செவ்வாய், 6 மே, 2014

அடுத்த குறி ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு? கார் இறக்குமதி: ராமச்சந்திரா பல்கலை. அதிபர் கைது-


சென்னை: வெளிநாட்டு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக தமிழகத்தின் முக்கியப் புள்ளியும் ராமசந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வெங்கடாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இது திமுக பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதியைக் குறி வைத்து மத்திய அரசு நடத்தும் தாக்குதலாகவே கருதப்படுகிறது. காங்கிரசுடன் கூட்டணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தயாராக இருந்தாலும் அதைத் தீவிரமாக எதிர்த்து கூட்டணி ஏற்பட்டுவிடாமல் தடுத்தவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்டாலினின் நெருக்கடியால் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறிய மறுநாளே ஸ்டாலின், அவர் நண்பர் ராஜா சங்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் மீண்டும் திமுகவுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயன்றது. ஆனால், ஸ்டாலின், காங்கிரசின் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம் என்று அறிவித்ததோடு கூட்டணியே கிடையாது என்பதில் தீவிரமானார். இதையடுத்து கூட்டணிகள் இறுதியாகி தமிழகத்தில் தேர்தல் எல்லாம் முடிந்த பின்னர் மத்திய அரசு தனது வேலைகளை ஆரம்பித்தது. 2ஜி விவகாரத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் மீது சமீபத்தில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து இவர்கள் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இந் நிலையில் வெளிநாட்டு கார்கள் இறக்குமதி வழக்கை தீவிரப்படுத்தியுள்ளது சிபிஐ. கடந்த மார்ச் மாதம் ஸ்டாலின் வீட்டில் சோதனை நடந்த பின், தான் இறக்குமதி செய்த ஹம்மர் காரை சிபிஐயிடம் உதயநிதி ஒப்படைத்துவிட்டார். ஆனால், மே மாதம் அந்தக் காரை உதயநிதியிடம் திருப்பித் தந்துவிட்டது சிபிஐ. இந் நிலையில் இந்த விவகாரத்தில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்தை சிபிஐ கைது செய்துள்ளது. அடுத்தகட்டமாக உதயநிதியை சிபிஐ குறி வைக்கும் என்று தெரிகிறது. தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதமாக இருக்காது என்ற சூழல் நிலவும் நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக