புதன், 14 மே, 2014

விற்பனைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளைகள் ! சுப்ரீம் கோர்ட்டு தடை எதிரொலி !

வாடிப்பட்டி வாரச்சந்தையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு
காளைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன.
வாரச்சந்தை
வாடிப்பட்டி செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை மாடுகள் விற்பனைக்கு பெயர் பெற்றது. இங்கு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, திருச்சி, உள்பட பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான மாடுகள் வந்து கூடும்.
இந்த வாரச் சந்தைக்கு வழக்கமாக விற்பனைக்கு வரும் மாடுகளை விட அதிகமான மாடுகள் வந்தன. ஜல்லிக்கட்டுக்கு தடை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை பராமரிக்க முடியாதவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு காளைகளை வாங்குவது என்பது மிகவும் சிரமமானதாகும்.
சராசரியாக ஒரு காளை குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை மாட்டின் தன்மைக்கு ஏற்றபடி விலை போகும். அதனால் அந்த காளைகளை வாங்குவதில் மாடு வளர்ப்பவர்களிடம் போட்டா போட்டி இருந்து வந்தது.
அடிமாட்டு விலைக்கு விற்பனை
அந்த காளைகளுக்கு தினந்தோறும் ஊட்டம் மிகுந்த தீவனங்கள் கொடுத்து கண்ணும் கருத்துமாக அதற்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்து வளர்த்து வந்தனர். குறிப்பாக ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பதை ஒரு கலையாக கொண்டு ஏராளமானவர்கள் அதற்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்தும் வந்தனர்.
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கு அந்த மாடுகளை வேனில் ஏற்றி போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அந்த மாடுகளையும் அவை பெறும் பரிசுகளையும் போற்றி பாதுகாத்து வந்தனர். இதனால் காளைகளை வளர்ப்பதை பெருமையாக கருதினர். ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததால் வேறு வழியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அடி மாட்டு விலைக்கு விற்பனை செய்தனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக