சனி, 3 மே, 2014

நதி நீர் பங்கீட்டில் கேரள அரசு ஓரவஞ்சனை!

பரம்பிக்குளம், சிறுவாணி திட்ட நதி நீர் பங்கீட்டில், கேரள அரசு ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்வதால், தமிழகத்தில் குடிநீர் திட்டங்களும், பாசன நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.தமிழக - கேரள அரசுகள் இடையே முல்லைப்பெரியாறு உள்ளிட்ட 13 நதிநீர் பங்கீட்டு பிரச்னைகள் உள்ளது. இதில், கோவை மாவட்டத்திலுள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் (பி.ஏ.பி.,), சிறுவாணி குடிநீர் திட்டங்களும் அடக்கம்.பி.ஏ.பி., திட்டம் தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையேயான ஒப்பந்தத்தில், 'கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்த பிறகே, பி.ஏ.பி., திட்டத்தில் ஆனைமலையாறு அணை கட்ட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு அணை கட்டினால், பி.ஏ.பி., திட்டத்தில் 2.8 டி.எம்.சி., தண்ணீர் கூடுதலாக கிடைக்கும்.ஆனால், கேரளாவில் இடைமலையாறு அணை கட்டி முடித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கும் நிலையிலும், கால்வாய் பணி நிலுவையுள்ளதாக கூறி, ஆனைமலையாறு அணை கட்ட அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டை போட்டுள்ளது. பி.ஏ.பி., திட்டத்தில், நல்லாறு அணை கட்ட தமிழக அரசு சார்பில் முயற்சித்தபோது, 'பாசன திட்ட ஒப்பந்தத்தில் இடம் பெறாத, நல்லாறு அணையை கட்ட அனுமதிக்க முடியாது' என கேரளா மறுத்து விட்டது.
பி.ஏ.பி., திட்டத்திலுள்ள பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் கேரள வனப்பகுதியில் இருப்பதாலும், அணை பரமாரிப்பு தமிழக பொதுப்பணித்துறை வசம் உள்ளது. இருந்தாலும், கேரள வனத்துக்குள் உள்ளதால், அங்கு பணியாற்றும் போலீசாருக்கு தமிழக அரசே சம்பளம் கொடுக்கிறது.


பி.ஏ.பி., திட்டத்தில் சிக்கல்



கேரளாவின் பரம்பிக்குளம் வனத்துக்கு, தமிழக எல்லைக்குள் வந்து, ஆனைமலை, டாப்சிலிப் வழித்தடம் வழியாக மட்டுமே செல்ல முடியும். கேரளாவின் இஷ்டம் போன்று நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, கேரள மாநிலத்துக்குள் இருந்தே பரம்பிக்குளம் வனத்துக்கு செல்ல, செமணாம்பதி, செம்மேடு வழியாக தூணக்கடவுக்கு பாதை அமைக்கும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக உள்ளது.பரம்பிக்குளத்துக்கு புதிதாக பாதை அமைக்கப்பட்டால், அணை பராமரிப்பை கேரளா வசம் ஒப்படைக்க வேண்டிய துர்பாக்கியம் உருவாகும் என, தமிழக அதிகாரிகள் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பரம்பிக்குளம் அணை தாரைவார்க்கப்பட்டால், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள நான்கு லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும்.


சிறுவாணி திட்டத்தில்...



கோவை மாவட்டத்தில் சிறுவாணி குடிநீர் திட்டத்துக்காக, தமிழக - கேரள அரசுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. சிறுவாணி பராமரிப்பு கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் வசமுள்ளது. சிறுவாணி அணை பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கோவை மாநகராட்சி மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.கேரள வனப்பகுதியில் இந்த அணை உள்ளதால், தமிழக வழியாக இந்த அணைப்பகுதிக்கு யாரையும் அனுமதிப்பதில்லை. தமிழக குடிநீர் வடிகால் வாரிய (சிறுவாணி திட்டம்) அதிகாரிகளும், கோவை மாநகராட்சி அதிகாரிகளும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், சிறுவாணி அணையை பலப்படுத்த வேண்டும், உயரத்தை கூட்ட வேண்டும் என்ற, தமிழகத்தின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. தற்போது, சிறுவாணி அணையில் நான்காவது வால்வில் இருந்து மூன்று மீட்டர் ஆழத்தில் உள்ள குழாயை அடைக்கப்போவதாக கேரள அதிகாரிகள், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


கேரளாவின் ஓரவஞ்சனை



சிறுவாணி அணையில் வறட்சி ஏற்படும் போது, நிரந்தர நீர் இருப்பில் இருக்கும் தண்ணீரை, குடிநீருக்காக எடுக்க கேரளா தடை விதிக்கிறது. கடந்தாண்டு இதேபோன்று பிரச்னை ஏற்பட்ட போது, சிறுவாணியில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டுமானால், பி.ஏ.பி., திட்டத்தில் ஆழியாறு அணை மூலம், கேரளாவுக்கு தினமும் 100 கனஅடி தண்ணீர் வீதம் 34 நாட்களுக்கு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. கோவை மக்களின் குடிநீர் பிரச்னையை கருத்தில் கொண்டு, சிறுவாணி தண்ணீருக்காக, ஆழியாறு அணையில் இருந்து மொத்தம் 300 மில்லியன் கனஅடி தண்ணீர் கேரளாவுக்கு வழங்கப்பட்டது. பி.ஏ.பி., திட்ட அணைகளில் வறட்சி ஏற்படும்போது, அதை பகிர்ந்து கொள்ள மறுக்கும் கேரள அரசு, சிறுவாணி குடிநீரை காரணம் காட்டி, மிரட்டியே தமிழக அரசை பணிய வைக்கிறது.பரம்பிக்குளம், சிறுவாணி திட்ட நதிநீர் பங்கீட்டில், கேரள அரசு ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இரு மாநில அமைச்சர்கள், முதல்வர்கள் மட்டத்தில் தொடர் பேச்சு நடத்த வேண்டும் என்பது தமிழக அதிகாரிகளின் மனக்குமுறலாக உள்ளது.

-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக