செவ்வாய், 15 ஏப்ரல், 2014

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்தது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற மனுதாரர் உள்பட திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் ஆர்வலர்கள். | படம்: ராஜீவ் பட்வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் திருநங்கைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை வழங்கி, திருநங்கைகளை சமூகத்தின் அங்கமாக கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநங்கைகளுக்கு தனி அடையாளத்தை அளிக்கும் வகையிலும், ஆண் - பெண்களுக்கு நிகராக சம உரிமை அளித்து, அவர்களை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கக் கோரி, தேசிய சட்ட உதவி ஆணையம் (NALSA) தொடர்ந்த பொதுநல வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில், திருநங்கைகளை அங்கீகரிக்கும் வகையில், 'ஆண்', 'பெண்' ஆகியவற்றுக்குப் பிறகு 'மூன்றாவது பாலினம்' என்ற தனிப் பிரிவை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'முற்கால சமூகத்தில் திருநங்கைகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் பறிக்கப்பட்டு, அவர்களை சமூகத்தில் துன்புறுத்தும் நிகழ்வுகளும், பாரபட்சம் காட்டும் நிலையும் இருக்கிறது. மேலும், காவல்துறையினரும் இவர்களை தவறான கண்ணோட்டத்துடன் நடத்துகின்றனர்' என்று உச்ச நீதிமன்றம் கவலை வெளியிட்டுள்ளது.
மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்படும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளில் உரிய உரிமையை பெறுவதற்கு தேவையான வழிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
அத்துடன், திருநங்கைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு அளிக்கவும், பொருளாதாரம் மற்றும் சமுகரீதியில் அவர்களை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருநங்கைகளின் நலனைக் காக்கும் வகையில், சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் அடுத்த ஆறு மாத காலத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், சமூகத்தில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள், மூன்றாவது பாலினத்தவராக கருதப்பட மாட்டார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள திருநங்கை உரிமை ஆர்வலர் லஷ்மி நாராயணன் த்ரிபாதி, "ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் மனித உரிமைகள் வழியாகவே மேம்படுகின்றது. தற்போது அந்த உரிமைகளைப் பெற வழிவகுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
"ஒவ்வொரு மனிதரும் தமது பாலினத்தைத் தேர்வு செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது. சாதி, மத, பாலினத்துக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்கிட அரசியலமைப்பு வழிவகுக்கிறது" என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, நம் சமூகத்தில் திருநங்கைகள் மிகவும் சிறுமைப்படுத்தப்படுவதாகவும், மருத்துவமனைகளில் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக