ஞாயிறு, 15 ஜூன், 2014

தமிழகத்தில் குண்டாசில் கைதான 212 பேர் விடுதலை ! ஒரே நாளில் ஐகோர்ட் அதிரடி !

சென்னை:  குண்டர் தடுப்பு சட்டத்தில்  212 பேரை சிறையில்  அடைத்ததை ரத்து செய்து உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அதிரடி   உத்தரவிட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள  நூற்றுக்கணக்கானோர் தங்களை விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட  வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த  வழக்குகளை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  சதீஷ்குமார் அக்னிஹோத்திரி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில்  இந்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு தனி டிவிஷன்  பெஞ்ச் உருவாக்கப்பட்டது. இந்த பெஞ்சில் நீதிபதிகள் தனபாலன்,  சொக்கலிங்கம் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். இதற்காக நேற்று  (சனிக்கிழமை) உயர் நீதிமன்றம் இயங்கியது. மொத்தம் 543 வழக்குகள்  விசாரணைக்காக பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இதில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகள், மாநில  ஆலோசனைக் கழகத்தால், உத்தரவிடப்பட்டு அரசாணை பிறப்பிக்காமல்  இருந்த வழக்குகள் என மொத்தம் 220 வழக்குகள் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதிகள் காலை 10.30 மணிக்கு  விசாரணையைத் தொடங்கினர். மதியம் 2 மணிக்குள் 220  வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. இதில் 212 வழக்குகளில் தீர்ப்பு  கூறப்பட்டது. அதன்படி இந்த 212 வழக்குகளில் உள்ள குண்டர் தடுப்புச்  சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதில் 55 பேர், மாநில ஆலோசனைக் கழகத்தில் குண்டர் தடுப்பு  சட்டம் ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்படாத நிலையில்  சிறையிலிருந்து வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இருந்தவர்கள்.  மீதமுள்ள 157 வழக்குகள் நீண்டநாள் நிலுவையில் உள்ள வழக்குகள்.  எஞ்சிய வழக்குகள் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும்,  குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  வராததாலும் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

திருவிழாகோலம்: ஒரே நாளில் 543 வழக்குகள் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டதால் வக்கீல்களும், சம்மந்தப்பட்ட கைதியின்  உறவினர்களும் நீதிமன்றத்தில் குவிந்தனர். மக்கள் கூட்டம் திருவிழா  போல் இருந்தது. வழக்கு விசாரணையை விரைவாக முடிக்க உதவிய  அரசு வக்கீல் பி.கோவிந்தராஜனை நீதிபதிகள் பாராட்டினர் dinarakarn.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக