வியாழன், 1 மே, 2014

நெருக்கடி நேரத்தில் ஜெ., கொடநாடு சென்று விட்டார் ! குண்டுவெடிப்பை தவிர்த்திருக்கலாம் 1

சென்னை: கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் உளவாளி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் சரியான விசாரணை நடத்தியிருந்தால் சென்னையில் இன்று நடந்த குண்டுவெடிப்பை தடுத்திருக்கலாம் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை குண்டு வெடித்தது. இதில் பெண் ஒருவர் பலியானார். தமிழகத்தை சேர்ந்தவர் யாரும் இதில் சிக்காமல் தப்பினர். 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் தனது கண்டனத்தில் இது கோழைத்தனமானது, தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியின் வெளிப்பாடே இந்த சம்பவம் என்று கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ், ம.தி.மு.க,. மற்றும் இடதுசாரி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், கூறியிருப்பதாவது; குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவனிடம் தமிழக போலீசார் உரிய விசாரணை நடத்தியிருந்தால் பெங்களூரு சதிதிட்டம் குறித்து முன்கூட்டியே தெரிந்து தவிர்த்திருக்கலாம். காவல்துறை என்னதான் திறமையாக பணியாற்றினாலும், காவல்துறையை வழிநடத்தி அறிவுரை வழங்க வேண்டிய நேரத்தில் முதல்வர் தலைநகரில் இல்லை. காவல்துறைக்கு பொறுப்பேற்றுள்ள ஜெ., கொடநாடு சென்று விட்டார். தமிழகத்தில் நெருக்கடி நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயிலில் கொள்ளை , வறட்சி, பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. தேர்தலுக்கு பின்னர் மின் வெட்டு அதிகரிப்பு இது பற்றியெல்லாம் கவலைப்படும் , செயல்படும் அரசு இருக்கிறதா ? முதல்வர் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் ரோசையா கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோ தனது கண்டனத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக யார் இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக