செவ்வாய், 20 மே, 2014

அழகிரி மீண்டும் தி.மு.க.,வில் சேருவதை தட்டுக்க ஸ்டாலின் ராஜினாமா நாடகம் !

தேர்தல் தோல்விக்கு பின், தி.மு.க.,வில் திடீர் ராஜினாமா செய்திகள்
பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் பொருளாளர், இளைஞரணி செயலர் போன்ற பதவிகளில் இருந்து ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக, நேற்று முன்தினம் வெளியான செய்தியைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக, நேற்று செய்தி வெளியானது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 35 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க.,வால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தலித் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் அமைத்திருந்த கூட்டணியும், தி.மு.க.,வுக்கு கை கொடுக்கவில்லை. மிக மோசமான ஒரு தோல்வியை, 91க்கு பின் இக்கட்சி சந்தித்துள்ளது.
அழகிரி நீக்கத்திற்கு பின், ஸ்டாலினின் முழு கட்டுப்பாட்டுக்குள் கட்சி வந்துள்ள நிலையில், தி.மு.க., சந்தித்த தேர்தல் இது. இந்த தேர்தல் முடிவு தான், ஸ்டாலினின் தலைமைக்கு வலு சேர்க்கும் சக்தியாக அமையும் என்று, தேர்தலுக்கு முன் கணிக்கப்பட்டது. அதன் காரணமாகவே, இந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர்கள் தோற்க வேண்டும் என்று, அழகிரி கங்கணம் கட்டி வேலை செய்தார். அதற்கு ஏற்றார் போல முடிவு வந்துள்ளது. எதிர்பாராமல் கிடைத்த இந்த வாய்ப்பை, அழகிரி சரியாக பயன்படுத்தி, காய் நகர்த்த துவங்கியுள்ளார். ஸ்டாலின் தலைமைக்கு எதிராக, அழகிரி மீண்டும் தொடுத்த கணை, கட்சி தலைமையை யோசிக்க வைத்ததோ இல்லியோ, கட்சியினரை உசுப்பி விட்டுள்ளது என, தெரிகிறது. 'ஸ்டாலினை சுற்றியுள்ள ஜால்ரா கோஷ்டிகளையும், துதி பாடும் மாவட்டச் செயலர்களையும் தூக்கி எறிந்தால் தான் தி.மு.க., உருப்படும்' என்ற, அழகிரியின் கருத்துக்கு, கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. இதை முறியடிக்கவும், அழகிரியை நெருங்க விடாமல் தடுக்கவும், ஸ்டாலின் எடுத்த முடிவு தான், திடீர் ராஜினாமா என்கின்றனர். அதுவும், அவரது ஆதரவு மாவட்டச் செயலர் ஒருவர் செய்த உபதேசத்தின் விளைவு என்றும், தி.மு.க.,வினர் குறைபட்டுக் கொள்கின்றனர்.

நல்ல வாய்ப்பு:

'கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, ஸ்டாலின் செய்த தீவிரமான தேர்தல் பணிக்கு, வெற்றி கிடைக்கா விட்டாலும், கட்சியினர் மத்தியில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதை மழுங்கடிக்கும் விதமாக, அவரது ராஜினாமா நடவடிக்கை அமைந்து விட்டது' என்று, அவரது கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:
இந்த தோல்வி கூட கட்சிக்கு நல்லது தான். கட்சியை ஒழுங்குபடுத்த கிடைத்த நல்ல வாய்ப்பு இது. இதை சரியாக பயன்படுத்தி, கட்சியை சீரமைக்க வேண்டும். இந்த தேர்தலில் ஏன் தோல்வியைத் தழுவினோம் என்பதை, உயர் நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்டி தான் ஆராய வேண்டியது இல்லை. என்ன காரணம் என்பது எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். கட்சி மீது அழியாத ஊழல் கறையை ஏற்படுத்தியவருக்கு எதற்காக, 'சீட்' கொடுக்க வேண்டும்? அவரும் எதற்காக போட்டியிட முன்வர வேண்டும்? 'என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூபித்து விட்டு, தேர்தலை சந்திக்கிறேன்' என, அவர் கூறியிருந்தால், கட்சிக்கு இமேஜ் கூடியிருக்கும். அதை செய்யுமாறு அவருக்கு சிபாரிசு செய்தவர், வலியுறுத்தி இருக்க வேண்டும்.

தொய்வு ஏற்பட்டது:

மாவட்டச் செயலர்கள் பலர் தாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற ரீதியில் செயல்படுகின்றனர்; அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், எல்லா மாவட்டங்களிலும் எதிர் கோஷ்டிகள் உருவாகி விட்டன. இதனால், தேர்தல் பணியில் பெரிய தொய்வு ஏற்பட்டது. அதை சரி செய்ய, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததும் தோல்விக்கு முக்கிய காரணம். இதை விட முக்கியமான ஒரு காரணம், இந்த தேர்தலில் தான், தி.மு.க., ஓட்டுகளை மாற்று கட்சியினரால், விலைக்கு வாங்க முடிந்துள்ளது. கன்னியாகுமரியில், தி.மு.க., நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இது தான் காரணம். நிலைமை இப்படி இருக்கும்போது, ஸ்டாலினின் ராஜினாமா, 'பார்முலா' எந்த விதத்திலும் கட்சிக்கு உதவாது. கட்சி தலைமையால் முன்பு போல் செயல்பட முடியாது என்பதும், ஒட்டுமொத்த கட்சியும் அவரை நம்பி இருப்பதும், ஸ்டாலினுக்கு தெரிந்த ஒன்று. அதனால், ஸ்டாலின் நடத்திய இந்த ராஜினாமா விளையாட்டை, கட்சியினர் யாரும் ரசிக்கவில்லை. மேலும், அவர் ராஜினாமா கடிதம் எழுதிய தகவல் கிடைத்ததும், சென்னை வந்த மாவட்டச் செயலர்கள், அவரிடம் பேசியுள்ளனர். 'உங்களது உழைப்பு தான், கட்சியை இந்தளவுக்கு பாதுகாத்து வருகிறது' என்று கூறியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், 'நான் மட்டும் உழைத்து என்ன பலன்? மற்றவர்களும் உழைக்க வேண்டுமே' என, ஆதங்கத்தை கொட்டி உள்ளார். அவர் யாரை குறிப்பிட்டு சொன்னார் என்பதை அறிந்ததும், அவரது அருகில் இருந்தவர்கள், முகத்தை தொங்க போட்டுள்ளனர்.

அங்கேயே ராஜினாமா...:

அப்போது ஒரு மாவட்டச் செயலர், 'நீங்களே ராஜினாமா செய்யும்போது, நாங்கள் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் பதவி விலகுகிறோம்' எனக் கூறி, அங்கேயே ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். அதையே மற்றவர்களும் செய்தனர். இந்த தகவல் தெரிந்து, மற்ற மாவட்டச் செயலர்களும் கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர். ஒவ்வொரு, மா.செ.,வும் இரண்டு கடிதங்கள், ஒன்று ஸ்டாலினுக்கும், இன்னொரு பொதுச் செயலர் அன்பழகனுக்குமாக எழுதி, ஸ்டாலின் வீட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் கொடுத்துள்ளனர். இதுவரை, 15 பேர், கடிதம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த கடிதங்கள் அனைத்தும் அங்கேயே இருக்கின்றன. இதுவரை அறிவாலயம் வந்து சேரவில்லை. இவ்வாறு, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

இளைஞரணி நிர்வாகிகள் 75 சதவீதம் பேர் ராஜினாமா:

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சியின் பொருளாளர், இளைஞரணி மாநில செயலர் பதவியிலிருந்து விலகுவதாக, ஸ்டாலின் ராஜினாமா செய்ய முன் வந்தார். இதைத் தொடர்ந்து, இளைஞரணி மாநில துணை அமைப்பாளர்கள் ஐந்து பேர் மற்றும் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் உட்பட தமிழகம் முழுவதும், 75 சதவீதம் நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கூறி, ஸ்டாலின் வீட்டிற்கு பேக்ஸ் மூலம் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

அழகிரியை மீண்டும் சேர்க்க செல்வி வலியுறுத்தல்:

தி.மு.க.,விலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, ஸ்டாலின் சகோதரி செல்வி, அவரது கணவர் செல்வம், திரைப்பட இயக்குனர் அமிர்தம், ஸ்டாலின் சகோதரர் தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளனர். அழகிரியை மீண்டும், கட்சியில் சேர்ப்பதற்குரிய சூழல், கருணாநிதியின் குடும்பத்தில் உருவாகியிருந்தது. கருணாநிதியின் மனைவி தயாளு உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோபாலபுரம் வீட்டிற்கு நேற்று முன்தினம் திரும்பினார். தன் தாயார் தயாளுவை சந்திக்க, அழகிரி கோபாலபுரத்திற்கு வரும் போது, கருணாநிதியை சந்தித்து பேசவும் திட்டமிட்டிருந்தார். இந்த தகவல் ஸ்டாலின் தரப்பிற்கு தெரிய வந்ததும், அழகிரி மீண்டும் கட்சியில் சேருவதற்குரிய சூழ்நிலையை தடுக்க வேண்டும் என்பதற்காக, ராஜினாமா நாடகம் அரங்கேற்றப்பட்டது என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக