சனி, 17 மே, 2014

விருதுநகர் வாக்காளர்களுக்கு தெரிந்திருக்கிறது ! வைகோவை அவர்கள் நம்பவில்லை !


வைகோவின் (பார்டர் லைனில்கூட இல்லாத, படு) தோல்வி,
ம.தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கு சாதகமாக மோடி அலை அடிக்கிறது  என்பது ஓட்டுப் போடுவதற்கு முன்னரே அனைவருக்கும் தெரிந்திருந்த நிலையில்..,
ஒருவேளை வைகோ ஜெயித்தால் மத்திய அமைச்சராவார் என்பதும் தெரிந்திருந்த நிலையில்…,
மத்திய அரசில் அங்கம் வகித்தால், இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வைகோ அழுத்தம் கொடுப்பார் என்பதும் தெரிந்திருந்த நிலையில்…,
“நீங்க எதுக்கு சார் டில்லிக்கெல்லாம் போயி சிரமப்படணும்..  பேசாம ஊரிலேயே இருந்துடுங்க” என்று சொல்லியிருக்கிறார்கள், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள்.
வைகோவுக்கு விழுந்த அடி, ‘அம்மா-1000’ திட்டத்தால் மட்டுமே விழுந்தது என்று ம.தி.மு.க.-வில் நம்பினால், அவர்களால் இனி வரும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. தமது தரப்பில் என்ன தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்டால்தான், பூச்சியத்தில் இருந்து ராச்சியம் போக எத்தனிக்கலாம்.

வைகோவின் அரசியல், தமிழகத்தில் சமூக முன்னேற்ற திட்டங்கள் பலவற்றுக்கு குரல் கொடுப்பதாக இருந்தாலும், அவற்றை எல்லாம் ஓவர் டேக் செய்துகொண்டு வெளியே தெரிவது, ஈழம், மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு. இதனால், ம.தி.மு.க. மற்றும் வைகோ என்றாலே, ஈழத்துக்காக குரல் கொடுக்கும் ஆட்கள் என்றுதான் மிஸ்டர் பொதுஜனத்துக்கு தெரியும்.
வைகோ சொல்வதுபோல, “ஈழம் தொடர்பாக, தமிழகத்தில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது” என்பதை நம்ப வேண்டுமென்றால், விருதுநகர், தமிழகத்தில் இல்லை என்பதையும் நம்ப வேண்டியிருக்கும்.
தமிழினம் தொடர்பான இப்படியான உணர்ச்சி மிக்க விஷயம் ஒன்றில் வைகோ சொல்வதுதான் நிஜம் என்ற நம்பிக்கை இருந்தால், அதையும் தாண்டி, அம்மா கொடுத்த ரூ.300-க்கும், ரூ.400-க்கும் தமிழன் ஓட்டு போட்டான் என்று சொன்னால், அதைவிட கேவலமான பொய் வேறு ஏதும் கிடையாது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஓட்டு போட தி.முக. கொடுக்காத பணமா? அதையும் வாங்கிக்கொண்டு, அ.தி.மு.க.வுக்கு தமிழன் வாக்களிக்கவில்லையா?
பைசாவுக்கு சோரம் போகும் அளவில் இல்லை நம்மவர்கள். வைகோ மீது நம்பிக்கை இருந்திருந்தால், ‘அம்மா-1000’ திட்டமென்ன, ‘அம்மா-10,000’ திட்டம் செயல்படுத்தப் பட்டிருந்தாலும்,  வைகோவுக்கு வாக்குகள் குவிந்திருக்கும்.
ஆனால், சராசரி தமிழன் வைகோவை நம்பவில்லை என்பதே, நிஜம்.
வைகோ சொல்லும் ஈழம், மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்கள், மீடியாக்களிலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் அடிபடும் அளவுக்கு, மக்கள் மனத்தில் பதியவில்லை என்பதுதான், வைகோவின் தொடர் தோல்விகளுக்கு காரணம்.
ஏன் பதியவில்லை?
அந்த கருத்துகளில் நேர்மை இல்லை, ஆனால்  ப்ளஃபிங் அதிகம் என்பது, சராசரி தமிழனுக்கு சுலபமாக புரிகிறது.
ஒரு மனிதன் இறந்தால், அவன் விரோதியாக இருந்தாலும் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துபவன் மனிதன்.
போர்க்களத்தில் ஒருவன் இறந்தால், அவன் எதிரியாக இருந்தாலும் ஒரு நிமிடம் தனது தொப்பியை கழட்டி மரியாதை கொடுப்பவன், நிஜ போர் வீரன்.
இயக்கத்தின் கடைநிலை போராளி இறந்தாலும், அந்த மரணத்தை, வீர மரணம் என போற்றி அஞ்சலி செலுத்தபவன், நிஜ போராளி.
இப்படியான நிலையில், யுத்தத்தில் கொல்லப்பட்ட பிரபாகரனை இன்னமும் உயிருடன் வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, மக்கள் மத்தியில் எந்தளவுக்கு மரியாதை இருக்கும்?
மரியாதை கிடையாது என்று வைகோவுக்கு சொல்லியிருக்கிறார்கள் விருதுநகர் வாக்காளர்கள்.
பிரபாகரன் மாவீரன் என்று படம் வரைந்து பாகங்களை குறிப்பவர்கள், அந்த மாவீரன் தன்னை நம்பிவந்த 30 ஆயிரம் போராளிகளை கைவிட்டு, தன்னை நம்பிவந்த 3 லட்சம் மக்களை கைவிட்டு, தனது மகனை ராணுவத்திடம் சரணடைய விட்டு, பெற்றோரை அகதிகளாக ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு, தப்பியோடி, இன்னமும் வாயே திறக்காமல் பதுங்கியிருக்கிறார் என்று சொன்னால், ‘மாவீரன்’ இமேஜே அடிபட்டு போகிறதே!
இது, சராசரி விருதுநகர் வாக்காளனுக்கு புரிந்ததன் விளைவே, வைகோவின் தோல்வி.
வைகோவுக்கு இலங்கையில் இப்போது என்ன நடக்கிறது என்பது பற்றி எந்தளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், அவர்களது கண்ணிவெடி, மற்றும் பிஸ்டல் தாக்குதல்களுக்கு பயந்து எந்தவொரு ஆளும்கட்சி சிங்கள அரசியல்வாதியும், கடும் ராணுவ பாதுகாப்பு இல்லாமல் வெளியே நடமாடியதில்லை.
இன்று யாழ்ப்பாணம், நல்லூர் கோவில் வெளி வீதியில், சட்டை போடாமல் நெஞ்சை திறந்துவிட்டு ஹாயாக நடந்து செல்கிறார், ஜனாதிபதி ராஜபக்ஷே.
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என இலங்கை அரசு நம்பினால், இது நடக்குமா? குறைந்தபட்சம் பிரபாகரனின் ஆவியாவது யாழ்ப்பாணத்தில் உலாவுகிறது என்று தெரிந்திருந்தால், ராஜபக்ஷே பாதகாப்பு இல்லாமல் நடமாடுவாரா?
விடுதலைப் புலிகள் இயக்கத்தையே அழித்தவர்களுக்கு, இப்போது அந்த இயக்கத்தினரில் யார், எங்கே உள்ளார்கள் என்பது 100-க்கு 110 சதவீதம் தெரியும். அதை தெரியாத அளவில் முட்டாள்களாக இருந்தால், அந்த இயக்கத்தையே அவர்களால் அடியோடு அழித்திருக்க முடியாது.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், ராணுவம் முகாமை விட்டு வெளியே வருவதில்லை. வந்தால் வெடி விழும். கண்டிப்பாக வெளியே வர வேண்டும் என்ற நிலை இருந்தால், சுமார் 20 வாகனங்களில் வருவார்கள். அவற்றில் கவச வாகனங்களும் இருக்கும்.  நான்கு புறமும் சுட்டுக்கொண்டே செல்வார்கள்.
இன்று யாழ்ப்பாணத்தில், சிறிய வீதிகளில்கூட சிங்கள ராணுவத்தினர் ஹாயாக சைக்கிளில் வலம்வருகிறார்கள் என்பது வைகோவுக்கு தெரியுமா?
யாழ்ப்பாண வீதிகளில் ராணுவத்தை தாக்குவதற்கு, விடுதலைப் புலிகளின் பெரும் படையணி ஒன்று வரத் தேவையில்லை.
ஒற்றை விடுதலைப் புலியும், ஒரேயொரு கண்ணிவெடியும் போதும்.
அந்த ‘குறைந்தபட்ச’  சாத்தியத்துக்கான பயம்கூட இல்லாமல், இன்று, யாழ்ப்பாண பகுதி ராணுவ தளபதி உதய பெரேரா, யாழ்ப்பாண பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டிகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திரும்புகிறார் என்பதன் அர்த்தம் என்ன என்பதுகூட புரியாதவரா வைகோ?
ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் செயின்ட்ஜோன்ஸ் பள்ளியில் ராணுவத்தினரை அழைத்து, பள்ளி டீமுடன் கிரிக்கெட் போட்டி நடத்தியதற்காக, அந்த பள்ளி முதல்வர் ஆனந்தராஜாவை போட்டுத் தள்ளியவர்கள் விடுதலைப் புலிகள்.
இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில், ராணுவம் விருந்தினர்களாக அழைக்கப்படாத விளையாட்டு போட்டிகளே இல்லை என்பதை-
மேலுலகில் இருந்து பிரபாகரனும், முதல்வர் ஆனந்தராஜாவும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பள்ளிக்கூட மைதானங்களில் பங்கர் (பதுங்குழி) அமைத்து அதில் மறைந்திருந்தா ராணுவத்தினர் விளையாட்டு போட்டிகளை பார்க்கிறார்கள்? வேப்ப மர நிழலில், காற்றோட்டமாக சேர் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் சார்!
முன்பொரு காலத்தில் இலங்கை தொடர்பான விஷயங்கள் மீடியாக்களில் வந்தால்தான் தெரிந்துகொள்ள முடியும். இன்று சமூக இணையதளங்களில் விலாவாரியாக போட்டோக்களுடன் வருவதை, சராசரி விருதுநகர் வாக்காளனால் படிக்க முடியும்.
வைகோ சொல்வதற்கும், நிஜத்துக்கும் இடையேயுள்ள பெரிய வேறுபாட்டை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.
அதுதான், வைகோவை அவர்கள் நம்பவில்லை.
“பிரபாகரன் படையெடுத்து வரப் போகிறார், அவருடன் வர தயாராகிறது பெரும் சேனை” என்ற கப்சாக்களை விட்டுவிட்டு, குறைந்தபட்சம், பிரபாகரன் வீரனாக யுத்தமுனையில் மரணமடைந்தார் என்று சொன்னாலாவது, வைகோ மீது மரியாதை ஏற்படும்.
சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் ராணுவ பயிற்சி கொடுப்பதை வைகோ எதிர்க்கிறார். சிங்கள ராணுவத்துக்கு இங்கே பயிற்சி கொடுக்காவிட்டால், பாகிஸ்தானும், சீனாவும் பயிற்சி கொடுக்க காத்திருக்கிறார்கள்.
அவர்களை அங்கே விட்டால், இந்திய தேசிய நலனுக்கு எவ்வளவு ஆபத்து என்பதை வைகோ புரிந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.
ஆனால், சராசரி விருதுநகர் வாக்காளனுக்கு புரிந்திருக்கிறது.
சரி. சிங்கள ராணுவம் இந்தியாவில் பயிற்சி பெற்றுப் போய் யாரை தாக்க போகிறார்கள்? விடுதலைப் புலிகளையா? இந்த பயிற்சி இல்லாமலேயே, அவர்கள் விடுதலைப் புலிகளை அழித்து விட்டார்கள்.
இப்போது வெளிநாட்டு புலிகளின் உபயத்தில் தோன்றுகிறார்களே, புதிய விடுதலைப்புலிகள் தலைவர்கள், கோபி, அப்பன், அந்த மாஸ்டர், இந்த மாஸ்டர், என்றெல்லாம்…  அவர்களை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தேவையா?
எறும்பை நசுக்குவது போல நசுக்கி விடுவார்கள் சார்.
இலங்கையை சீனா பக்கம் சாய விடாமல் இருக்க மத்திய அரசு தலையால் கரணம் போட்டு முயன்றுகொண்டு இருக்கிறது. அதை தமிழகத்தில் கெடுக்கிறார்கள் இவர்கள் என்பது, சராசரி விருதுநகர் வாக்காளனுக்கும் புரிந்திருக்கிறது.
நாம் மத்திய அரசு என்பது, இதுவரை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மட்டுமல்ல,  இன்று முதல் ஆட்சி செய்யப் போகும் பா.ஜ.க. அரசும்தான்.  அவர்களும்தான், இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப் போகிறார்கள். ஈழம் அமைவதை ஆதரிக்க போவதில்லை. அதை, அவர்களுக்கு பிரசாரம் செய்த வைகோ பார்க்கத்தான் போகிறார்.
காரணம், அது தேசிய நலன், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம்.
இலங்கை, மன்னார் அருகே சீனா ஆப்சர்வேஷன் டவர் அமைத்தாலோ, பருத்தித்துறையில் SIGINT மையம் அமைத்தாலோ என்னாகும் என்பது வைகோவுக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். விருதுநகர் வாக்காளனுக்கும்கூட தெரிந்திருக்கிறது!
தமிழகம் வரும் சிங்கள பக்தர்களுக்கு கல்லாபிஷேகம் செய்த வீரப் படையணிகளில் ம.தி.மு.க.வினரும் உண்டு.
அந்த சிங்களவர் 80 சதவீதம் வசிக்கும் நாட்டில், தமிழர்களை அம்போ என்று விட்டுவிட்டு, இங்கே கல்லெறிந்தால், அங்கே என்ன நடக்கலாம் என்பது வைகோவுக்கு தெரியுமா?
இலங்கை தமிழனை விடுங்கள். இலங்கையில் நாலு புறமும் சிங்கள மக்கள் வசிக்கும் மாகாணங்களால் சூழப்பட்ட மத்திய மாகாணத்தில் எத்தனை மில்லியன் இந்திய வம்சாவளி தமிழர்கள் வசிக்கிறார்கள் என்பது வைகோவுக்கு தெரியுமா?
இவர்களில் பெரும்பாலானோர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, மானாமதுரை பகுதிகளில் இருந்து இலங்கையில் குடியேறியவர்கள்.
தமிழகத்தில் எறியப்படும் ஒரு கல், அங்கே பத்து கற்களாக போய் விழுந்தால் என்னாகும் என்பது வைகோவுக்கு தெரியுமா?
விருதுநகர் வாக்காளர்களுக்கு தெரிந்திருக்கிறது.
இலங்கை விவகாரத்தை வைத்து வைகோ அரசியல் செய்ய விரும்பினால், நேர்மையாக செய்து பார்க்கட்டும்.  பிரபாகரனோ, விடுதலைப் புலிகளோ இல்லை அங்கும் இல்லை, எங்கும் இல்லை (கீபோர்ட் புலிகளையும், காகிதப் புலிகளையும் கணக்கில் எடுக்கவில்லை).
ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் உள்ளார்கள்.
அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு ஏதாவது உதவி செய்து பாருங்கள்.  குறைந்த பட்சம் ம.தி.மு.க. சார்பில் 10 சைக்கிளாவது வாங்கி கொடுத்து பாருங்கள். அவர்களில் சிலருக்கு, தமிழகத்தில் கல்வி பயில ம.தி.மு.க. சார்பில் ஸ்காலர்ஷிப் கொடுத்து பாருங்கள். இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா இலங்கையில் செய்யும் வேலைத் திட்டங்களை அதிகரிக்க சொல்லி போராட்டம் நடத்திப் பாருங்கள்.
பிரபாகரனை நீங்கள் மதிப்பவராக இருந்தால், நாளை (18-ம் தேதி) அவர் உயிரிழந்த தினம். வீர வணக்கமோ, கண்ணீர் அஞ்சலியோ செய்து பாருங்கள்.
இப்படி நேர்மையாக ஏதாவது செய்துவிட்டு, அடுத்த தேர்தலில் போட்டியிட்டு பாருங்கள். நீங்கள் ஜெயிக்காவிட்டால்,  நாம் எழுதுவதையே விட்டு விடுகிறோம்.
வைகோ அவர்களே, மக்கள் வாக்களிக்கவில்லை என்று சொல்லாதீர்கள், மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் ஜெயிப்பீர்கள். Better luck next time.
viruvirupu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக