வெள்ளி, 16 மே, 2014

கேரளா போலீசார் தமிழர்களை தொழில் செய்ய விடாமல் பொய் வழக்கு லஞ்சம்

தொழில் செய்யவிடாமல் கேரள மாநில போலீஸார் பொய் வழக்குகள்
பதிவு செய்வதாகவும், தங்களை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளத்தில் தொழில் செய்து வரும் தமிழர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோவை ராமநாத புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை திடீரெனக் கூடினர். இதில் பெரியாறு அணை, அட்டப்பாடி தமிழர்கள் பிரச்சினைகளை மையப் படுத்தி கொச்சி, கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு, சிட்டூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை தொழில் செய்ய விடாமல் கேரள போலீஸார் துன்புறுத்துகின்றனர். பொய் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்புவது, பணத்தைப் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவித்தனர். தங்களைப் பாது காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கோழிக்கோடு தமிழ் சங்கத்தின் செயலாளர் பழனிவேல் கூறியது: கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் செய்து 3 தலைமுறைகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். கேரள மக்களோடு இணைந்து சகோதர ஒற்றுமையுடன் வசிக்கும் எங்களுக்கு கேரள காவல் துறை மூலம் கடும் நெருக்கடி அளிக்கப் படுகிறது.
நிதி நிறுவனம் நடத்தி வரும் பலரை `ஆபரேஷன் குபேரா' என்ற பெயரில் பொய் வழக்குகளில் போலீஸார் கைது செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60 தமிழர்களை கைது செய்துள்ளனர். பெரியாறு அணை, அட்டப்பாடி தமிழர்கள் பிரச்சினைகளுக்குப் பின்னர் எங்கள் மீது காவல் துறையினரின் நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் அதிகமான இன்னல்களை அனுபவித்து வருகிறோம். மொழி சிறுபான்மை மக்களாகிய எங்களின் வீடுகள், கடைகள், அலுவலகங்கள் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கேரள காவல் துறையின் அத்துமீறல்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர் பாக தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம். மேலும், கேரள முதல்வரை சந்தித்து பாதுகாப்பு கோர உள் ளோம் என்றார்.
தவித்த உளவுப் பிரிவு
கோவையில் கேரள வாழ் தமிழர்கள் பாதுகாப்பு கோரி வியாழக்கிழமை திரண்டது உளவுப் பிரிவுக்கு முன்கூட்டியே தெரியவரவில்லை. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கூட்டம் நடைபெற உள்ளது குறித்து அறியாததால் கடைசி நேரத் தில் உளவுத் துறையினர் பரிதவிப் புக்குள்ளாகினர்.
ஆபரேஷன் குபேரா
திருவனந்தபுரம் சிவகிரி நகரில் வசித்து வந்த மனோகரன் ஆசாரி, அவரது மனைவி மகேஸ்வரி, மகன்கள் பிஜூ, ஷாஜூ, பிஜூவின் மனைவி கிருஸ்னேந்து ஆகிய 5 பேரும் மே 10-ம் தேதி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள போலீஸார் நடத்திய விசாரணையில், கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாததால், பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, ‘ஆபரேஷன் குபேரா’ என்ற பெயரில் மாநில அரசு கந்து வட்டி தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன்பேரில், கேரள போலீஸார் பல தமிழர்களை கைது செய்து வருகின்றனர். ஆபரேஷன் குபேராவில் நிதி நிறுவனம் நடத்தி வரும் தமிழர்களே அதிகம் கைது செய்யப்படுவதாக கேரள வாழ் தமிழக நிதி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.  tamil.thehindu.com/news/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக