வெள்ளி, 2 மே, 2014

2ஜி ஸ்பெக்ட்ரம் கனிமொழி, ராசாவுக்கு மீண்டும் சிக்கல்

2ஜி ஸ்பெக்ட்ரம்  வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கடந்த வாரம் தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட கனிமொழி, ராசா மற்றும் எட்டு பேருக்கு மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜாமீன் பெறுவது கடினமாக இருக்கும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நீதிபதிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்ட கனிமொழி 193 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். மேலும், இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐயாலும் இவர் விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கிற்காக 15 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த ராசா 2012ஆம் ஆண்டு மே மாதம் ஜாமீனில் வெளிவந்தார்.


சிறப்பு பிஎம்எல்ஏ(பண மோசடி தடுப்பு சட்டம்) நீதிமன்றம் நாளை இந்த குற்றப்பத்திரிகை குறித்த சம்மன்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுப்பக்கூடும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஜாமீன் வழங்கப்படவில்லையெனில் அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்படக்கூடும். இந்த சட்டத்தின் கீழ் ஜாமீன் பெறுவது கடினமாக இருக்கும் என்று ராஜேஸ்வர் சிங் என்ற வழக்கு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இந்த அமலாக்க குற்றப்பத்திரிகையில் டிபி ரியால்டியின் ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கே.கோயங்கா, ஆசிப் பல்வா, ராஜீவ் பி.அகர்வால், சினியுக் பிலிம்சின் கரீம் மொரானி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் மற்றும் அதன் இயக்குனர் பி.அமிர்தம் ஆகியோரும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கிற்கான விசாரணை தொடர்ந்து வருவதாகவும், தகுந்த ஆதாரங்கள் இருப்பின் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்கக்கூடும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக