வியாழன், 12 ஜூன், 2014

அம்மா உப்பு ஒரு மோசடி ! 2.50 மற்றும் 4.50க்கு ரேசன் கடைகளில் விற்கப்படும் உப்புதான் தற்போது அம்மா ரூ.14

jaya-saltம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய் சாம்பார் சாதம், பேருந்து நிலையங்களில் பத்து ரூபாய்க்கு அம்மா குடிநீரைத் தொடர்ந்து அம்மா உப்பு அறிமுகமாகியிருக்கிறது. உப்பிட்டவரை மறக்கக் கூடாது என்ற பழமொழியை பண்பாடாக கொண்டிருக்கும் தமிழகத்தில் இந்த உப்பு மட்டுமல்ல, அந்த இட்லியும் கூட இதே நோக்கத்திற்காகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
சரவண பவன்களும், வசந்த பவன்களும் கோடிக்கணக்கில் கல்லா கட்டும் நாட்டில் அம்மா இட்லி இருந்தாக வேண்டுமல்லவா? கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக உழைக்கும் தமிர்களை ஆக்கிய பிறகு கஞ்சித் தொட்டி திறப்பது இருவகையில் இலாபம். ஒன்று வள்ளல் பட்டம். இரண்டு வறுமையின் கோபத்தை மட்டுப்படுத்துவது.

தண்ணீர் தனியார் மயத்தை அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டு பத்து ரூபாய் குடிநீர் வழங்குவது முன்னதை நியாயப்படுத்தவே அன்றி தடை செய்வதற்கு அல்ல. அந்த பார்வையில் இந்த உப்பு படலத்தையும் பார்ப்போம்.
தற்போது மூன்று வகையானன அம்மா உப்புகளை நியாய விலைக் கடைகள் மூலமாக விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே 1997 முதல் ரேசன் கடையில் ரூ.2.50 மற்றும் ரூ.4.50 க்கு மக்களுக்கு உப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த உப்புகளையே விலையேற்றி அம்மா உப்பாக அறிவித்துள்ள ஜெயா அரசு மறுபுறம் இது தனியார் உப்பினை விட விலை குறைவுதான் என்று நியாயப்படுத்துகிறது.
அயோடின், இரும்பு சத்து கலந்த உப்பு ஒரு கிலோ தனியாரிடம் ரூ.22, ஆனால் அம்மா உப்போ ரூ.14 என்றும், அயோடின் மட்டும் உள்ள வெளிச்சந்தை உப்பு ரூ.14 என்றும், அம்மா உப்போ ரூ.10 என்றும், ரத்த அழுத்த பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கான குறைவான சோடியம் உள்ள உப்பு வெளிச்சந்தையில் ரூ.25 என்றும், அதே அம்மா உப்பு ரூ.21 என்றும் பத்திரிகைகள் விளம்பரம் செய்கின்றன.
புதிய உப்புகளுக்கான விற்பனை திட்டத்தை ஜெயா நேற்று 11.06.2014 அன்று தொடங்கி வைத்தார். இந்த உப்புகள் சிந்தாமணி, அமுதம், கூட்டுறவு விற்பனையகங்களில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். நமக்குத் தெரிந்து இவை மட்டுமல்ல, மாவட்ட அளவில் இருந்த இத்தகைய கூட்டுறவு அங்காடிகள் இருபது வருடங்களுக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையில் கால்வாசி கூட தற்போது இல்லை. அதன்படி பார்த்தால் இந்த உப்பு பரவலாக மக்களிடம் போய்ச் சேராவிட்டாலும், விளம்பரம் அசுர வேகத்தில் பரவும்.
முதலில் இந்தியாவில் உப்பு தொழில் குறித்து ஒரு சிறு அறிமுகத்தை பார்த்து விடுவோம்.
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான இந்தியாவில் ஆண்டுதோறும் 20 மில்லியன் டன் உப்பு உற்பத்தியாகிறது. இந்தியாவில் நான்கு விதமான முறைகளில் உப்பு தயாரிக்கப்படுகிறது. கடல் நீர், ஏரி நீர், நிலம், பாறைகளில் இருந்து உப்பு பெறப்படுகிறது.
குஜராத்தின் ஜாம்நகர், மிதாபூர், ஜகார், சிரா, பவாநகர், ரஜூலா, தஹேஜ், காந்திதாம், கண்ட்லா, மலியா, லாவண்பூர் ஆகிய இடங்களிலும், தமிழகத்தின் தூத்துக்குடி, வேதாரண்யம், கோவளம், மரக்காணம் போன்ற இடங்களிலும், ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணபட்டணம், சின்னகஞ்சம், இஸ்காபள்ளி, நவ்பாடா ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிரத்தின் பாண்டுப், பயண்டார், பல்கார் பகுதியிலும், ஒரிசாவின் கஞ்சம், சுமடி பகுதியிலும், மேற்கு வங்கத்தின் கோண்டாய் பகுதியிலும் கடலில் இருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது.
ஏரியில் இருந்து உப்பு தயாரிக்கும் முறையானது ராஜஸ்தானில் உள்ள சம்பார் ஏரிப் பகுதியில் இருந்தும், நிலப்பகுதியில் தோண்டியெடுக்கும் உப்பானது கட்ச் பகுதியில் உள்ள தாரங்கதாரா, சந்தால்பூர் போன்ற இடங்களிலும், பாறை உப்பு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி பகுதியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்திய அளவில் 11,799 உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். ஏறக்குறைய 6.09 லட்சம் ஏக்கரில் உப்பு இங்கு உற்பத்தியாகிறது. இதில் 87.6% நிலமானது பத்து ஏக்கருக்கும் குறைவான உப்பளத்தை பெற்றிருக்கும் சிறு உற்பத்தியாளர்கள் வசமே உள்ளது. 6.6% பேர் 10-100 ஏக்கர் உப்பளத்தை பெற்றுள்ள நடுத்தர உற்பத்தியாளர்களாகவும், 5.8% பேர் 100 ஏக்கருக்கு மேல் உள்ள பெருவீத உற்பத்தியாளர்களும் ஆவர். ஆண்டு சராசரி உற்பத்தி 215.80 லட்சம் டன்களாகும். இதில் 59 லட்சம் டன்கள் உணவு பயன்பாட்டுக்காகவும், 107 லட்சம் டன்கள் தொழிற்துறை பயன்பாட்டுக்கும் உதவுகின்றன. உப்பு பயன்பாட்டில் மனித நுகர்வை விட தொழிற்துறை பயன்பாடே அதிகம்.
1964, 1984 ஆம் ஆண்டுகளில் அயோடின் குறைபாட்டை நீக்க தேசிய அளவில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மூலமாக அயோடினை சேர்த்து அயோடினேற்றம் செய்யப்பட்ட உப்பு அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. இந்த பிரச்சாரம் ஐ.நா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டது. இதை மறுத்து சாதா கல் உப்பே போதும் என்ற வாதங்களும் அறிவியல் உலகில் உண்டு. அதை தள்ளி வைத்து விட்டு பார்த்தால் அயோடின் உப்பு தயாரிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமல்ல. ஆனால் அப்படி விளம்பரம் செய்து பெரும் நிறுவனங்கள் உப்புசந்தையை ஆக்கிரமித்துள்ளன. எனவே இதை ஆரோக்கிய மேம்பாட்டுடன், வர்த்தக் நிறுவனங்களின் வளர்ச்சியாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.
மனித பயன்பாட்டுக்கு 60.5 லட்சம் டன் உப்பு மட்டுமே தேவைப்படுகின்ற போதே 175 டன் உப்பை அயோடினேற்றம் செய்து விட்டது இந்தியா. இந்தியாவில் தனிநபரின் உப்பு பயன்பாடு என்பது ஆண்டுக்கு 12 கிலோ ஆகும். இதற்காக செய்யப்பட்ட விளம்பரத்தை பார்த்தாலும் இந்த நுகர்வு அதிகமாக வாய்ப்பில்லை. தற்போது டப்பா உணவு வகைகளில் அதிகம் உப்பு பயன்படுத்தப்படுவதால் உப்பு நுகர்வு அதிகரித்திருப்பதோடு, ரத்த அழுத்தமும், உடல் ஏடை கூடும் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கின்றன.
அயோடின் உப்புக்காக விளம்பரம் செய்த அரசு, ஊடகங்கள் இந்த டப்பா உணவுக்கெதிராக பிரச்சாரம் செய்வதோ தடை செய்யக் கோருவதோ கிடையாது. சிறு முதலாளி சாதா உப்பு விற்றால் குற்றம், பெரு முதலாளி அயோடின் உப்பு அதிகம் போட்டு சிப்ஸ் விற்றால் சரியானதாம்.
நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 76.7% குஜராத்திலும் (உடனே இது மோடியின் சாதனை என்று கோயிந்துகள் கிளம்பக் கூடும்), 11.16 சதவீதம் தமிழகத்திலும், 9.86 சதவீதம் ராஜஸ்தானிலும் உற்பத்தியாகிறது. ஆனால் 62% உற்பத்தி தனியார் பெருவீத உற்பத்தியாளர்களால் தான் நடக்கிறது. 28% மட்டும்தான் சிறுவீத உற்பத்தியாளர்களால் உற்பத்தியாகிறது. மொத்தமாக பார்த்தால் தனியாரிடம்தான் 98% உப்பு தயாரிப்பு இருக்கிறது. பெரும் நிறுவனங்கள் அனைத்தும் சிறு உற்பத்தியாளர்களிடம் வாங்கியே தமது பிராண்டுகளை தயாரிக்கின்றன.
ஏறக்குறைய 1.11 லட்சம் தினக்கூலிகள் இத்துறையை நம்பி வேலை செய்கின்றனர். மழை, பனி போன்ற காலங்களில் இவர்களுக்கு அவ்வளவாக வேலை கிடைப்பதில்லை. கால்கள் பாளம் பாளமாக வெடிப்பதும், பணிப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் உப்பளத் தொழிலாளர்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று. கிடைக்கும் கூலியும் பொதுவான தினக்கூலியை விட மிகவும் குறைவாகத்தான் இருக்கும். சராசரியாக தினக்கூலி ரூ.100 க்குள்தான் இருக்கின்றது. இந்த தொழிலை விட்டு விலகிப்போனவர்களும் அதிகம். அதில் சிறு உற்பத்தியாளர்களும் அடக்கம்.
வேதாரண்யம் உப்புக் சத்யாகிரகம்நாட்டின் உப்பு உற்பத்தியில் 20% மட்டும்தான் நவீனமயமாக்கப்பட்டுள்ளது, மீதி அனைத்துமே முழுக்க முழுக்க மனித உழைப்பை மட்டுமே சார்ந்துள்ளது. சரும வியாதிகளோ, அல்லது விபத்துக்களோ நேரிடும் சமயங்களில் உடனடியாக இவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில்லை. நாள் முழுதும் நன்றாக வெயில் காயும் கோடையில் தான் இவர்களுக்கு மாதம் முழுதும் வேலை கிடைக்கும் என்பதுதான் உண்மை நிலைமை.
தினமும் உப்பு நீரிலும், உப்பிலும் கடும் வெயில் நிற்பதாலும், குடும்பமே உழைத்தாலும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்  வருமானம் ஈட்டுவதே பெரும்பாடாக இருப்பதாலும், ஓய்வு எடுக்க நிழல் பகுதியே உப்பளங்களுக்கு அருகில் இல்லாமல் இருப்பதாலும் ஏறக்குறைய 55 வயதுக்குள்ளாகவே இவர்கள் முதுமையையும், வேலை செய்ய இயலாத நிலைமையையும் அடைந்து விடுகின்றனர். அரசு உதவியுடன் கட்டப்பட்டுள்ள இவர்களது வீடுகள் உப்பளத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் பலரால் இங்கு குடியேற முடியவில்லை. தமிழகம் முழுக்கவே இதுவரை 250 வீடுகள்தான் அதுவும் தலா 200 சதுர அடி பரப்பில் இவர்களுக்காக அரசால் கட்டப்பட்டுள்ளது.
அம்மா உப்பு பாக்கெட் போடுவதற்கு செய்யப்பட்டும் விளம்பரங்களிலேயே பல நூறு உப்பளத் தொழிலாளிகளுக்கு வீடு கட்டித் தரலாம்.
பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்த பிரிவினரே இதில் தொழிலாளிகளாக பணிபுரிகின்றனர். வட்டிக்கு பணம் வாங்கிதான் அன்றாட பொழுதையே இவர்களில் பெரும்பாலானோர் கழிக்க வேண்டியதாகியுள்ளது. இந்த நிலைமையை ஈடுகட்ட இக்குடும்பங்களில் இருந்து தினக்கூலி ரூ.20-40 என்ற அளவில் குழந்தை தொழிலாளிகளும் உப்பள வேலைக்கு வருகின்றனர்.
வேலைக்கு எடுக்கும் பெரிய நிறுவனங்கள் அவர்களை ஒப்பந்த கம்பெனிகள் மூலமாகவே வேலைக்கு எடுக்கின்றன. தினசரி அதிகாலை 2 மணிக்கே கணவனும், மனைவியும் உப்பளத்தில் இறங்கியாக வேண்டும். பாத்திகளில் நீர் நிரப்புதலும், வெயில் வந்த பிறகு சேகரமான உப்பினை கூட்டி வேறு இடத்துக்கு கொண்டு வந்து குமித்து வைத்து, ஓலையால் மூடி வைக்கவும் வேண்டும். 45 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
ஆண்டுக்கு 35 லட்சம் டன்கள் வரை உப்பு இங்கிருந்து ஏற்றுமதியாகின்றது. குறிப்பாக இந்தோனேசியா, வியட்நாம், கொரியா, கத்தார், ஜப்பான், பிலிப்பைன்சு, நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. சீனாவுக்குதான் முதன்மையாக ஏற்றுமதியாகிறது.
1953 முதலே உப்பு ஏற்றுமதி துவங்கி விட்டதெனினும் 2001 ல் இத்துறையும் தனியார்மயத்திற்கு நன்றாக திறந்து விடப்பட்டது. அப்போதுதான் 1.6 மில்லியன் டன் என்ற உச்சத்தை ஏற்றுமதி எட்டியது. அவந்தா, டாடா போன்றோர் இதில் கொடிகட்டிப் பறக்கின்றனர். குடிநீர், கனிம வளம் போன்ற இயற்கை வளங்களைப் போன்றுதான் உப்பு என்றாலும் இங்கும் தரகு முதலாளிகளின் அகோர இலாப பசிக்கு திறந்து விடப்பட்டது.
ஏற்றுமதியாகும் உப்புக்கு டன் ஒன்றுக்கு 35 முதல் 40 டாலர் வரைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிலோ 24 பைசா. இந்த உப்பைத்தான் அயோடினைஸ்டு செய்து கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் இருபது வரை டாடா உப்பு என்ற பெயரில் மக்களின் தலையில் முதலாளிகள் கட்டுகிறார்கள்.
இந்திய உப்பு சந்தையில் 64% இவர்கள் கையில்தான் உள்ளது, அதாவது ஏறக்குறைய 6 மில்லியன் டன்கள். இதில் 65% உற்பத்தி செய்யும் டாடாவுக்கு அடுத்தபடியாக இந்துஸ்தான் யுனிலீவரின் அன்னபூரணா, நிர்மாவின் சுத் சால்ட், ஐடிசி இன் ஆசிர்வாத் உப்பு போன்றவை முன்னணியில் உள்ளன. அம்மா உப்பு பாக்கெட் போடுவதற்கு பதில் இந்த பெரு நிறுவனங்களை இங்கே உப்பு விற்க தடை விதித்தால் அதுதான் தமிழகத்தின் உப்பள தொழில் மற்றும் மக்களின் சேமிப்பிற்கு உதவியாக இருக்கும். மாறாக டாடா தொழில் சீரும் சிறப்புமாக நடப்பதற்கே இந்த மலிவு விலை உப்புகள் சீன் போடுகின்றன.
பொதுவாக சிறு உற்பத்தியாளர்களுக்கு அடிக்கடி நடக்கும் மின்வெட்டும், கூலியின் அதிகரிப்பும் காரணமாக இலாபம் குறைந்து வருகிறது. இங்குள்ள சிறு மற்றும் நடுத்தர உப்பு உற்பத்தியாளர்கள் ஐடிசி மற்றும் யுனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்காகவே உற்பத்தி செய்கின்றனர். இவர்களது உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி குறைந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களோ டன் உப்பு ஒன்றுக்கு மிகவும் குறைவாக பணம் தருகின்றனர்.
அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த சிறு உற்பத்தியாளர்கள் நீடிக்க முடியாது என்ற நிலைமையால் அங்கு எந்த சிறு, நடுத்தர உப்பள அதிபர்களும் தமது குழந்தைகளுக்கு இத்துறையை சிபாரிசு செய்வது அருகி வருகிறது. உற்பத்தியாகும் உப்பளங்களின் பரப்பும் வெகுவாக குறைந்து வருகிறது.
உப்பு ஏற்றுமதி ஆண்டுக்கு 615 கோடி அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு ஈட்டித் தருகிறது. 2020ல் ஆண்டுக்கு 40 மில்லியன் டன்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்றும், அதில் 10 மில்லியன் டன் ஏற்றுமதிக்காக என்றும் உப்புக்கான இணை ஆணையர் ஆர்.எஸ். காஷ்யப் கூறுகிறார். இதிலிருந்தே உப்பு துறையில் டாடவும், லீவரும் ஏன் இறங்கியிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு, குஜராத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உப்பு உற்பத்தியில் இருக்கிறது. பிரிட்டிஷார் காலத்தில் உப்புக்கு வரி கொடுக்க மறுத்து காந்தி உப்பு சத்தியாகிரகத்தை குஜராத்தின் தண்டியிலிருந்து துவங்கிய போது தமிழகத்தில் ராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் அந்த சட்டமறுப்பு இயக்கத்தை வேதாரண்யத்தில் துவங்கினர். அந்த வேதாரண்யத்தில் உள்ள பத்தாயிரம் ஏக்கர் உப்பளத்தில் 3500 ஏக்கர் சன்மார் குழுமத்திற்கும், 3500 ஏக்கர் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கும் சொந்தமாக இருக்கிறது. மீதமுள்ளதில் 3000 ஏக்கரை அரசு சிறு உற்பத்தியாளர்களுக்கு குத்தகைக்கு தந்துள்ளது. ஆக உப்பளம் தரகு முதலாளிகளுக்கு. அவர்கள் தயாரித்த உப்பை சாப்பிட்டு காசு கொடுக்க வேண்டிய கடமை மக்களுக்கு.
உப்பளம்
வருடத்தின் சில மாதங்கள் மட்டும் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கும். (படம் தி இந்து)
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வரை உப்பளம் உள்ளது. இங்குதான் தமிழகத்தின் பெரும்பகுதி உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுக்கு இங்கு 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தியாகிறது.12 ஆயிரம் ஏக்கர் உப்பளத்தை மாநில, மத்திய அரசுகள் சிறு, நடுத்தர உப்பள உரிமையாளர்களுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக குத்தகைக்கு எடுப்பவர்கள் உள் குத்தகைக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் விடுவதும் மாநிலம் முழுக்க நடைபெறுகிறது. பல இடங்களில் சட்டபூர்வ அங்கீகாரம் பெறாத உப்பளங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு செயல்படும் தனியார் கம்பெனிகளில் டேக் மற்றும் தாரங்கதாரா போன்ற ரசாயன கம்பெனிகள் முன்னணியில் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் 1974 ல் தமிழ்நாடு உப்பு கழகம் அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இது உப்பினை பிரித்தெடுத்தல், வணிகம் செய்தல் என ஒரு இலாபமீட்டும் அரசுத் துறை நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியா முழுக்க பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அயோடின் ஏற்றம் செய்யப்பட்ட உப்பினையும் கூட ரூ.2.50 க்குதான் இந்நிறுவனம் விநியோகித்து வருகிறது. இது போக ரூ.4.50க்கு சுத்திகரிக்கப்பட தூள் உப்பையும் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறது. ஏறக்குறைய 42 மில்லியன் மக்கள் இதனால் பலனடைந்து வருகின்றனர். இப்படி மலிவு விலைக்கு கொடுத்து விட்டு இப்போது அதிக விலை விற்க வேண்டிய அவசியம் என்ன?
எதிர்காலத்தில் ரேசன் கடை மலிவு உப்பை ஊத்தி மூடிவிட்டால் மக்கள் அம்மா உப்பைத்தான் சார்ந்து வாழ வேண்டும். அம்மா உப்பு விற்கப்படும் அரசு கடைகள் அதிகமில்லை என்பதால் அனைவரும் டாடா, லீவரின் உப்பைத்தான் அருகாமை கடைகளில் வாங்க முடியும். அப்போது தமிழ்நாடு உப்பு கழக உப்பையே மலிவு விலைக்கு வாங்கி அதிகம் விற்க இந்த பெருநிறுவனங்கள் முன்வரும்.
தென்னிந்தியா முழுதும் மதிய உணவு திட்டத்தில் தமிழ்நாடு அரசு உப்புக் கழக உப்புதான் பயன்படுகிறது. இந்நிறுவனம் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் பெரிய தொழிற்சாலை ஒன்றை நிறுவி உப்பு பிரித்தெடுத்து தரம் பிரிக்கும் வேலையை செய்து வருகிறது. இங்கு ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் வேலை செய்கின்றனர்.
தமிழ்நாடு உப்பு கழகம் மனித உபயோகத்திற்கான ஐந்து வகை உப்புக்களை உற்பத்தி செய்து வருகிறது.
ரேசன் கடைகள் மூடப்படவேண்டும், உணவு மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற உலக வர்த்தக கழகத்தின் ஆணை முழுவதும் அமல்படுத்தப்படும்போது இந்த உப்பு கழகமும் யாரோ ஒரு தரகு முதலாளி கைக்குச் செல்லும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. மாடர்ன் பிரட் விசயத்தில் அதுதானே நடந்தது.
ரேசன் கடையில் மலிவு விலையில் விற்கப்படும் உப்பினை விலையேற்றுவது என்பது மக்களை தனியார்மயத்துக்கு பழக்கப்படுத்தும் வேலையே ஆகும். அதையே மிகுந்த விளம்பரத்துடன் அம்மா அரசு மக்களுக்காக என்று பிரச்சாரம் செய்கிறது.
அம்மா குடி நீரால் இங்கே கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களின் இலாபம் குறைவதற்கு பதில் அதிகரித்திருக்கிறது. அது போல அம்மா உப்பினால் டாடா, லீவர், நிர்மா நிறுவனங்களின் உப்பு இலாபம் அதிகரிக்குமே இன்றி குறையப் போவதில்லை.
இத்தகைய மலிவு விலை விற்பனை என்ற உத்திக்கு பின்னே தனியார்மயத்தை நியாயப்படுத்தும் சதி மறைந்திருக்கிறது என்பதை மட்டும் இங்கே வலியுறுத்துகிறோம்.
-    கௌதமன் vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக