வெள்ளி, 30 மே, 2014

விஜயகாந்த் மோடியின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமலே சென்னை திரும்பினார்

டில்லியில் மூன்று நாட்கள் முகாமிட்டும், நினைத்த காரியம் நடக்காத நிலையில், விஜயகாந்த் சென்னை திரும்பியதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் கடுமையாக ஏமாற்றம் அடைந்துள்ளனர்.<தே.மு.தி.க.,வுக்கு லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எப்படி ஈடுகட்டுவது என்ற கவலை, கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.,வில் இணைவதே நல்லது என்ற கருத்து, அக்கட்சியினர் மத்தியில், பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்தெல்லாம் விஜயகாந்தும் நன்கு அறிந்திருப்பதால், அவர், கட்சியை காப்பாற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். அதற்காக, அவர் தன் மைத்துனர் சுதீஷ் அல்லது மனைவி பிரேமலதாவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, பா.ஜ., தரப்பிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என, திட்ட மிட்டு, அதற்காக காய் நகர்த்த ஆரம்பித்தார். இப்படி கிடைக்கும் எம்.பி., பதவியுடன் மத்திய அமைச்சர் பதவியையும் பெற்று விட்டால், அடுத்த சட்டசபை தேர்தல் வரையில், கட்சியை சேதமில்லாமல் கரை சேர்த்து விடலாம் என, மனக் கணக்குப் போட்டார்.
இதற்காக, கடந்த 26ம் தேதி, மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக, விஜயகாந்த் டில்லி சென்றார். ஆனால், தான் நினைத்து வந்த காரியம் எதுவும் நடக்காததால், அவர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்காமல், அங்குள்ள ஓட்டலிலேயே தங்கினர்.



அறிவுறுத்தல்:

பின், 27 மற்றும் 28ம் தேதிகளில் மோடியை சந்தித்து பேசி, தன் கோரிக்கையை முன் வைக்கலாம் என முயற்சித்தார். ஆனால், கடைசி வரையில் அவரால், மோடியை சந்திக்க முடியவில்லை. ஆனால், மாநில பிரச்னை தொடர்பாக பேச வேண்டும் என்றால், மோடிக்கு பதில், அவருக்கு கீழுள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படி, விஜயகாந்திடம் அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, விஜயகாந்த், விமானம் மூலம் சென்னை திரும்பினார். டில்லியில் விஜயகாந்த் மேற்கொண்ட முயற்சி, தோல்வியில் முடிவடைந்துள்ளதால், பெரும் நம்பிக்கையில் இருந்த அக்கட்சி நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

-- நமது சிறப்பு நிருபர் -- தினமலர்.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக