புதன், 9 ஏப்ரல், 2014

மம்தா பானர்ஜி ஆணையத்தின் உத்தரவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

ஆட்சியர் உள்ளிட்ட 7 அரசு அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை பணிந்தார்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்ய ஒப்புக் கொள்வதாகவும், தேர்தல் ஆணையம் புதிதாக 7 அதிகாரிகள் நியமித்ததை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு மாவட்ட ஆட்சியர், 4 காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 7 அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் தேர்தல் பணியில் இருந்து விடுவித்தும், அவர்களை இடமாற்றம் செய்தும், அவர்களுக்குப் பதிலாக வேறு அதிகாரிகளை நியமனம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்திருந்த அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது என்றும், இதற்காக தன்னை கைது செய்தாலும் கவலையில்லை, விளைவுகளை சந்திக்க தயார் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளர் செவ்வாய்க்கிழமை காலை கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "அதிகாரிகள் 7 பேரது இடமாற்றம் மற்றும் அவர்களுக்குப் பதிலாக அந்தப் பணியிடங்களில் வேறு அதிகாரிகள் நியமனம் ஆகிய முடிவுகள் மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ளன. எனவே அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மாலை நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், "மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் தனது பதிலைத் தெரிவித்துள்ளது. அதில், மேற்கு வங்க அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், இருப்பினும் அதனை ஏற்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் கெடு: ஏப்ரல் 7ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை (அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் மற்றும் அந்தப் பணியிடங்களில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி புதிய அதிகாரிகளை நியமித்தல் தொடர்பான உத்தரவு) புதன்கிழமை காலை 10 மணிக்குள் மேற்குவங்க அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது.
தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என்றும், எனவே அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.
கண்டனம்: இந்நிலையில் மம்தா பானர்ஜியின் நடவடிக்கையை மக்களவை முன்னாள் சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி உள்ளிட்டோரும் கண்டித்தனர்.
இதுகுறித்து சோம்நாத் சாட்டர்ஜி கருத்து தெரிவிக்கையில், "அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி வினோதமாகப் பேசுகிறார்.
இதனால் சட்ட சிக்கல்தான் உருவாகும். இந்த விவகாரம் தவறான முன்மாதிரியை ஏற்படுத்திவிடும். எனவே இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்' என்றார்.
பாஜக செய்தி தொடர்பாளர் சித்தார்த் நாத் சிங் கருத்து தெரிவிக்கையில், "தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற முதல்வர் மறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இந்த நடவடிக்கையின் மூலம், ஜனநாயகத்தின் மீது மம்தாவுக்கு நம்பிக்கை இல்லை என்பது நிரூபணமாகிறது. அராஜக ஆட்சியை ஏற்படுத்தவும், அரசியலமைப்பு சட்ட விதிகளை உடைத்தெறியவும் மம்தா முயற்சிக்கிறார்' என்று குற்றம்சாட்டினார்.
திடீர் முடிவு: அதிகாரிகள் இடமாற்ற விவகாரம் தனக்கு பெரும் சிக்கலாகி வருவதை உணர்ந்த மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்பதாக திடீரென அறிவித்தார்.
இதுதொடர்பாக துர்காபூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 7 புதிய அதிகாரிகளை நியமிக்கிறேன்.
இதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. மாநிலத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுடனும் எனக்கு நல்ல தொடர்பு உண்டு' என்றார்.
முடிவுக்கு வந்தது: அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தால், மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவியது. தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்பதாக மம்தா பானர்ஜி அறிவித்திருப்பதால், இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக