ஞாயிறு, 4 மே, 2014

நீ எங்கே என் அன்பே ! இரண்டாவது பாதியில் சரவெடியாய் நகர்கிறது திரைக்கதை

இந்தியில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட கஹானி என்ற
திரைப்படத்தின் ரீமேக் தான் ’நீ எங்கே என் அன்பே’. இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். தைரியமான அதே நேரத்தில் நெகிழ்ச்சியான கதாபாத்திரம் என்பதால் நயன் கச்சிதமாய் பொருந்துகிறார். ஹைதிராபாத்தில் நடக்கிற கதை என்பதால் அதற்கேற்றார்போல படத்தின் மேக்கிங் அமைந்துள்ளது. இந்தியில் சிறந்த திரில்லர் படமான கஹானியை ரீமேக் செய்வது கத்தி மேல் நடக்கிற கதை தான்! படத்தில் பல மாற்றங்களை செய்தாலும், படத்தின் மையக் கதையை மட்டும் அப்படியே வைத்துள்ளார். கர்பிணியாக வித்யாபாலன் இருப்பார், நயன்தாரா கர்பிணி அல்ல. முதல் பாதியில் தெலுங்கு வசனங்கள் ஏகத்துக்கும் இருக்கிறது, தமிழுக்காக குறைத்திருக்கலாம். ஹைதராபாத்தின் முக்கிய இடமான பீப்பில்ஸ் பிளாசாவின் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடங்குகிறது கதை.

இரண்டு வருடங்கள் கழித்து லண்டனில் இருந்து ஹைதராபாத்துக்கு காணாமல் போன தன் கணவரைத் தேடி வருகிறார் நயன்தாரா. அந்தப் பகுதியின் போலிஸ் அதிகாரியான வைபவின் உதவி நயன்தாராவுக்கு கிடைக்கிறது. தன் கணவர் தங்கியிருந்த லாட்ஜ், வேலை செய்த இடம் என தேடிப்போகும் நயன்தாராவுக்கு நம்பிக்கை தந்து உதவியும் செய்கிறார் வைபவ். ஆனால், அப்படி ஒரு நபரே இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது நயன்தாராவுக்கு. ஏன்? எதற்கு? இப்படி எல்லாரும் பொய் சொல்கிறார்கள் என நயன் குழம்பிப்போக, உண்மை என்ன என்பதைக் கண்டறிய பல முயற்சிகளை செய்கிறார்கள். தன் கணவர் கடத்தப்பட்டார் என்ற விஷயத்தை ஒரு சிறுவன் மூலம் தெரிந்து கொள்கிறார் நயந்தாரா. நயன்தாரா தேடி வரும் அவர் கணவரின் முகமும் போலிஸ் தேடி வரும் தீவிரவாதியும், ஹைதரபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியுமான மிலன் தாம்ஜியின் முகமும் ஒரே மாதிரி இருக்க, இந்த செய்தி உள்துறை அமைச்சரை அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த விசாரணையில் புதிதாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பசுபதி நியமிக்கப்படுகிறார். தன் கணவர் தீவிரவாதி இல்லை என்று கணவரை மீட்கும் போராட்டத்தில் நயன்தாரா தவிக்க... இன்னொரு புறம், போலிஸ் நயன்தாராவின் நடவடிக்கைகளை ரகசியமாக கவனித்து வருகிறது. இந்த விசாரணையில் முக்கிய எவிடென்சான ஒரு ஹார்ட் டிஸ்க் நயன் கைக்கு கிடைக்கிறது. அதை கொடுத்துவிட்டால் தான் கணவர் உயிருடன் கிடைப்பார் என ஒரு கும்பல் மிரட்ட, உள்துறை அமைச்சர் கொடுக்கும் டார்ச்சரால் போலிசும் நயன்தாராவிடம் அந்த ஹார்ட் டிஸ்கை கேட்டு கொடுமை செய்கிறது. கடைசியில் கணவரை கைப்பிடிக்கும் நயன்தாரா, தானே அவரைக் கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுகிறார். ஆம், தன்னையும் திருமணம் செய்து ஏமாற்றி, பல ஆயிரம் மக்கள் சாவுக்கும் காரணமான ஒரு தீவிரவாதியைக் கொல்லத்தான் நயன் இங்கு வந்தார் என்பது நமக்கு புரியவருகிறது. சட்டத்தின் வழியாகவும் அரசியல்வாதிகளின் ஆதரவோடும் தபித்துவிடும் தீவிரவாதிகளை சதிகள் செய்து தீர்த்துக்கட்டுவதே நியாயம் என்று பேசுகிறது படம். பசுபதியும் நயன்தாராவும் முதன் முதல் போலிஸ் ஸ்டேஷனில் சந்திக்கும் காட்சி அசத்தலானது. மாறி மாறி இருவரும் முறைத்துக்கொள்வது சபாஷ் போட வைப்பதோடு நடிப்பில் இருவரும் சலைத்தவர்கள் இல்லை என்பதையே காட்டுகிறது. பால் வடியும் முகத்துடன் இருக்கும் வைபவ் இன்ஸ்பெக்டரா? நம்ப முடியவில்லை. நடிப்பிலும் கூட விளையாட்டுத்தனம் தான் தெரிந்தது. வைபவ் நயன்தாராவுக்கு சப்போர்ட் பண்ணும் நேரத்தில், அவரை பசுபதி அதட்டிக்கொண்டே இருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டை மேளங்கள் முழங்க காளியை மாறி மாறி பல ஆங்கில்களில் காட்டி இருப்பது ஆந்திராவில் ஒர்க்-அவுட் ஆகலாம். நமக்கு தலைவலி தான் அதிகமாகிறது. ஒரு சீரியஸான விஷயத்தை அதே சீரியஸ்னஸோடு படமாக்கி இருக்கிறார் சேகர் கமுலா. முதல் பாதி காட்சிகள் சலிப்பை உண்டாக்கினாலும், இரண்டாவது பாதியில் சரவெடியாய் சரசரவென நகர்கிறது திரைக்கதை. ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பொருத்தமாக இருந்ததோடு படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது என்றே சொல்லலாம். நீ எங்கே என் அன்பே - அதிரவைக்கும் த்ரில்லர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக