ஞாயிறு, 25 மே, 2014

T.M.சௌந்தரராஜனை மறந்த நன்றி கெட்ட தமிழ் திரை உலகம் !


தமிழ்த்திரை உலகப் பின்னணிப் பாடகர்களில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர், டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் அவர்கள் குரலின் சாயலில் அற்புதமாக பாடி இவர் சாதனை படைத்தார். 'டி.எம்.எஸ்' என்று அன்புடன் அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜனின் சொந்த ஊர் மதுரை. தந்தை மீனாட்சி அய்யங்கார். தாயார் வெங்கடம்மாள். சவுந்தர்ராஜனுக்கு சிறு வயது முதலே பாடுவதிலும், நடிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது. சினிமாவில் எப்படியாவது நடித்து பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாய்ப்பு கேட்டு, பல படக்கம்பெனிகளுக்குச் சென்றார். அவருடைய விடா முயற்சியால் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.


1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

1951-ம் ஆண்டு ராயல் டாக்கீஸ் டிஸ்டிரிபியூட்டர்ஸ் ‘சுதர்சன்' என்ற படத்தை எடுத்தனர். பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா நடித்த இப்படத்தில் பி.பி.ரங்காச்சாரி சாமியாராக நடித்தார். அவருக்கு சீடராக டி.எம்.சவுந்தரராஜன் நடித்தார். தொடர்ந்து 'கிருஷ்ணவிஜயம்', 'தேவகி' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் தோன்றியதோடு, சில பாடல்களையும் பாடினார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரைப் போன்ற இனிய குரல் சவுந்தரராஜனுக்கு இருந்தது. 'உள்ளம் உருகுதய்யா, முருகா!' என்ற பாடலை டி.எம்.எஸ். இசை அமைத்துப்பாட, அது இசைத்தட்டாக வெளிவந்தது. பட்டி, தொட்டி எங்கும் ஒலித்த இப்பாடலைக் கேட்டவர்கள், அது பாகவதர் பாடல் என்றே எண்ணினார்கள்.  

ஒரு முறை பழனிக்கு பாகவதர் பாட சென்றபோது, அங்கு டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாட்டு ஒலிபெருக்கியில் ஒலித்தது. இந்த பாடலைக் கேட்ட பாகவதர், சவுந்தரராஜனின் குரலில் மனம் மகிழ்ந்து, அவரைக் காண விரும்பினார்.  

வேறொரு நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தனர். அப்போது, 'உங்கள் குரல் அமிர்தமாக இருக்கிறது. ரொம்ப சந்தோஷம். எதிர்காலத்தில் பெரும் புகழ் அடைவீர்கள்' என்று சவுந்தரராஜனை பாகவதர் வாழ்த்தினார்.  

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி' படத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் 'அன்னமிட்ட வீட்டிலே' என்ற பாடலை பாடினார்.

தொடர்ந்து ,1954-ம் ஆண்டு 'மலைக்கள்ளன்' படத்தில் எம்.ஜி.ஆருக்காக சவுந்தரராஜன் பாடினார்.   பானுமதியை குதிரையில் வைத்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும்போது பாடப்படும் 'எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடலை மிகவும் அற்புதமாக சவுந்தரராஜன் பாடினார்.  

எம்.ஜி.ஆருக்கு டி.எம்.சவுந்தரராஜனின் குரல் கனகச்சிதமாக பொருந்தி இருந்தது. இதே ஆண்டில், 'தூக்குத்தூக்கி' படத்தில் சிவாஜிகணேசனுக்காக பாடினார். டி.எம்.எஸ். குரல், சிவாஜிகணேசனுக்கு ரொம்பவும் பொருத்தமாக அமைந்தது. அனைத்து பாடல்களும் `ஹிட்' ஆயின.  

1954-ம் ஆண்டு, டி.எம்.எஸ். வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. திரை உலகின் இரு இமயங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் டி.எம்.எஸ். குரலே பொருத்தமானது என்று திரை உலகத்தினரும், ரசிகர்களும் ஏகமனதாக கருதினர்.  

இதன் காரணமாக, எம்.ஜி.ஆர். படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் அவர் தொடர்ந்து பாடினார். இதுபற்றி சவுந்தரராஜன் கூறும்போது, 'சிவாஜிக்கு பாடவேண்டும் என்றால் அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்து பாடுவேன். எம்.ஜி.ஆருக்கு பாடும்போது அடித்தொண்டையிலும், மூக்கிலும் சாரீரத்தை வரவழைத்து பாடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.  

ஜெமினிகணேசன், ஜெய்சங்கர், அசோகன், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அந்தக் காலகட்டத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் டி.எம்.சவுந்தரராஜன் குரல் கொடுத்துள்ளார்.  

குறிப்பாக 'தூங்காதே தம்பி தூங்காதே', 'உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்', 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி', 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்', 'யாருக்காக இது யாருக்காக', 'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' போன்ற ஏராளமான பாடல்கள் காலத்தை வென்று நிற்கும் பாடல்களாகும்.  

1962-ம் ஆண்டு இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் சொந்தமாகத் தயாரித்த 'பட்டினத்தார்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். இதில் எம்.ஆர்.ராதா, லீலாவதி ஆகியோர் நடித்தனர். படத்தை சோமு இயக்கினார். இசை: ஜி.ராமநாதன்.  

சவுந்தரராஜன் பட்டினத்தாராக கச்சிதமாக நடித்து இருந்தார். அதில் அவர் பாடிய பாடல்களும் மிகவும் அருமையாக இருந்தன. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 'பட்டினத்தார்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றி வாகை சூடியது.  

அதனைத் தொடர்ந்து 1964-ம் ஆண்டு 'அருணகிரிநாதர்' படத்தில் சவுந்தரராஜன் கதாநாயகனாக நடித்தார். 'பட்டினத்தார்' போலவே இதுவும் வெற்றிப்படம். இப்படத்தில் இடம் பெறும் 'முத்தைத் திருநகையத்திச் சரவண...' என்ற கடினமான பாடலை, இனிமையாகப் பாடியிருந்தார்.  

அதேபோல 'கவிராய காளமேகம்' என்ற படத்திலும், சொந்த தயாரிப்பில் 'கல்லும் கனியாகும்' படத்திலும் டி.எம்.எஸ். நடித்தார். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

தமிழ்ப்பட உலகில் பெரும் திருப்புமுனை உண்டாக்கிய 'ஒருதலை ராகம்' படத்தில் இவர் பாடிய பாடல்கள் அற்புதமானவை. இதுதவிர, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களையும், நூற்றுக் கணக்கான மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ள டி.எம்.எஸ்., தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான மேடைக் கசேரிகளையும் நிகழ்த்தியுள்ளார்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜனின் குரலில் பதிவான கடைசி பாடல், 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது. மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது. தமிழ் திரைப்பட உலகின் தன்னிகரற்ற பின்னணி பாடகராக திகழ்ந்த டி.எம்.சவுந்தர்ராஜன் உடல் நலக்குறைவு காரணமாக 25-5-2013 அன்று சென்னையில் மரணம் அடைந்தார்.

காலத்தால் அழிக்க முடியாத குரல் வளத்தை தனது பாடல்களின் மூலம் நமக்காக விட்டு சென்றுள்ள டி.எம்.சவுந்தர்ராஜனின் உடலுக்கு திரை உலகத்தினர் மட்டுமின்றி, ஏராளமான அவரது ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 50 ஆண்டுகள் தமிழ்த் திரைப்படத்துறையில் கோலோச்சி, அவர் பாடியுள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் பெரும்பாலானவை காற்றுள்ளவரை மக்களின் காதுகளில் தேனீயின் இனிய ரீங்காரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது நிச்சயம். //cinema.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக