செவ்வாய், 13 மே, 2014

மழை நீரை வீணடித்து விட்டு ஆயிரம் அடியில் நிலத்தடி நீர் தேடும் கொடுமை !

மழை நீர் சேகரிப்பு... இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் தராமல், விட்டதன் பலனை, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நன்றாக அனுபவித்தார்கள். விவசாய சாகுபடிக்கு உயிர் அளித்து வந்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கைவிட்ட போது, நிலத்தடி நீர் கைகொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், மழை நீரை சேகரிக்காமல், நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சியதால், நீர் மட்டம் அகல பாதாளத்திற்கு சென்று, விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்தது. ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் அமைத்தும், நாளொன்று நூறு லிட்டர் தண்ணீர் கூட கிடைக்காததால், பல ஆயிரம் தென்னை மரங்கள் கருகின. வாழ்வாதாரமாக இருந்த காய்கறி சாகுபடியை மேற்கொள்ள முடியாமல், விவசாயிகள் கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மழை குறித்து கவலை கொள்ளாத அனைத்து தரப்பினருக்கும், பருவமழை இல்லாமல், அணைகள் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிர்ச்சியளித்தது. இருக்கும் ஏரிகளையும் குளங்களையும் தூர் வாருவது ஆக்கிரமிப்புகளில் இருந்து காப்பாற்றுவது மிக மிக முக்கியம்.ஊற்று குட்டைகளை அமைப்பது அவசியம்.
கிராம உள்ளூர் நீராதாரங்களான போர்வெல்கள் வற்றி, குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை பல்வேறு கிராம மற்றும் நகர மக்களுக்கு ஏற்பட்டது. இவ்வாறு, இரு மாவட்டங்களில் விவசாயத்தை முடக்கி, குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உருவானதற்கு மரம் வளர்ப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு கண்டுகொள்ளப்படாதது முக்கிய காரணமாக தற்போது உணரப்படுகிறது.

வறட்சியிலிருந்த மக்களுக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த மழை ஆறுதல் அளித்தது. ஆனால், அது நிரந்தரமாக வறட்சியை போக்காது என்பது அனைத்து தரப்பினருக்கும் தெரியும். நெல், பருத்தி, கரும்பு, தென்னை, தானியப்பயிர்கள், காய்கறி பயிர்கள் என ஆண்டு முழுவதும் பசுமை காட்டிய விளைநிலங்கள் விலைக்கு விற்கப்பட்டு, லே-அவுட்களாக தொடர்ந்து மாறுவதை தடுக்க மழை நீர் சேகரிப்பு மட்டுமே கைகொடுக்கும். ஆண்டுதோறும் மழைப்பொழிவு குறைந்து வரும் நிலையில், மழை நீரை வீணடிக்காமல், விளைநிலங்களிலும், குடியிருப்புகளிலும் சேகரிக்க வேண்டியது அவசியம். விளைநிலங்களில், மழை நீரை சேகரிக்க, பண்ணைக்குட்டை அமைத்தல் உட்பட சில திட்டங்கள் இருந்தாலும், விவசாயிகளிடம் அத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை. கோடை மழை விரைவில் துவங்க உள்ள நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் கருதி, தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு இப்பணிகளில், அரசுத்துறைகள் உதவ வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அரிதாய் கிடைக்கும் மழை நீரை வீணடித்து விட்டு, பல ஆயிரம் அடியில், நிலத்தடி நீரை தேடும் வழக்கம் இம்முறை மாற்றப்பட வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக