திங்கள், 2 ஜூன், 2014

தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் ராஜினாமா?

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 217 தொகுதிகளில், அ.தி.மு.க., முன்னிலை பெற்றது. திருவாரூர், பாளையங்கோட்டை, ஆத்தூர், கடலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே தி.மு.க.,வும் மீதமுள்ள 13 சட்ட சபை தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி முன்னிலையும் பெற்றது. இப்படி நுணுக்கமான புள்ளி விவரங்களை வைத்து, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம், அறிவாலயத்தில், இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
அக்கூட்டத்திற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைவம வகிக்கிறார். கூட்டத்தில் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், முக்கிய ஆலோசனைகளை கருணாநிதி வழங்க திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து, கட்சிவட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு 20 சதவீதம் ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க.,விடம் தோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 217 தொகுதிகளில் அ.தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்று, முன்னிலை வகிக்கிறது. தி.மு.க., சார்பில் பாளையங்கோட்டை, ஆத்தூர், கடலூர், திருவாரூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மட்டும் அதிக ஓட்டுகளை பெற்று முன்னிலை வகித்துள்ளது.இந்த புள்ளி விவரக் கணக்கை மேற்கோள் காட்டி, பேச திட்டமிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாவட்ட செயலர்கள் ராஜினாமா செய்வது, மாவட்டங்களை இரண்டாக பிரித்து நிர்வாக அமைப்பை பலப்படுத்துவது போன்றவை, அக்கூட்டத்தில் முக்கிய கருத்தாக ஆலோசிக்கப்படுகிறது.பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள புதிய அமைச்சரவைக்கு வாழ்த்து, தமிழக மீனவர்கள் விடுதலைக்கு நன்றி, பாராட்டு, கருணாநிதி 91 வது பிறந்த நாளுக்கு வாழ்த்து, லோக்சபா தேர்தலில், 144 தடை உத்தரவு பிறப்பிப்பு, வாக்காளர்களுக்கு பணம் வழங்கல் உள்ளிட்ட ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.அதோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி சொன்னபடியே தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளதோடு, அவரை கட்சிக்கு வெளியே வைத்துக் கொண்டு கட்சியை சிறப்பாக நடத்த முடியாது என்பதை கட்சித் தலைமை தெளிவாக உணர்ந்திருக்கிறது. அதனால், அவரை கட்சியில் மீண்டும் இணைப்பது குறித்து, ஆலோசிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. கூட்டு தலைமை< கட்சியில் இனி எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் தனி நபரால் எடுக்கப்படுவதாக இருக்காமல், கூட்டுத் தலைமையின் கீழ் எடுக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்படும். கட்சியின் தலைவர் கருணாநிதியின் அறிவுரையில் படியே கட்சி செயல்பாடுகளை முழுமையாக அமைத்து கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தன் பிறந்த நாளையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:தேர்தலில், தி.மு.க., பெரும் தோல்வி கண்டுள்ளது. தேர்தல் முடிவை, தொண்டர்கள் தம்மை கூர் தீட்டிக் கொள்ளவும், செம்மைபடுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் சுயபரிசீலனை செய்து, நாம் எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே, நாம் அடுத்து பெறப் போகும் வெற்றிக்கு, அச்சாராமாக அமையும். இதுவே, என் பிறந்தநாள் செய்தி.இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக