வெள்ளி, 9 மே, 2014

ப.சிதம்பரம் பிரதமர் பதவிக்கு ? தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சூசகத் தகவல் !

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியைக் கைப்பற்ற காய் நகர்த்துவதாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ப.சிதம்பரம், ‘இந்தத் தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது’ என்று தேர்தலுக்கு முன்பே திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பினாலும், ‘அதுதானே யதார்த்தம்’ என்று தனது கருத்தில் திடமாக இருந்தார் சிதம்பரம்.
இந்தச் சூழலில் அண்மையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த சிதம்பரம், ’’தேர்தல் முடிவுகள் வந்த பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழல் நிச்சயம் உருவாகும்’’ என்று சொன்னார். ’’தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்ட நீங்கள், மே 16-க்குப் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று நிருபர் கேட்ட கேள்விக்கு, ’’அதை எப்படி இப்போதே சொல்லமுடியும்? தேர்தல் முடிவு வந்த பிறகு எனது பேட்டிக்காக நீங்களே கூட அப்பாயின்மெண்ட் கேட்டுக் காத்திருக்கலாம்’’ என்று சொன்னார் சிதம்பரம்.
தேர்தல் முடிவுகள் தன்னைப் பிரதமர் நாற்காலியில்கூட உட்கார வைக்கலாம் என்பதைத்தான் சிதம்பரம் இப்படிக் குறிப்பிட்டதாக அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 1973-ல் இந்திரா காந்தி காரைக்குடிக்கு வந்தபோது, காரைக்குடியைச் சேர்ந்த ராம.சிதம்பரம் என்பவர்தான் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருந்தார். அவர்தான் ப.சிதம்பரத்தை காங்கிரஸுக்கு அழைத்து வந்தவர். காரைக்குடி கூட்டத்தில் தனது பேச்சை மொழிபெயர்ப்பதற்காக ராம.சிதம்பரத்தை ’மிஸ்டர் சிதம்பரம்…’ என்று இந்திரா காந்தி அழைக்க, தன் னைத்தான் அழைப்பதாக நினைத்து முந்திக்கொண்டார் ப.சிதம்பரம்.
அதன்பிறகுதான் ப.சிதம்பரத்தின் அறிவையும் திறமையையும் உலகம் அறிந்தது. இதை நினைவுபடுத்தும் சிவகங்கை காங்கிரஸ்காரர்கள், ‘’ சிதம்பரம் கர்வம் உள்ளவராக இருந்தாலும் காரியக்கார அறிவாளி. கிட்டத்தட்ட 24 வருடங்கள் 6 பிரதமர்களுக்குக் கீழே பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஏ.கே.அந்தோணி, திக்விஜய் சிங், சிதம்பரம் ஆகியோர் அடுத்த பிரதமர் கனவில் இருக்கிறார்கள். திக்விஜய் சிங் டி.வி நிருபரைத் திருமணம் செய்த சர்ச்சையில் சிக்கிக் கொண்டுவிட்டார். மாநிலக் கட்சிகளை ஒன்று சேர்க்கும் அளவுக்கு அந்தோணிக்கு திறமை இருக்காது. அதுவுமில்லாமல், அவர் பிரதமராக வருவதைக் கார்ப்பரேட் முதலாளிகள் விரும்ப மாட்டார்கள்.
எனவே, யாரை எங்கே தட்டினால் என்ன நடக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சிதம்பரம்தான் பிரதமர் பதவிக்குத் தகுதியான நபராக இருப்பார். ராகுலும் சோனியாவும் சிதம்பரத்தின் மீது தற்சமயம் அதிருப்தியில் இருந்தாலும் இன்றைய சூழலில் சிதம்பரத்தை நம்புவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழியில்லை’’ என்கிறார்கள்.
தோற்றுப் போனால் பிரதமராகும் வாய்ப்பை இழக்க நேரிடலாம் என்பதாலேயே தேர்தலில் போட்டி யிடாமல் ஒதுங்கிக் கொண்ட சிதம் பரம், மகாராஷ்டிரம் அல்லது கர்நாடக மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆவதற்கு முயற்சிப்பதாகவும் சொல்கிறார்கள். சிவகங்கை பக்கம் உள்ள அவரது ஆதரவாளர்களோ, ‘‘எங்கள் தலைவருக்கு ராசியான எண் 16. அந்தத் தேதியில் தேர்தல் முடிவுகள் வெளிவருவதால் நினைத்தது நடக்கும் என்று நம்புகிறோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!’’ என்கிறார்கள்.  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக