திங்கள், 5 மே, 2014

ஷரியா சட்டம் எதிரொலி: புரூனே சுல்தானின் ஓட்டல்களைப் புறக்கணிக்கும் பிரபலங்கள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான புரூனேயின் தலைவராக விளங்கும் சுல்தான் ஹஸ்ஸனால் பொல்கியா வெளியுலக தாக்கங்களில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பதாகக் கூறி அங்கு கடுமையான ஷரியா சட்டத்தினை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இதில் கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனை போன்ற கடுமையான சட்டங்களும் உண்டு. சுல்தானின் இந்த நடவடிக்கை இஸ்லாமியப் பெரும்பான்மையினைக் கொண்ட அந்த நாட்டிலேயே சமூக ஊடகங்களில் விமர்சனங்களைத் தோற்றுவித்தது. ஐ.நாவின் மனித உரிமைக் கழகம் உட்பட பல பிரிவுகளில் இருந்து சர்வதேசக் கண்டனங்களையும் இந்த முடிவு பெற்றது.
இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாக சுல்தானுக்கு சொந்தமான சங்கிலித் தொடர் ஹோட்டல்களான டோர்செஸ்டர் கலெக்சனுடனான தொடர்புகளைப் புறக்கணிக்க பல உலகப் பிரபலங்கள் முடிவு செய்துள்ளனர். இந்த ஹோட்டல் நிறுவனங்கள் எண்ணெய்வளம் மிக்க புரூனே நாட்டின் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் புரூனே முதலீட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆடம்பர ஹோட்டல்களின் கிளைகள் லண்டனிலும், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் உட்பட உலகின் பல பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் பிரான்சனின் பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான வர்ஜின் குழுமம் இந்த ஹோட்டல்களுடனான தங்கள் தொடர்பை முற்றிலும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அடிப்படை மனித உரிமைகளை புரூனே சுல்தான் மதித்து ஏற்கும்வரை அமெரிக்கா, லண்டன் உட்பட டோர்செஸ்டரின் எந்த ஹோட்டலிலும் தங்கள் நிறுவன ஊழியர்கள் தங்கமாட்டார்கள் என்று பிரான்சன் இந்த வார இறுதியில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவர்தவிர பிரபல நகைச்சுவை நடிகர் ஸ்டீபன் ஃபிரை, எலன் டி ஜெனரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷரோன் ஆஸ்போர்ன் போன்றோரும் தங்களின் புறக்கணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், அமெரிக்க பெண்ணிய பெரும்பான்மை அறக்கட்டளை, பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் தாங்கள் நடத்தும் விருது விழா நிகழ்ச்சியை ரத்து செய்வதாக குறிப்பிட்டுள்ளது. malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக