ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஒரு எம்.பி. வேஷ்டியைத் தூக்கி டிரவுசருக்குள் இருந்து பணத்தை எடுக்க.. மற்ற மாநில எம்.பி.,க்கள் முகம் சுளித்து,,'மத்ராஸி',,...

டில்லி நாடாளுமன்ற வளாகம்...முக்கியமான விவாதம் துவங்கப்போவதால், பல்வேறு கட்சி எம்.பி.,க்களும், புள்ளி விபரங்களைக் கையில் வைத்துக் கொண்டு பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்; தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு எம்.பி., தனது வேஷ்டியைத் தூக்கி, டிரவுசருக்குள் இருந்து பணத்தை எடுத்து, பலருக்கும் முன்பாக அதை சிலரிடம் வினியோகிக்கிறார்; சத்தமான பேச்சு வேறு.
மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சிலர் முகம் சுளித்து, 'யாரந்த ஆள்? எந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.,?' என்று கேட்கிறார்கள்...இந்திக்கார எம்.பி., ஒருவர் சொல்கிறார்; 'மத்ராஸி'. வட மாநிலத்துக்காரர்களுக்கு, தென் மாநிலத்துக்காரர்கள் என்றால், 'மத்ராஸி'தான்; அவர் சொன்ன அந்த நபர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., என்பது அவர்களுக்குத் தெரியாது; அந்தக் கட்சியின் சீனியர் எம்.பி., ஒருவர், 'இங்கே இப்படியெல்லாம் செய்யக்கூடாது; பேசக்கூடாது' என்று கண்டிக்கிறார்; ராஜ்யசபா என்பது, எத்தனை அறிஞர்கள், மேதாவிகளைக்கொண்ட சபை என்பதை உணராததன் விளைவு அது.


நமக்குப் பக்கத்திலேயே இருக்கும் அந்த எம்.பி.,யின் பிற நடவடிக்கைகளைக் கேட்டால், ஒரு காமெடி சீரியலே தயாரிக்கலாம்; மலைப்பாதையிலுள்ள பாறைகளில் 'புகழ்ப்பா' எழுதியே, இந்த பதவியைப் பிடித்தவர் அவர். தகுதியற்றவரை கட்சித்தலைமை தேர்வு செய்யலாம்; அதே தவறை மக்கள் செய்யலாமா?தமிழ்நாட்டிலுள்ள மற்ற எம்.பி.,க்களின் தகுதியும், திறமையும் எப்படி இருக்கிறது? தூரமாய்க் கூட போக வேண்டாம்; கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது இப்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பலரது கல்வித்தகுதி என்ன, அவர்களுக்குந் தெரிந்த மொழிகள் எத்தனை என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியுமா?. தெரியாது...என்பதே உண்மை.

கட்சி, சின்னம், வேட்பாளரின் சாதி...இவற்றைப் பார்த்தே ஓட்டுப் போடுவது, கொங்கு மண்டலத்து மக்களுக்கு வழக்கமாகப் போய் விட்டது; கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 'கொங்கு மண்டலத்து மக்கள், வேட்பாளரைக் காட்டிலும் கட்சியைப் பார்த்தே ஓட்டுப் போடுகின்றனர்' என்பது உறுதியாகியுள்ளது.படித்தவர்களும், பணக்காரர்களும் அதிகமாக இருக்கும் கொங்கு மண்ணில்தான், 10 வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசத்தெரியாதவர்களும், எம்.பி.,க்களாகிச் சென்றிருக்கிறார்கள்; பள்ளிப்படிப்பையே முடிக்காதவர்கள், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார்கள்; அவர்களுக்காவது தமிழில் பேசத்தெரிந்திருந்தால் போதுமென்று வைத்துக் கொள்ளலாம்; டில்லியில் சென்று லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பிரதிநிதியாகச் செல்வோர்க்கு இந்தி தெரியாவிட்டாலும் 'அட்லீஸ்ட்' ஆங்கிலம் தெரிய வேண்டாமா?

சபைகளில் பேசுவது மட்டுமின்றி, மத்திய அமைச்சர்கள், துறைச் செயலர்கள் போன்றோரைச் சந்தித்து, தொகுதிக்கான காரியங்களைச் செய்வதற்கும் மொழியறிவு அவசியம் என்பதை, இங்குள்ள வாக்காளர்கள் இதுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பெயருக்குப் பின்னால் பெரிதாக பட்டங்களை அடுக்கி வைத்துக் கொண்டால், அவர்களெல்லாம் படித்தவர்கள், அறிவாளிகளென்று முடிவு செய்து கொள்கின்றனர்.கோவையில் தற்போதுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலரும், அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் எம்.ஏ., எம்.பில்., என்று பேனர் மற்றும் சுவர் விளம்பரங்களில் எக்கச்சக்கமான பட்டங்களைப் போட்டுக் கொள்கின்றனர்; இந்த பட்டங்களில் எத்தனை, உண்மையாக, படித்து பெறப்பட்டது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.அதேபோல, பி.எல்., பி.எட்., என்று பட்டம் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலர், பொது அரங்கிலும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளைக் கூட சரியாக உச்சரிப்பதில்லை; இவர்கள் எப்படி, ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை புரிந்து, ஊருக்கோ, தொகுதிக்கோ திட்டங்களைக் கொண்டு வருவார்கள் என்பது கேள்விக்குறி.

படிக்காதவர்களெல்லாம் சாதிப்பதில்லையா என்ற கேள்வி எழலாம்; படித்தவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு சாதித்த 'படிக்காத மேதை' காமராசரை, இப்போதுள்ள அரசியல்வாதிகள் யாரோடும் ஒப்பிட முடியாது; அது மட்டுமின்றி, இப்போதுள்ள காலகட்டத்தில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவோர்க்கு, கல்வியறிவும், மொழியறிவும் இல்லாவிட்டால் பெரிதாய் எதையும் சாதிக்க முடியாது.இல்லாவிட்டால், கட்சித்தலைமை சொல்லுகிறபடி, நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்புவதைத் தவிர, இந்த எம்.பி.,க்களால், தொகுதிக்கு எந்த நன்மையையும் செய்து விட முடியாது என்பது நிச்சயம். ஜெயலலிதாவுக்கு நாலைந்து மொழிகள் தெரியும் என்கிறார்கள் அ.தி.மு.க.,வினர்; அவருக்குத் தெரியும்... அவர் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு...?

எனவே, வரும் தேர்தலிலாவது, கல்வித்தகுதி, மொழியறிவோடு சமூக அக்கறையும், தொலைநோக்கும் உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டியது, மக்களின் பொறுப்பாகும். பல துறையிலும் சாதிக்கும் கொங்கு மண்டலம், இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டுமென்றால், அதற்குத் தகுதியான, திறமையான மக்கள் பிரதிநிதிகள் தேவை; மாற்றி யோசிப்பார்களா மக்கள்? dinamalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக