வெள்ளி, 16 மே, 2014

பாராளுமன்ற தேர்தல் முடிவு இன்று மதியம் தெரியும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது

பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது யார்? என்பது இன்று மதியம் தெரிந்துவிடும்.
புதுடெல்லி,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய நமது நாட்டில் 16–வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது.
சாதனை ஓட்டுப்பதிவு
அத்துடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலுடன் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது.

 ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி கடந்த 12–ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்த இந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் தேசிய கட்சிகளின் சார்பில் 1,591 பேர், மாநில கட்சிகளின் சார்பில் 529 பேர், பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சார்பில் 2,897 பேர், சுயேச்சையாக 3,234 பேர் என மொத்தம் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 668 பேர் பெண்கள்.
இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. 81 கோடியே 40 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
‘நோட்டா வசதி’
இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம், சுமார் 18 லட்சம் மின்னணு ஓட்டு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக எந்தவொரு வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்ற வாக்காளர்களின் விருப்பத்தை ஓட்டாகப் பதிவு செய்ய ஏற்ற விதத்தில் மின்னணு ஓட்டு எந்திரங்களில் ‘நோட்டா’ பொத்தான் இணைக்கப்பட்டிருந்தது.
அதே போன்று சில தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் ஓட்டுப் பதிவு செய்து விட்டு, தங்கள் விருப்ப வேட்பாளருக்குத்தான் ஓட்டு பதிவு ஆகி உள்ளதா என பார்த்துத் தெரிந்து கொள்ள உடனடி அத்தாட்சி சீட்டு பெறும் வசதியும் சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
காலை 8 மணிக்கு தொடக்கம்
ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பெட்டிகளில் வைத்து மூடி முத்திரையிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பின்கீழ் வைக்கப்பட்டன. 16–ந் தேதி (இன்று) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி 543 பாராளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 989 மையங்களில் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
10 லட்சம் அரசு ஊழியர்கள் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 5 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள், அவர்களது அதிகாரப்பூர்வ ஏஜெண்டுகள் உடனிருக்க அனுமதி வழங்கப்படும்.
நுண்பார்வையாளர்கள்
வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 1,163 கண்காணிப்பு அதிகாரிகளை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர் என்று கூறப்படும் நுண் பார்வையாளர்களை நியமித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொறுப்பேற்றுள்ள தேர்தல் அதிகாரிகள், ஒவ்வொரு சுற்று முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட தாள்களை வேட்பாளர்களுக்கும் ஏஜெண்டுகளுக்கும் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தேர்தல் கமிஷனின் அறிவுரைப்படி, முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. 12 மணி நேரத்தில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வேட்பாளர்களின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆட்சி
543 தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதைத் தொடர்ந்து மத்திய புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியவரும். அதன்பின்னர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம், தேர்தல் கமிஷனின் கெசட்டில் வெளியிடப்படும். இந்த கெசட் அறிவிப்புத்தான் 16–வது மக்களவையை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கையின் தொடக்கம் ஆகும்.
தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணி புதிய அரசு அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை பின்னர் தொடங்கும்.
இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தியது. காங்கிரஸ் கட்சியோ அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மோடிக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக நிறுத்தாவிட்டாலும்கூட, காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை அவர்தான் தலைமை தாங்கி நடத்தினார்.
ஜனநாயகத்தின் வெற்றி
நரேந்திர மோடி, ராகுல் காந்தியுடன் ஆம்ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதுவரை வேறு எந்த தேர்தல்களிலும் ஈடுபடாத அளவுக்கு தலைவர்கள் தனிநபர் விமர்சனங்களிலும், வார்த்தை யுத்தத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால், அத்தனைக்கு மத்தியிலும் தேர்தல் எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது, ஜனநாயகத்தின் வெற்றி என பெருமிதப்பட வைத்தது. dailythanthi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக