ஞாயிறு, 22 ஜூன், 2014

சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்?

புதுடில்லி : ரயில் கட்டண உயர்வை அடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும், மாதம்தோறும், 10 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது முதல், ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்பதை, புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, சதானந்த கவுடா கூறி வந்தார்.அதன்படி, நேற்று முன்தினம் ரயில் பயணிகள் கட்டணம், 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம், 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.இந்நிலையில், ரயில் கட்டண உயர்வை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.


அவ்வப்போது மாற்றம்



இது தொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:'சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கலாம்' என, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி அளித்ததை அடுத்து, பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது.அதேநேரத்தில், டீசல் விலையையும், சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், மாற்றி அமைக்க, முந்தைய மத்திய அரசு தீர்மானித்தது. ஆனால், அப்படி மாற்றி அமைத்தால், ஒரே நேரத்தில், பெரிய அளவில், டீசல் விலை உயரும். அது, மக்களிடையே பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவானது.அதனால், ஒவ்வொரு மாதமும், 50 காசுகள் என்ற அளவில், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இப்படி உயர்த்தப்படும் டீசல் விலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற அளவை எட்டும்போது, டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விடும். அதன்பின், பெட்ரோலை போல, சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், டீசல் விலையும் மாற்றி அமைக்கப்படும்.இந்த எரிபொருட்கள் வகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, மற்றொரு பெரிய சிக்கலாக இருப்பது, சமையல் எரிவாயு விலை. சமையல் எரிவாயுவுக்கு, பெரிய அளவில் மானியம் வழங்கப்படுவதால், முந்தைய ஆட்சியில், ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், சிலிண்டர்கள் எண்ணிக்கை, ஒன்பதாகவும், பின், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் வேண்டுகோளின்படி, 12 ஆகவும் உயர்த்தப்பட்டது.சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, மானியம் இல்லாமல், 905 ரூபாய்க்கும், மானியத்துடன், 405 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, சிலிண்டர் ஒன்றுக்கு, 500 ரூபாய் அளவில் ஏற்படும் இழப்பை, மத்திய அரசு மானியமாக வழங்கி வருகிறது.

மாதம் 10 ரூபாய்



தற்போது, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தையும் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டீசல் விலையை படிப்படியாக உயர்த்தி, அதற்கு வழங்கப்படும் மானியத்தை முழுமையாக ரத்து செய்ய உள்ளதைப் போல, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும், மாதம் தோறும், 10 ரூபாய் அளவுக்கு உயர்த்தி, பின், அதற்கான மானியத்தையும், முழுமையாக ரத்து செய்து விட, மத்திய அரசு தீர்மானித்துள்ளது.இந்த மானிய ரத்து மூலம், மத்திய அரசுக்கு, 7,000 கோடி ரூபாய் மிச்சமாகும். அந்தத் தொகையை வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட, மோடி அரசு திட்டமிட்டுள்ளது.அதனால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு, அடுத்த மாதம், 11ம் தேதி பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், மத்திய பட்ஜெட்டிற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பிறகோ அறிவிக்கப்படலாம்.இவ்வாறு, பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மானியம் ரூ.1.40 லட்சம் கோடி



*பெட்ரோலிய பொருட்களுக்காக,மத்திய அரசு வழங்கும் மானியம், இந்த ஆண்டில், 1.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
*கடந்த ஒன்பது மாதத்தில் இல்லாத அளவுக்கு, கச்சா எண்ணெய் விலை, தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால், சமையல் எரிவாயு விலை
உயர்த்தப்படுவது நிச்சயம் என, பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*சமையல் காஸ் விலையை உயர்த்தும்படி, பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், பெட்ரோலிய அமைச்சகத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை பிரிவும், திட்ட மற்றும் ஆய்வு பிரிவும் பரிந்துரை செய்துள்ளன.
*வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கை, 2012 செப்டம்பரில், ஆறாக குறைக்கப்பட்டது. பின், 2013 ஜனவரியில் ஒன்பதாகவும், இந்த ஆண்டு ஜனவரியில், 12 ஆகவும் உயர்த்தப்பட்டது.
*ஈராக் போரால் கச்சா எண்ணெய் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து, பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் நேற்று முன்தினம், பெட்ரோலியத்துறை செயலர், சவுரப் சந்திரா விவரித்துள்ளார்.

விலை உயர்வு ஏன்?



கடந்த, 2013 - 14ம் நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில், 13 சதவீதம், ஈராக் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது, அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்வதால், கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது. அப்படி உயர்ந்தால், பெட்ரோலிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.இதை கருத்தில் கொண்டே, சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்த, மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:கச்சா எண்ணெய் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டால், பெட்ரோலிய பொருட்களின் சப்ளையிலும் மாற்றம் ஏற்படும். அதனால், ஈராக் தவிர மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்தி உள்ளேன்.மேலும், ஈராக் நிலவரங்களையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதனால், இந்த விஷயத்தில், நாம் உண்மைகளை மட்டுமே கவனிக்க வேண்டும். வதந்திகளை நம்பக்கூடாது.இவ்வாறு, தர்மேந்திர பிரதான் கூறினார்.

சமையல் எரிவாயு விற்கும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் நஷ்டத்தில் இயங்கவில்லை. அவற்றின் ஆண்டு அறிக்கையில், இது தெரிகிறது. ஆனால், எரிவாயுவுக்கு அளிக்கும் மானியத்தை, படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில், மாதம், 10 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமாகும்.
துரைபாண்டி, பொதுச்செயலர்,மத்திய அரசு ஊழியர் சம்மேளனம்

மக்களின் அத்தியாவசிய நுகர் பொருட்கள் சந்தையை, மத்திய அரசு, வர்த்தக ரீதியாக அணுகக் கூடாது. மானியம் வழங்குவதால், நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாக, அத்தியாவசிய நுகர் பொருட்களின் விலையை, மத்திய அரசு உயர்த்துவது, விலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் சாதாரண, நடுத்தர மக்கள் மீது, நிதி சுமையை மேலும் அதிகரிப்பதாகும்.
சடகோபன், ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம்

சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் போன்ற பெட்ரோலிய பொருட்களின் விலையை, ஒரே நேரத்தில் பெருமளவு அதிகரித்தால், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு வரும். அதனால், மாதந்தோறும் கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தினால், மக்களுக்கு சுமையாகத் தெரியாது. எதிர்க்கவும் மாட்டார்கள் என, மாதந்தோறும் விலையை உயர்த்தும் உத்தியை, மத்திய அரசு பின்பற்றுகிறது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக