வியாழன், 1 மே, 2014

உலக பொருளாதாரம்: ஆறு ஆண்டுகளில் இந்தியா 10-லிருந்து 3-ஆவது இடம்: உலக வங்கி

உலக பொருளாதாரத்தில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்திலிருந்த இந்தியா, ஆறு ஆண்டுகளில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கு மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன.
இந்த வரிசையில் 2005-ஆம் ஆண்டு 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 2011-ஆம் ஆண்டு 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக உள்ளது.

2011-ஆம் ஆண்டு உலகம் முழுவதுமான பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவு குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட 12 நாடுகளில் 6 நாடுகள் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள்.
உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா, சீனா, ரஷியா, பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ ஆகிய நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் 32.3 சதவீதமும், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி ஆகிய உயர் வருவாய் கொண்ட நாடுகள் 32.9 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
இதில் இந்தியாவும் சீனாவும் மட்டும் உலக உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் பங்கு வகிக்கின்றன என அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக