திங்கள், 30 ஜூன், 2014

சென்னையிலேயே மத்திய அரசு பதிவேடு, அரசு ஆணைகள் இந்திமயமானது ! இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத, தேர்வு எழுதாத 11 பேருக்கு 'மெமோ'

மத்திய அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவேடு, அரசு ஆணைகள் இந்தி மயமானது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது. இந்தி பயிற்சிக்கு செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது. வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக்கொள்ளலாம் என்று மே 27-ம் தேதி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்பட பல மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன.இந்தியா ஹிந்தி இந்து எல்லாம் எங்கே போகிறது ? இல்லாத ஊருக்கு பாஜக போகிறது.    
இந்நிலையில், தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் ஊழியர்களுக்கு இந்தி மொழி பயிற்சி மற்றும் இந்தி தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள பல் வேறு மத்திய அரசு அலுவலகங் களில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 11 பேருக்கு ‘மெமோ’கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலு வலர்கள் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே, பணிக்கு அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலக வருகைப் பதிவேட்டில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே கையொப்பமிடும் முறை இருந்து வருகிறது. இப்போது புதிதாக இந்தியில் கையொப்பமிட தனி காலம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலக கடிதங்கள், பதவி உயர்வு ஆணைகள், பணி மாற்று ஆணைகள் உள்பட அனைத்து நிர்வாக ஆவணங்களும் ஆங்கிலத்துடன் தற்போது இந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியனி டம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 6 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பல்வேறு அலுவல கங்களில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியை கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கெனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மையத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், இந்தி பயிற்சி வகுப்பு மற்றும் இந்தி தேர்வு எழுதாத 11 மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2 வாரங்களில் ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்கள் எங்களுக்கு வந்துள்ளன. தென்மாநிலங்களில் இந்தி மொழி தேவையில்லாதது. எங்களுக்கான ஆவணங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகின்றன. அதை சரிபார்த்து ஆங்கிலத்தில் அரசுக்கு விளக்கம் அளிக்கிறோம்.
எனவே, ஊழியர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும், இந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கற்று கொள்ள வேண்டும் என்ற உத்தரவை நீக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் படிக்கலாமே தவிர, இந்தி மொழி கட்டாயம் என்பது கூடாது. இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்ளுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழு விடம் முன்வைக்க உள்ளோம்.
இவ்வாறு துரைபாண்டியன் கூறினார்.
வழக்கமான நடவடிக்கைதான்
இதுதொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் இந்தி மொழி தெரியாத பணியாளர்க ளுக்கு பயிற்சி கொடுத்து தேர்வு நடத்துவது வழக்கமான ஒன்று தான். தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மெமோவும் வழங்கப்பட்டு வருகிறது. இது வழக்கமான நடவடிக்கைதான். இப்போது, இந்தி மொழி பற்றி பிரச்சினை எழுந்துள்ளதால், இதை சிலர் பெரிதுபடுத்துகின்றனர்’’ என்றனர். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக