திங்கள், 26 மே, 2014

மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன்.

தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை
கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர். < திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்..

தண்ணீர் தரத்தில் 120-வது இடம்
நம் உடம்புக்குத் தேவையான 18 மினரல்கள் தண்ணீரில் இருக்கு. இந்த 18 மினரல்களின் கூட்டு அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் குறைந்தபட்சம் 60 மில்லிகிராம், அதிகபட்சம் 500 மில்லிகிராம் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் மினரல்கள் இந்த விகிதத் தில் இருப்பதில்லை. 122 நாடு களின் தண்ணீர் பரிசோதனை செய்யப் பட்டது. தண்ணீர்த் தரத்தில் நம் நாடு 120-வது இடத்தில் இருப்பதாக ஐ.நா. சபை அறிக்கை தந்திருக்கிறது.
‘சுத்தமான’ நீரில்கூட மினரல் இல்லை
பாட்டில், ஆர்.ஓ. தண்ணீர் சுத்தமானது, சுகாதாரமானது என நினைக்கிறோம். அதில்கூட உப்பு அளவை குறைக்கிறார்களே தவிர, நம் உடம்புக்குத் தேவையான மினரல்கள் சரிவிகிதத்தில் இருப்ப தில்லை. அதனால்தான் நம் நாட்டில் வியாதிகள் பெருகுகிறது. எனக்கு 69 வயதாகிறது. இதுவரை ஆஸ்பத்திரிப் பக்கம் போனதில்லை. காரணம் மழைநீரைப் பயன்படுத்து வதுதான்.
நம் நாட்டில் ஆண்டுக்கு 42 நாள் மழைப் பொழிவு இருக்கிறது. மழை நீரை உரிய முறையில் சேமித்து வைத்தாலே போதும், குடிநீர்ப் பிரச்சினை வரவே வராது. 4 X 2 அடி சைஸில் ஃபைபர் தொட்டி ஒன்றை சன் ஷேடில் வைத்து அதற்குள் மணல், ஜல்லி, மரக்கரி போட்டு வைத்துவிட வேண்டும். இதுதான் மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர்.
மொட்டை மாடியில் விழும் மழைநீரை ஒரு குழாய் மூலம் ஃபில்ட்டரில் விட்டால் அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு கிரிஸ்டல் க்ளியரில் சுத்தமான தண்ணீர் கிடைத்துவிடும். மழை நீர் சேகரிப்பதற்காகவே கடைகளில் வெள்ளை நிறத் தொட்டிகள் கிடைக்கின்றன. தேவை யான கொள்ளளவுக்கு வாங்கி சமைய லறை லாஃப்டில் வைத்துவிட்டு ஃபில்ட்டருக்கும் இந்தத் தொட்டிக்கும் குழாய் இணைப்பு கொடுத்தால் போதும். வடிகட்டப்பட்ட மழைநீர் இந்த தொட்டியில் சேகரமாகும். சமையலறையில் தளத்துக்கு அடியில் பிரத்தியேகத் தொட்டி அமைத்தும் நீரைச் சேமிக்கலாம்.
10 ஆண்டுகளானாலும் கெடாது
வெளிக் காற்றும் வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால் 10 ஆண்டுகளானாலும் இந்த தண்ணீர் கெட்டுப்போகாது. என் வீட்டில் 2005-ம் ஆண்டில் சேமித்த தண்ணீரைத்தான் இப்போது பயன்படுத்தி வருகிறேன். நான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தில் ரூ.11 லட்சம் வரை செலவழித்து சோதனை செய்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளேன்.
சென்னையில் மட்டுமே 142 இடங்களில் என் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அளவில் 567 பேர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
லாப நோக்கின்றி சேவை நோக்கில் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை அமைத்துக் கொடுத்து வருகிறேன். ‘இதை அமைக்க மொத்தமாக ஆர்டர் கொடுத்தால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்?’ என்று அரசியல்வாதிகள் சிலர் பேரம் பேசினார்கள். இயற்கையின் கொடையை வைத்து இடைத்தரகர்கள் சம்பாதிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் மறுத்துவிட்டேன் என்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக