வெள்ளி, 20 ஜூன், 2014

ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்கள்

ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் 'இசிஸ்', 'இசில்' மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தையும் கைப்பற்றும் நோக்கத்தில் நாற்புறமும் முற்றுகையிட்டு வரும் எதிரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ராணுவம் திணறி வருகிறது. இதற்கிடையில், ஈராக்கில் உள்ள 'கர்பலா' உள்ளிட்ட புனிதத் தலங்களை போராளிகள் தாக்கி அழிக்கக் கூடும் என்ற அச்சமும் மேலோங்கி வருகிறது.
இந்த தாக்குதலை முறியடிக்கும் வகையில் ஈராக்குக்கு ராணுவ உதவி வழங்க தயாராக இருப்பதாக இதுவரை பகை நாடாக இருந்த ஈரான் அறிவித்துள்ளது. இந்நிலையில், போராளிகளை ஒடுக்கி, அழிக்க அமெரிக்க விமானப்படையின் உதவியை ஈராக் அரசு கோரியது. ஈராக்குக்கு அமெரிக்க விமானப்படை அனுப்பப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க கூட்டுப் படையின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி, நேரடியாக பதில் அளிக்காமல், 'இசில்' போராளிகளை எங்கே பார்த்தாலும் அவர்களை அழிக்க வேண்டியது நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று சூசகமாக கூறியிருந்தார்.

எனவே, ஈராக்குக்கு அமெரிக்க விமானப் படைகள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 300 ராணுவ ஆலோசகர்களை ஈராக்குக்கு அனுப்ப தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஈராக்கில் இலக்கிடப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஒபாமா, ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தையும், தலைநகர் பாக்தாத்துக்கு இருக்கும் அச்சுறுத்தலையும் அமெரிக்க உளவுப்பிரிவு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

எனினும், போரை ஒடுக்க அமெரிக்கப் படைகளை மீண்டும் ஈராக்குக்கு அனுப்பும் திட்டம் ஏதுமில்லை என்றும் ஒபாமா அறிவித்துள்ளார் maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக