளில் வன்னியர்களுக்கு எதிராக வன்முறை நடத்தும் எண்ணத்துடன் ஊடுருவியிருக்கிறார்களா? வேறு எங்காவது ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்களா? என்பதைக் காவல் துறையினர் கண்டறிய வேண்டும். இதற்காக நடுநிலையான காவல் அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுப் படையை அமைத்து, வடக்கு- மேற்கு மாவட்டங்களை கலவர பூமியாக்குவதற்கான சமூக விரோத சக்திகளின் சதித் திட்டத்தை அடியோடு வேரறுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக