செவ்வாய், 17 ஜூன், 2014

எங்களுக்கு இந்திதான் வேண்டும்!” - தமிழர்கள் ஆர்வம்

என்.டி.டி.வியில் இப்படி ஒரு “சிறப்பு” செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் பேசும் சிலர் எப்படியாவது தமிழ் படிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டும் என்று பேசுகிறார்களே ஒழிய, இந்தி கற்றுக்கொள்வதால் உண்மையிலேயே ஏதேனும் நன்மை இருக்கிறது என்று உணர்ந்து பேசுவதுபோல் தெரியவில்லை. ஓரிரு திறமைசாலிகள், “லோக்கல் லாங்குவேஜும்” முக்கியம் என்கிறார்கள். ஆனால் அதை வீட்டிலேயே தெரிந்துகொண்டுவிடலாமாம். அதற்கு எதற்குப் பள்ளிக்கூடம் என்று கேட்கிறார்கள். தமிழ் மீடியம் படிப்பு என்பதை இன்று தமிழர்களுக்கு விற்பது மிக மிகக் கடினம். தாய்மொழியில் படித்தால்தான் நன்றாகப் புரியும் என்றெல்லாம் மக்களிடம் பேசப்போனால் உடனே ‘உன் மகன்/ள் எந்த வழியில் படிக்கிறான்/ள்?’ என்று கேள்வி கேட்பார்கள். என் மகள் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றில் ஆங்கில வழியில் படிக்கிறாள். ஆனால் தமிழ்தான் இரண்டாவது மொழி. அந்தப் பள்ளியில் சமஸ்கிருதம், இந்தி போன்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. மூன்றாவது மொழியாக (எட்டாம் வகுப்புவரை) இந்தி படித்தாள்.


குறைந்தபட்சம் தமிழை ஒரு பாடமாகவாவது படித்தாகவேண்டும் என்ற எண்ணம் இன்று நகரங்களில் வசிக்கும் உயர்மட்டத்தவர்களிடையே இல்லாமல் போய்விட்டது. வீடுகளில் ஆங்கிலம்தான் பேச்சு மொழி.

அப்படி இவர்கள் படிக்கும் இரண்டாம் மொழியான இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவற்றில் இந்த மாணவர்கள் எப்படிப்பட்ட உயர் நிலையை அடைந்திருக்கிறார்கள் என்றால் பெரும்பாலும் குப்பையாகத்தான் இருக்கும். உலகமயச் சூழலில் உலகை வெல்ல இன்னொரு மொழியைக் கற்பது மிக முக்கியமானது என்பதுபோல் இவர்கள் பேசினாலும், 12-ம் வகுப்புக்குப் பிறகு அதற்கான எந்தச் சிறப்பு முயற்சியையும் இவர்கள் எடுப்பதில்லை என்பதிலிருந்தே இவர்களுடைய குட்டு வெளிப்பட்டுவிடுகிறது. நீங்கள் படிக்கப்போவது பெரும்பாலும் பொறியியல். அங்கே உங்களுக்கு ஆங்கிலம்கூட அதிகம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை! ஆக, சும்மா எதையாவது சொல்லி, தமிழ்ப் படிப்பிலிருந்து ஓடிவிடுவதுதான் நோக்கம்.

இதற்குத் தமிழாசிரியர் பெருந்தகைகளும் ஒரு காரணம் என்பதை இங்கு நாம் குறிப்பிடவேண்டும். சமஸ்கிருதம் தொடங்கி பிரெஞ்சுவரை எளிமையான பாடங்கள் இருக்க, சமச்சீர் கல்வியின் தமிழ்ப் பாடம் மட்டும் வறண்டுபோன மொழியில் இருக்கிறது. அதன் தரமும் பிற மொழிப் பாடங்களைவிட அதிகம். தமிழின் தொன்மையான இலக்கியங்கள்கூட இருந்துவிட்டுப் போகலாம்; அவற்றைச் சுவையாகச் சொல்லித்தர முடியும். ஆனால் மிகக் கொடூரமான இலக்கணப் பாடங்கள்! எட்டுவிதமான பொருள்கோள்கள் யாவை, தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக! இவையெல்லாம் தேவையே இல்லை. அடிப்படையான திறன்களைப் பயிற்றுவிக்கும் பாடமுறையாக இல்லை.

இப்போதிருக்கும் பாடத்திட்டத்தைத் தொடருங்கள்... தமிழ்நாட்டில் ஒருவர்கூடத் தமிழ்ப் பாடத்தை விருப்பத்துடன் ஒரு பாடமாக எடுத்துப் படிக்க மாட்டார். சட்டம் இயற்றி மிரட்டித்தான் அவரைப் படிக்க வைக்க முடியும். ஒரு கட்டத்தில் நீதிமன்றம்கூட அவருக்கு ஆதரவாகப் போவதற்கு வாய்ப்பு உண்டு.

***

தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாகப் படிக்கவேண்டும் என்ற தமிழக அரசின் சட்டத்தை நான் முழுவதுமாக ஆதரிக்கிறேன். ஆனால் அத்துடன் தமிழ்ப் பாடத்திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறேன்.

மேலும் ஆங்கிலம், தமிழ் இரண்டுக்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டிரண்டு பாடத்திட்டங்கள் தேவை. ஆங்கில வழியில் படிப்பவருக்கான ஆங்கிலப் பாடம் சற்றே உயர் நிலையிலும் தமிழ் வழியில் படிப்பவருக்கான ஆங்கிலப் பாடம் சற்றே தாழ் நிலையிலும் இருக்கவேண்டும். அதேபோலத்தான் தமிழ்ப் பாடமும். எனவே எட்டாம் வகுப்பு என்றால், ஆங்கிலம்-உயர், ஆங்கிலம்-தாழ், தமிழ்-உயர், தமிழ்-தாழ் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்கள் வேண்டும். பரீட்சையின் கடுமையும் அவ்வாறே மாறவேண்டும்.

இவற்றுடன்கூட மும்மொழித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டும். மூன்றாவது மொழியாக, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, சமஸ்கிருதம், சீனம், ஜப்பானியம், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் படிக்கவேண்டும் என்று சொல்லலாம். மூன்றாம் வகுப்பில் தொடங்கி பத்தாம் வகுப்பு வரை இந்த மூன்றாவது மொழியும் இருக்கவேண்டும். இதன் தரம் மேலே சொல்லப்பட்ட தமிழ், ஆங்கிலம் இரண்டையும்விடக் குறைவானதாக இருக்கவேண்டும்.

***

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் என்ன செய்வது?

தமிழ் படிக்கப் பிடிக்கவில்லை அல்லது விருப்பமில்லை என்றால் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்ந்துகொள்ளுங்கள்.

உருது படிக்க விரும்பினால் அல்லது சமஸ்கிருதம் படிக்க விரும்பினால் என்ன செய்வது? அதனை மூன்றாவது மொழியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் படிக்க விரும்பினால்? ஒன்றைப் பள்ளியிலும் மற்றொன்றை இந்தி பிரசார் சபா, சமஸ்கிருத பாரதி போன்றவற்றில் சேர்ந்தும் படித்துக்கொள்ளுங்கள்.

***

தமிழை ஒரு பாடமாகவாவது கட்டாயமாகப் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? தனி நபர் உரிமையில் தலையிடுவதாக ஆகாதா?

நீதிமன்றம்தான் இதற்குப் பதில் சொல்லவேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்தவரை, தமிழக அரசுக்கு இப்படிப்பட்ட சட்டத்தை இயற்றுவதற்கு அதிகாரம் உள்ளது. தமிழ் நாட்டில் பலருக்கு ஆங்கிலம் படிக்கப் பிடிப்பதில்லை. மாறாக மலையாளம் படித்தால் அதில் எளிதாகத் தேர்ச்சி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை விட்டுவிடுகிறோமா? கிடையாதே? அவர்கள் ஆங்கிலத்தைக் கட்டாயமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றே ஆகவேண்டும் என்கிறோம் அல்லவா? அதேபோலத்தான் தமிழும் மற்றொரு கட்டாயப் பாடம்.

ஒருவர், தான் ஆங்கில வழியில் படிக்க விரும்பவில்லை, ஃபிரெஞ்சு வழியில் படிக்கிறேன் என்று சொல்வார். இன்னொருவர் முழுக்க முழுக்க சீன மொழிவாயிலாகவே படிப்பேன் என்பார். இவற்றை நாம் அனுமதிக்கிறோமா? இல்லையே?  தன்கீழ், தமிழ் வழியாக அல்லது ஆங்கில வழியாக மட்டுமே படிக்க முடியும் என்கிறது தமிழக அரசு. அதே அதிகாரத்தின்கீழ், தமிழையும் ஆங்கிலத்தையும் கட்டாயப் பாடங்களாகப் படித்தே தீரவேண்டும் என்று சொல்லவும் அரசுக்கு உரிமை உள்ளது.

தமிழே படிக்காமல் 12-ம் வகுப்பைத் தாண்ட, சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ போன்ற பிற போர்டுகள் இருக்கவே இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக